August 23, 2010
ஒரே  அடிதடி, ரகளை,     அலுவலகத்தில்.  ஒரே  வருடத்தில்  ஆறு இட மாற்றங்கள். தொடக்கப் புள்ளி  தொழில்முறை  அசூயை. குழுவிற்குப் புதியவனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள சட்டாம்பிள்ளையின் தந்திர விளையாட்டு. கொஞ்சம் பொறுத்துப் பார்த்தேன். அதுவே என் ரத்தத்திற்கு அபூர்வம். உடல்  ஊதினால்  ரத்தம்  சூடாறிவிடுமா  என்ன? பல வருட சுய தம்பட்டத்தால் ஓங்கி நிற்பதான தோற்றம் காட்டிய உளுத்த கட்டிடம், ஒரே  ஒரு  பயன்  கவிதையின்  (இலக்கிய  கவிதை  அல்ல)  உதையில்  நொறுங்கி கற்குவியலானது.
சரி – தவறு,  என்கிற  மதிப்பீடு, எப்போதும்  சுயசார்புடையதுதானே. அப்போதைக்கு யார் ஆதாயம்? உப்புப்  பெறாத  ஒரு  கீழ்சாதிப்பயல் (நேரடி தேர்வில் வந்தவன் உயர்சாதி) கடைநிலை  குமாஸ்தாவில்  தொடங்கி,  சீருடை அணிபவன் (அப்பன்  இறந்ததால்  அனுதாபப்  பங்கில்  வேலையில்  சேர்ந்தவன். பட்டப்படிப்புகூட  முடிக்காத  பரதேசி). இவனெல்லாம்  என்ன  செய்துவிடமுடியும்  என்கிற  இளக்காரம். ஒன்பது ஜோடிக்கால்கள் உதைத்து வெளியேற்றின.
இந்த நாட்டின் சட்டங்கள் இன்னமும்கூட நடைமுறைப் பயன்பாட்டில் இருக்கின்றன.  நெருக்கடிகளே   நம்மை    நமக்கு   அறிமுகம்    செய்கின்றன.  நமது  சாத்தியங்களை  விரிவுபடுத்துகின்றன. நமது தேசத்தின் தலையாய சாதனை  என்றே  தகவலறியும்  சட்டத்தைக்கூற  வேண்டும், எட்டுக்கும் மேற்பட்ட  உயிர்  இழப்புகள்  என்றபோதிலும்.  கேட்ட  கேள்விகளும் கையகப்படுத்திய ஆவணங்களும் பெரிய தலைகளை தூங்கவிடாமல் அடித்துக்  கொண்டிருக்கின்றன. சட்டம்  நீதி  அமைச்சரவையின்  கீழ்வரும் மத்திய கண்காணிப்பு ஆணையம் இன்றைய CMG சூழலில் அனைவருக்கும் பரிச்சயமான  ஒன்றுதான். CVC ஐ  தலைமையாகக்  கொண்டு  Public Interest Disclosure and Protection to Persons Making the Disclosure Bill, 2010 நடப்பு மழைக்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரின் அங்கீகாரத்திற்காகக் காத்திருக்கிறது.
மனிதர்கள் தம்மை எதுவாக நம்புகிறார்களோ அதுவாக ஆகின்றனர். எனக்கு இது சாத்தியமில்லை என்கிற நினைப்பே என்னை இயலாதவனாக ஆக்கிவிடுகிறது. ஆனால்  என்னால்  முடியும்  என்கிற  நம்பிக்கையால் அதற்கான  ஆற்றலை  அடைகிறேன், தொடக்கத்தில்  அது  என்னிடம் இல்லாதிருந்த போதிலும் – மஹாத்மா
இப்போது  விடுப்பில்  இருக்கிறேன்.  ஒவ்வொரு  ஆறு  மாதத்திற்கும்  15  நாள் ஈட்டிய விடுப்பு  காலாவதியாகும்படி  எப்போதும் அலுவலக வேலையாகவே பத்து  வருடங்களாய்க்  கிடந்ததன்  பயன்,  கிட்டத்தட்ட   300 + 250   நாட்களுக்கும்  மேலான  விடுப்பின் சேமிப்பு.
கிடாவை  வளர்த்துதான்  வெட்டவேண்டும் – கோணங்கி  சொன்னதாக வலையத்தில் படித்தது.
கிடைக்கும்  முதல்  தருணத்தில்  ஒரே  போடு. போட்டுத்தள்ள,  தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
யார் கிடா யார் வெட்டுக்கத்தி என்பதைக் காலம்தான் தீர்மானிக்கப்போகிறது.
இப்போது யோசித்துப் பார்த்தால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளான காலங்களில் மட்டுமே கதைகள் எழுதியிருக்கிறேன். 30 வருடங்களில் 3 தொகுதிகள் 29 கதைகள். எழுதாமல் இருந்த ஆண்டுகள் 15 ஒரு நாவல்கூட எழுதவில்லை. 4 நாவல்கள் 2 குறுநாவல்கள் 18 கதைகள் தலைப்புகள் மட்டும் வைத்துக்கொண்டு திரிந்துகொண்டு இருக்கிறேன். இவற்றையெல்லாம்  எழுதி  அவை  நன்றாகவேறு இருந்து.. நடக்கிற காரியமா? இதில் ஜோசியன் வேறு சொல்லிவிட்டான் அதிகபட்சம் இன்னும் 5 லிருந்து 10 ஆண்டுகள்.
உடற்பயிற்சி சாதனங்களை வாங்கி வைத்தாலே உடல் இளைத்துவிடும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்பது மிக தாமதமாகவே புரிந்தது. கதைப்பெயர்  பட்டியலுக்கு  என்று  விருதுகூட  கேட்கவில்லை. எனக்கென்று ஒரு இடம்கூடவா இல்லை. இப்படியே போய்விட்டால் என்ற கலக்கத்திற்கு ஆளாகி  விடுப்பிலிருக்கிற  பொழுதை, யாருக்கேனும்  உபயோகமாய் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று ஏற்கெனவே அலுவலக சமரில் எனது ஏவுகணைத்  தளமாய்  தொடங்கி, சட்ட  சிக்கல்கள்  வரக்கூடுமென எதிர்பார்த்து முடக்கிப் போட்டிருந்த இந்த வலைப்பூவை சினிமா அறிமுகமாக,  முடுக்கிவிட்டேன்.
மாமல்லன்  சார், உங்களுக்கு  விருப்பமான  டிரைவ்  இன்  மூடப்பட்டதன் விளைவாக நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன்…வாசித்து பாருங்கள்…
ஹெய்மத் திரைப்படம் பற்றி நான் எழுதி இருந்ததை படித்துவிட்டு இப்படியொரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்தக் கதையின் url ல்லையும் கொடுத்திருந்தார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக சமாதியில் இருந்த நான், ஊருக்குள் வந்ததும், ஒருவன்  என்னைத் தெரிந்து  வைத்திருக்கிறானே, ஒரு  எழுத்தாளனாக நானே என்னை மறந்துவிட்ட நிலையிலும் என்று பூரித்தேன்.
இன்றைய, அடிப்படை  எழுத்தாள  லட்சணமான,  அவருக்கு  இந்த வருடத்தில்  மட்டும்  27 புத்தகம்  வெளியாகி இருக்கிறது. இவர்  1200 பக்கங்கள்கொண்ட  நாவலை  முந்தாநாள்  முடித்த  கையோடு  2417  பக்க நாவலொன்றைத்  தீட்டத்  தொடங்கி  பாதியில்  இருக்கிறார். நேரலை பரபரப்பில்  பயந்து, இவர்களோடு  சவலைப் பிள்ளையான  நம்மால் போட்டிபோட்டுக் கரையேற முடியாது, எனினும் ஏதோ சின்ன கச்சேரியாக 15 – 20 வருடங்கள் முன் பார்த்த சினிமா பற்றி எழுதிப் பார்ப்பது, சமாளிக்க வழி தெரியாவிட்டால் இருக்கவே இருக்கிறது சமாதியின் செளக்கியம். அலுவலகத்தின் அடிதடி.
தற்கால லக்கிய அளவுகோல் கொண்டு, என்னை அளந்து கொண்டேன். கருவறையிலிருந்து   முடி   மட்டும்தான்  வெளித் தெரிகிறது.  இன்னும் தலையே வெளிவந்த பாடில்லை என்ற நிலை.
அட  நம்மையும்  ஒருவர்,  குறைந்தது  பெயரளவிலேனும்  தெரிந்து வைத்திருக்கிறாரே,  என்கிற  நன்னியோடு  அவரது url ல்லை சொடுக்கினேன். பொதுவாக இதைச் செய்பவனல்ல.
அவர் வலைப்பூவில் எழுதியிருந்தது, இதை எழுதத்தூண்டியது. அதற்கு எனது  முதற்கண்  நன்றி.  அவரை  விமர்சனம்  என்ற  பெயரில் காயப்படுத்திவிடக் கூடாது, அதுவும்  எழுதியிருப்பதை  வைத்துப் பார்க்கையில், ஆரம்ப  வாசக  நிலையைக்கூடத்  தாண்டாதவர் போலத்தோன்றுவதால் அவர் பெயரை இங்கு தவிர்க்கிறேன். அவர் போல ஏகப்பட்டபேர் வலைப் பூக்களில் இருப்பதனால் அவர்களுக்கு எந்த வகையிலேனும் உபயோகமாய் இருக்கூடும் என்ற அற்ப நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.