April 4, 2018

11.01.2018ஆம் தேதி காலச்சுவடு ஒப்பந்தம், புத்தகக் கண்காட்சியில் என் முன் நீட்டப்பட்டபோது, புனைவு என்னும் புதிர் வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்தாறு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அதில் இருந்த eBook உரிமை குறித்துக் கேள்வி எழுப்பினேன்.

இப்படித்தான் எல்லா எழுத்தாளர்களும் கையொப்பமிடுகின்றனர். ஒருவர்கூட இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததில்லை என்று கூறினார்.

ஏழு வருடங்களுக்கு eBook உரிமை காலச்சுவடுக்கு மட்டுமே, என்பது மட்டுமின்றி, அதற்குக் கிடைக்கிற ராயல்டியில் எழுத்தாளருக்கு 33% என்று இருந்தது.

ஏன் இப்படி என்றேன்.

இதில் நாங்கள் மட்டுமே இல்லை. இன்னொரு ஏஜென்சியும் இருக்கிறது. அவர்கள்தாம் இதைக் கன்வர்ட் செய்து அமேஸானுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொடுக்கிறார்கள், அவர்களுக்கு அதற்கான பங்கைக் கொடுக்கவேண்டும் என்றார்.

கன்வெர்ஷன் என்பது ஒருமுறைதானே. அதற்கேன், மாதாமாதம் அமேஸான் தருகிற ராயல்டியில் பங்கு கொடுக்கவேண்டும் என்றேன். போகவும் முதலில் கன்வெர்ஷனே எதற்கு. வெறும் வேர்ட் பைலே போதுமென்கிற அமேஸானுக்கு, நான் காலச்சுவடுக்கு அனுப்பிய வேர்ட் பைலே கையில் இருக்கையில், இதை வைத்து காலச்சுவடு புக்காக ஆக்கிய pdfஐத் திரும்ப எவனோ ஒருவன் ஏன் வேர்ட் பைலாக ஆக்கவேண்டும். அவனுக்கு ஏன் என் ராயல்டியிலிருந்து மாதாமாதம் நான் பங்கு கொடுக்கவேண்டும். அதிலும் உங்களுக்குக் கொடுப்பதே அனாவசியம் எனும்போது என்றேன். 

இல்லை. உலகம் பூராவும் இது இப்படித்தான் என்றார். இருவரும் அவரவர் நிலையில் இருந்தபடிக்கே, இருவரும் கையெழுத்துப் போட்டாலும், அன்றிரவே என் கட்டுரைகளை நானும் 17ஆம் தேதியன்று ‘அவர்’ கதைகளும் என் கட்டுரைகளுமான புத்தகத்தைக் காலச்சுவடு கண்ணனுமாக eBookகாக அமேஸானில் ஏற்றுவதில் முடிந்தது அந்த 11ஆம் தேதி வாக்குவாதம்.

அதன்பிறகு நேரிலும் பேஸ்புக்கிலுமாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் புக்ஃபேர் நடக்கும்போதே, இதை அநியாயம்  அக்கிரமம் என்று, காலச்சுவடு ஸ்டாலில் வைத்தே எல்லோர் முன்னிலையிலும் பேஸ்புக்கிலுமாக நான் குத்திக்கொண்டே இருந்தேன். கூடவே காலச்சுவடுக்குக் கன்வர்ட் செய்து கொடுக்கிற ஏஜென்ஸி யாரென்று தேடிக்கொண்டே இருந்தேன். 

காலச்சுவடு வியாபார ரகஸியங்கள் லேசுப்பட்டவையல்ல. சாதாரணமாக நீங்கள் POD எங்கே அடிக்கிறீர்கள் என்று கேட்டால் காலச்சுவடு அலுவலக ஊழியர்களிடமிருந்து ரெப்ரோ என்று பதில் வரும். அது எங்கே இருக்கிறது என்று கேட்டால், அது எங்கையோ ராயபுரத்துலைருக்குனு நினைக்கிறேன் சார் என்று அடுத்த பதில் வரும். போன் நம்பர் கேட்டால், இரண்டு மூன்றுமுறை கேட்டபின்பே கிடைக்கும். சரி நெட்டில் தேடினோமென்றால் ப்ரிண்டிங் டிவிசன் OMRல் இருந்தாலும் ஆபீஸ் மும்பையில் இருப்பது தெரியவரும். பெ. முருகனுக்கு இணையாக அலுவலக ஊழியருக்கு 500 ஷேர் கொடுத்திருக்கிறாரென்றால் சும்மாவா. 

ஏற்கெனவே எழுதியதைப்போல், அடவி முரளி மூலமாகத் தற்செயலாகத் தெரியவந்தது, காலச்சுவடு தன் POD புத்தகங்களை அச்சடிக்குமிடம் கோபாலபுரத்தில் உள்ளது என்பது. எல்லோருக்கும் பயன்படட்டுமே என்று உடனே அதை இணையத்தில் எழுதிப்போட்டேன். நமக்குத் தெரியவந்தால் அது நாட்டுடைமை என்று. 

இப்படியாக வெறும் eBook உரிமம் எனக்கே எனக்கா, இல்லை அதில் பெரும்பங்கு உனக்கா என்கிற கருத்து வேறுபாடாகத் தொடங்கியது, நாற்பதே நாட்களில் ஒப்பந்த ரத்து-மறுப்புவரை போயிற்று. கையெழுத்துப் போட்டுவிட்டாய் எனவே அதுவும் முடியாது என்கிற காலச்சுவடு எம்டியின் ஆணவமே இன்று காலச்சுவடின் பேலன்ஸ் ஷீட்டைப் பொதுவெளியில் அலசப்படும் கந்தல்துணியாக ஆக்கிவிட்டது. கண்ணனென்ன சொல்வது, சுந்தர ராமசாமிக்கே தெரியுமே என் இளவயதிலிருந்தே நான் ஒரு சமரசமற்ற சமரன் என்பது. 

மணியனின் இதயம் பேசுகிறது பத்திரிகை 83லோ 84கிலோ ஒரு தீபாவளிக்கு, எல்லா எழுத்தாளர்களிடமும் தங்களுக்குப் பிடித்த நாவல் எது என்று கேட்டு, அவர்கள் பேட்டியை அல்ல, அவர்களது ஸ்டாம்ப் சைஸ் போட்டோவையும் அதர்கடியில் அவர்களுக்குப் பிடித்ததாக அவர்கள் குறிப்பிட்ட அவர்களது நாவலின் பெயரையும் வெளியிட்டிருந்தது. அவன் இலக்கியவாதிகளை ஜென்மத்தில் சீந்தாதவன். அவன் கேட்டு இவர்கள் கதைகொடுத்து அது வெளிவந்திருந்தாலும்கூடப் பரவாயில்லை நல்ல எழுத்து நாஉ பேருக்குப் போய்ச் சேர்ந்ததே என்று மகிழ்ந்திருக்கலாம். ஆனால் இவ்வலவு முக்கியமான எழுத்தாளர்களாய் இருந்துகொண்டு இவர்கள் இப்படிச் செய்யலாம என்று எனக்குக் கடுமையான கோபம். இதைக் கண்டித்து எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள் என்று ஞானரதத்தில் பெட்டிச் செய்தியாக எழுதினேன். இவர்கள் அவமானத்தில் முகம் வசிவக்கவெண்டும் என்பதற்காகவே, எழுத்தாளர்களின் பெயர்களை, இலக்கியவாதியும் வெகுஜன எழுத்தாளருமாக, வேண்டுமென்றே அடுத்தடுத்து வருமாறு வரிசைப்படுத்தி எழுதினேன். சு. சமுத்திரம் அசோகமித்திரன் (சமுத்திரம் அசோகமித்திரனை உதைக்க வேண்டும் என்று சொன்னவர்) அகிலன் சுந்தர ராமசாமி (அகிலனுக்கு சுந்தர ராமசாமி, சித்திரப்பாவை மலக்கிடங்கு என்று சொல்லுமளவுக்கு உயிருக்குயிரான நண்பர்) இந்துமதி சா. கந்தசாமி (கந்தசாமி, இந்துமதி சிவசங்கரி எழுத்துக்களைக் கரப்பான்பூச்சியைப் போல் மதிக்கும் கசடதபற வல்லினம்) என்பதால் வேண்டுமென்றே அடுத்தடுத்து வரிசைப்படுத்தி, இவர்களைப் போட்டோ தடுக்கி பயில்வான்கள் என்று என் 23-24ஆவது வயதில் எழுதியவன் நான். அதற்காக இவர்கள் என்னை கோபித்துக் கொள்ளவுமில்லை, இதனால் இவர்கள் மீது எனக்கு அன்பில்லை என்று சொல்வதற்குமில்லை. அளவுக்கு மீறிய காதல் இருக்கப்போய்த்தானே இவர்கள் போய் இப்படிச் சறுக்கலாமா என்கிற கோபம் வருகிறது. மாலன் பாலகுமாரன் போன்ற மாமாக்கள் மீது கோபப்பட என்ன இருக்கிறது. கண்ணனின் பேஸ்புக் போஸ்ட்டுகளுக்கு லைக் போடுவதால் பெங்களூர் யானைகள் முகாமுக்குப் போகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பது சாத்தியம். அதற்காகக் காலச்சுவடு புக்கு போடுவதால், திருடித் தொடர் எழுதி மாட்டிக்கொண்டு வழிந்த மாலன் இந்த ஜென்மத்தில் இலக்கியவாதியாகிவிட முடியுமா. 

வியாபாரிக்கு இருக்கவே கூடாத குணம் ‘தான்’ என்கிற மமதை. அதுதான், ஒருவர் கண்ணுக்கும் படாமல் உள்ளே மூடிவைக்கப்பட்டிருந்த காலச்சுவடின் சாக்கடையை முச்சந்தியில் கொட்டவைத்துவிட்டது. இதற்கு பெருச்சாளி என்ன செய்யும். பாவம் அது தேமே என்று சாக்கடையில் நீந்தி விளையாடத் தொடங்கிவிட்டது. 

கொஞ்ச நாள் முன்பு, வண்ணநிலவனின் ஒரு புத்தகத்தை eBookகாகக் கொண்டுவருவதற்காக pdf பைல் கிடைக்குமா என்று தேடி கிழக்கு அலுவலகம் செல்ல நேர்ந்தது. அதற்கு முன்பாகவே, காலச்சுவடு தன் புத்தகங்களை Book Connect என்கிற நிறுவனம் மூலம் eBook ஆக்குகிறது என்கிற விஷயம் தெரியவந்திருந்தது. Book Connectஐ கூகுளில் தேடிப்பார்த்து கிடைத்த எண்ணுக்கு அடித்தால் யாரும் எடுக்கவில்லை. யாரும் எடுக்காததற்குக் காரனம் நான் முயன்றது ஞாயிறு என்பதால்கூட இருக்கலாம். 

வண்ணநிலவனுக்காகப் போனவநுக்கு, பத்ரியிடம் விலாவாரியாகப் பேசுகிற வாய்ப்பு, தற்செயலாய் கிடைத்தது. ஆப் த ரெகார்ட் என்று சொன்னவற்றைத் தவிர்த்து மீதி அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். 

தமிழில் அமேஸானுடன் நேரடி ஒப்பந்தத்தில் இருப்போர் கிழக்கும் பெங்களூர் நிறுவனமான புஸ்தகாவும். கிழக்கு மட்டுமே பதிப்பாளர். புஸ்தகா ஒருங்கிணைப்பாளர். காலச்சுவடு, இதுபோல யார் மூலமாகவோதான் தங்கள் புத்தகங்களை eBookகாக மாற்றி வெளியிடுகிறார்கள் என்றார். 

எழுத்தாளர் நேரடியாக அமேஸானில் வெளியிடுகிற kdp.amazon.comக்கும் பதிப்பகம் வெளியிடுவதற்குமான அடிப்படை வேறுபாடு, பதிப்பகம் epubஆக வெளியிடவேண்டும். எழுத்தாளருக்கு word ஃபைலே போதுமானது. 

எழுத்தாளருக்கு 70% ராயல்டி என்றிருக்கையில், அமேஸானுடன் நேரடி ஒப்பந்தத்தில் இருக்கும் கிழக்குக்கு 45% தான். 

என்னது என்னைவிடக் கம்மியா 

இல்லை. இதைத்தான் சிங்கப்பூரிலிருந்து வந்த பிரதிநிதிகளிடம் கேட்டேன். ஏம்பா 70% எழுத்தாளருக்கு என்றும் எனக்கு 45% என்றும் இருந்தால் எழுத்தாளர் ஏன் என்னிடம் வரவேண்டும். அவர் நேரடியாக kdpக்குப் போவதுதானே புத்திசாலித்தனம் என்று. இதற்கு, அமேஸான்காரர்கள் இப்படிக் கூறினாரகள் என்று விளக்கினார் பத்ரி.

அமேஸான் eBookல் இரண்டு வகை உள்ளது. ஒன்று eBook டவுன்லோட் ராயல்டி என்றதும்,

மற்றது பேஜ் ரீட்ஸ் ராயல்டி என்றேன்எ.

ஆமாம். அமேஸானின் வருட சந்தாதாரர்கள் இலவசமாகப் படிக்கிற பக்கங்களுக்கான ராயல்டி என்றார்.

எனக்கு டவுன்லோடில், ராயல்டியாக 1100 கிடைத்தால் பேஜ் ரீடில் 400தான் கிடைக்கிறது என்று நான் கூறினேன். 

அங்குதான் நேரடி ஒப்பந்தத்தில் இருப்பதன் பலன் இருக்கிறது. டவுன்லோடுக்குக் கிடைக்கிற ராயல்டி என்னவோ பேஜ் ரீடும் டவுன்லோடாகவே கருதப்பட்டு, கிழக்குக்கு ராயல்டி கணக்கிடப்படும் என்றார்.

அதாவது, கிழக்கு வெளியிட்டுள்ள ஜெயமோகன் பா. ராகவன் புத்தகங்களுக்கு, அவை டவுன்லோடு செய்யப்பட்டால் என்ன ராயல்டி கிடைக்கிறதோ அதே ராயல்டியே, அவர்களது புத்தகங்களை அமேஸான் சந்தாதாரர் படிக்கும் பேஜ் ரீடுக்கும் கிடைக்கும். 

அப்படின்னா என் 70%ஐவிட உங்க 45% ஜாஸ்தியா.

ஆமாம். கிழக்குக்குக் கிடைக்கிற 45%ல கிழக்கும் எழுத்தாளரும் பாதி தாதி அதாவது ஆளுக்கு 22.5% எடுத்துக்குறோம். ஆனா அந்த 22.5%ஏ உங்களுக்குக் கிடைக்கிற 70%ஐவிட ஜாஸ்தியா இருக்கும். 

அப்ப அமேஸானோட நேரடியா ஒப்பந்தம் போட்டுக்காதவங்க, இடைநிலை ஆளோட ஒப்பந்தம் போட்டுக்கிட்டு இருக்கிற காலச்சுவடு மாதிரி பதிப்பகம் அவங்களுக்குக் குடுத்தது போக மீதியை அவங்க எழுத்தாளர்களோட பங்கிட்டுக்கிறதாலதான் என் புனைவு என்னும் புதிர் ஒப்பந்தத்துல 33%னு இருக்கா. 

இருக்கலாம் 

காலச்சுவடு யார் மூலமா அமேஸானோட ஒப்பந்தத்துல இருக்காங்க 

அது தெரியல 

கிழக்கு மூலம் அமேஸான் போகும்போது ஜெயமோகனுக்கும் பா. ராகவனுக்கும் கிடக்கிற 22.5%ஐவிட அவங்க, என்னை மாதிரி நேரடியா அமேஸானுக்குப் போனா குறைவாதான் கிடைக்கும்னு சொல்றீங்களா 

நிச்சயமா 

காலச்சுவடு மூலமா போற எழுத்தாளர்களுக்கு 45% /3 = 15%னா நேரடியா போயிருக்கிற எனக்குக் கிடைக்கிறதைவிட ஜாஸ்தியா கிடைக்குமா கம்மியா கிடைக்குமா 

3/1 பங்கை ஒப்பிட்டா, உங்களோட தனி ராயல்டி, ஈக்வெலா இருக்கலாம் இல்லாட்டி, அவங்களைவிட உங்களுக்குக் கொஞ்சம்போல கூட இருக்கலாம். ஆனா இன்னையதேதிக்கு அச்சு புக்கு வித்து கிழக்குக்குக் கிடைக்கிறது மாசம் 40 லட்சம்னா eBook வித்துக் கிடைக்கிறது 4 லட்சம்கூட இல்லேங்கிறதுதான் நிதர்சனம். ஆனா இன்னும் சில வருஷங்கள்ல நல்லா டெவலப் ஆகும். அப்பவும் பிரிண்ட் புக் இருந்துக்கிட்டுதான் இருக்கும்.

உங்க ஒப்பந்தம் எப்படியானது 

காலச்சுவடைவிட இன்னும் இறுக்கமானது. ஆனா யாராவது வெளில போறேன்னு சொன்னா, தாராளமா போய்க்கங்கன்னுடுவேன். சண்டையெல்லாம் போட்டுக்கொண்டிருக்க மாட்டேன். அது என் இயல்பிலேயே இல்லை. 

சரி. உங்களிடம் eBookக்கிற்கு மட்டும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடியுமா 

சிரித்தபடி பத்ரி சொன்னார் இல்லை முடியாது என்று.

ஏன்

இதை, கிழக்குல நாங்க எல்லோரும் கூடி விவாதித்து, மற்ற பதிப்பகம் வெளியிட்டிருக்கும் அச்சுப் புத்தகத்தின் eBookகை மட்டும் கிழக்கு வெளியிட்டால் வேண்டாத மனக்கசப்பு வரும். எனவே வெளியிடுவது என்று வந்தால், அச்சுப்புத்தகமும் eBookகும் சேர்த்து வெளியிடுவோம் இல்லையென்றால் இரண்டும் வேண்டாம் என்கிற முடிவை எடுத்திருக்கிறோம் என்றார்.

இந்தப் பேச்சு இன்னும் கொஞ்சம் கசமுசாக்களாகப் போய் முடிந்தது. புத்தகம் எனக்கு ஒரு விற்பனைப் பண்டம் என்று சொல்கிற ஆள், வியாபாரத்தில் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறார் என்கிற வியப்புதான் ஏற்பட்டது. அவரது விற்பனையும் ராயல்டியும், அவர்களது பேலன்ஸ் ஷீட்டில், ஒப்பந்தப்படி பக்காவாக 10%ஆக டேலியாவைதையும் பாராட்டி வைத்தேன். 

கிழக்கோடு எனக்கு எந்தவித ஒட்டுறவும் வர சாத்தியமில்லை. ஏனென்றால் என் புத்தகம் கிழக்கில் விற்காது. அங்கே ஜெயமோகன் விற்பதே எனக்குச் சற்று ஆச்சரியம்தான். 

தமிழ் இலக்கியத்தை ரக்ஷிக்கவும் உலகளாவி பரப்பவும் தனது இன்னுயிரையும் ஈயத் தயாராக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் காலச்சுவடு அதிபரான கனவான் சுந்தரம், பேலன்ஸ் ஷீட்டிலேகூட ராயல்டி கொடுக்காத இவ்வளவு பெரிய எத்தனாக இருந்துகொண்டு நேர்மையாய் ராயல்டி கொடுக்கிறார் என்கிற இமேஜை எப்படி தமிழ்கூறு நல்லுலகில் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பது பிரமிப்பாக இருந்தது. சுந்தர ராமசாமியின் மகன் என்கிற பேக்கிரவுண்டு இல்லாதிருந்தால் இந்த பில்டிங்குக்கு இந்த அளவுக்கு பேஸ்மெண்ட் கிடைத்திருக்குமா என்பதே அடிப்படைக் கேள்வி. அதை வைத்துக் கொண்டு இப்படியா நடந்துகொள்வது என்பது அடுத்த கேள்வி.

இவ்வளவுக்குப் பிறகு, eBook விஷயத்தில் கண்ணன் ஏன் இவ்ளவு முரண்டுபிடிக்க வேண்டும் என்கிற விஷயம் குடைந்துகொண்டே இருந்தது. ஏனெனில், கிழக்கின் பாப்புலர் ஸ்டார் ஒருவரின் புத்தகம் அச்சில் வெளியாக இருக்கையில் அவர் பத்ரியிடம், இதில் சில பகுதிகளை நானே eBookகாக வெளியிட்டுவிட்டேன். மீதியையும் நானே வெளியிடலாம் என்று நினைக்கிறேன் எனவே நீங்கள் இந்தப் புத்தகத்தை மட்டும் அமேஸானில் eBookகாக வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கு. பத்ரியின் உடனடி பதில் ஓகே.

உண்மையில் பார்த்தால் இது, ஒரு செகண்டில் முடிகிற இவ்வளவு சிறிய விஷயம்தான். காசு காசு என்று பறக்கிறவர்களுக்கு இது சாத்தியமில்லை. விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக முடித்துவிட்டுப் போவதற்கு பதிலாய், 20 வருட உழைப்பு 25 வருட சரித்திரம் எங்க அப்பாவோட 50 வருஷ ஹிஸ்டரி ஜாகரபி என்று வரட்டுத் தனமாகப் பேசி, உன் புக்கிலிருக்குக் கதையெல்லாம் என்னுடையவை என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாய் அல்பத்தனமாய்க் கூவி, என்னைப்போன்ற ஒரு விடாக்கண்டன் கொடாக்கண்டனிடம் மாட்டி, இப்படிச் சிந்திச் சீரழிய வேண்டியதுதான். எனனைச் சாக்கடை பெருசாச்சாளி என்று திட்டுவதாலெல்லாம் என் வாயைப் பூட்டிவிட முடியாது. வசவுகள் என்னை இன்னும் உற்சாகமாகத்தான் செயல்பட வைக்கும் என்பதே வரலாறு. காலச்சுவடு மீது நான் தொடுத்திருக்கும் இந்தப் போரில் நான் முன்வைத்திருக்கும் ஆதாராங்கள், வரலாற்று ஆவணங்களாய் இந்த மாமல்லன்.காம் தளத்தில் மட்டுமின்றி eBookகாகவும் மாறும். நான் போனபின்பும் இவை இருந்துகொண்டிருக்கும். ஏனென்றால் எனக்கு இதை எழுதுவதும் இலக்கிய காரியம்தான். போகவும் எந்தக் கோட்டையையும் பிடிக்கிற கனவேதும் எனக்கில்லை. 

காலச்சுவடு கண்ணன் என்கிற வியாபார காந்தம் சுத்தமான விளக்கெண்ணெய் என்பதுதான் இந்த eBook விஷயத்தில் நிரூபணமாகியிருக்கிறது. கண்ணனுக்கு எந்த அளவுக்கு இலக்கியம் தெரியுமோ அதைவிடவும் குறைவாகத்தான் வியாபாரமும் தெரிகிறது என்பதற்கு இப்போது நான் சொல்லப்போவதே போதுமானது.

ஒப்பந்தத்தில் அந்த எழுத்தாளர் eBookகுக்கும் சேர்த்துக் கையெழுத்துப் போட்டிருந்தாலும் கிழக்கு பத்ரி ஏன் உடனே ஒப்புக்கொண்டார். அது வெறும் நல்லத்தனம் மட்டுமே இல்லை. சிங்கபூர்காரன் சொன்னது உண்மைதனா எனத் தெரிந்துகொள்ள அருமையான வாய்ப்பு அது. அவன் சொன்னதைப்போல் பதிப்பகம், அமேஸானுடன் நேரடியாக ஒப்பந்தத்தில் இருந்தால் கிடைப்பதைவிட நிஜமாகவே ஒரு எழுத்தாளர் நேரடியாக அமேஸான் கிண்டிலில் eBook வெளியிட்டால் லாபமில்லை என்று தெரியவந்தால் அதைவிட ஒரு பதிப்பகத்துக்கு வேறு என்ன லாபம் வேண்டும். அடுத்த புத்தகத்தில் இந்தப் பரிசோதனையில் அந்த எழுத்தாளர் இறங்குவாரா. இருவருக்குமே எது உண்மை என்று எளிதாகத் தெரிந்துவிடுமே.

ஆனால் காலச்சுவடு கண்ணனுக்கு இதெல்லாம் தெரியுமா அல்லது இதையெல்லாம் தெரிந்துகொள்ளத் தேவைப்படும் அறிவோ திறந்த மனமோ இருக்கிறது என்பதற்கான கூறாவது கண்ணனிடம் வெளிப்பட்டு இருக்கிறதா. எத்தனை எழுத்தாளர்கள் சொந்தமாக eBook வெளியிட்டுவிடப் போகிறார்கள். விருப்பப்படுகிறவர்களுக்கு மட்டுமவது கொடேன் என்றால். இல்லை ஒருவருக்குக் கொடுத்தால் அது முன்மாதிரியாகிவிடும் என்பதே எனக்கு பதிலாகக் கிடைத்தது. நீக்குப்போக்கில்லாதவன் நல்ல வியாபாரியாக இருப்பது சாத்தியமே இல்லை என்பதைப் பெரிய விலை கொடுத்து என் விஷயத்தில் தெரிந்துகொண்டிருக்கிறார், வியாபாரத்திலேயே ஊறிய குடும்பத்தின் வித்து. தான்தான் தமிழ் இலக்கிய பதிப்புத்துறையின் டான் கோர்லியோனே என்கிற தொனியில், என்னை டீல் செய்தது என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்த இரண்டு மூன்று மாதங்களில் புரிந்திருக்கிறது.

மாமல்லன் எஃபெக்ட் துரிதமாகவே வேலை செய்யத் தொடங்கியிருப்பதன்  விளைவுதான், கடல்புறத்தில் நாவலை யாராவது படமாகவோ சீரியலாகவோ எடுக்க முன்வந்தால் தனக்கு உரிமையில் 50% கிடைக்காமல் போய்விடுமே என்று தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் பல் ஊடக வடிவம் என்கிற வார்த்தைகளை வண்ணநிலவன் ஒப்பந்தத்திலிருந்து நீக்க கண்ணன் ஒப்புக்கொண்டிருப்பது. அடுத்த எழுத்தாளர் eBook உரிமையையும் நீக்கி ஒப்பந்தத்தை அடித்துத் திருத்திக் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகு வருபவர், அச்சுப் புத்தகத்தைத் தமிழ்ல அடிக்கிற உரிமையை மட்டும் உனக்கு வெச்சிக்கப்பா, அது போதும் என்று சொல்ல முன்வரவேண்டும். அதுதான் எழுத்தாளர்களுக்கு அழகு. 

இதற்கு முன்பாகவே, இப்போதைக்கு eBookகில் பெரிய ரெவின்யூ இல்லை என்று 11,01,2018லேயே கூறினாலும் கண்ணன் eBook உரிமையில் இவ்வளவு பிடிவாதம் பிடிக்க வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்கிற எண்ணம் என்னைக் குடைந்துகொண்டே இருந்தது.

ஓரிரு வாரங்கள் முன்பாக சேமித்து வைத்திருந்த Book Connect எண்ணை அழுத்தினேன். 

எதிர்முனையில் வெள்ளைக்காரன் ஆங்கிலம். ஒருசில வார்த்தை சுய அறிகமுகத்துக்குப் பின் தமிழுக்குத் தாவினால் எதிர்முனையும் ஆங்கில சாயலுடன்கூடிய தமிழில் பேசத் தொடங்கிற்று. 

நான் ஒரு எழுத்தாளன் என் புத்தகங்களை, அமேஸானில் வெளியிட eBookகாகப் பண்ணித்தர முடியுமா 

நாங்கள் ePubஆகப் பண்ணித் தருகிறோம். ஆனால் விற்பனை மார்க்கெட்டிங் எல்லாம் இப்போது செய்வதில்லை.

இல்லை நான் ஏற்கெனவே அமேஸானில் eBookகாக ஏற்றியிருக்கிறேன். ஆனால் அமேஸானுடன் நேரடி ஒப்பந்தத்தில் இருப்பவர்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டால் இதைவிட அதிக ராயல்டி கிடைக்கும் என்று கேள்விப்பட்டேன் அதனால்தான் கேட்டேன் 

ePubஆக மாற்றித் தருவதைக்கூட காலச்சுவடுக்கு மட்டுமே செய்து தருகிறோம். இதைக்கூட நாங்களாக மார்க்கெட் செய்வதில்லை. கேட்பவர்களுக்குச் செய்து தருகிறோம். உங்களிடம் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன

நான்கு. இவற்றை ePubஆக மாற்றித்தர எவ்வளவு ஆகும்

யுனிகோடில் இருக்கும் word பைலை ePubஆக மாற்ற அச்சுப் புத்தகத்தின் ஒருபக்க சைஸுக்கு ₹10. 200 பக்க புத்தகத்துக்கு ₹2,000. தமிழில் டைப்படிப்பதையும் நாங்களே செய்தாகவேண்டுமென்றால் இன்னும் கொஞ்சம் கூட ஆகும்.

pdfலிருந்து ePubஆக மாற்ற எவ்வளவு ஆகும்

இல்லை நாங்கள் அப்படிச் செய்வதில்லை.

பதிப்பகமாக இருந்தால், அமேஸானில் ePubஆக ஏற்றியே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் காரணமாக, அதை மாற்றி மட்டும் வாங்கிக் கொண்டு, காலச்சுவடு தானாகவே தநது eBookகுகளை அப்லோட் பண்ணினால், Book Connectக்கு ஒரு செலவோடு முடிந்துவிடும். அதைவிட்டுவிட்டு ஆயுளுக்கும் அவர்களுக்கு ஒரு பங்கைக் கொடுத்துவிட்டு, காலச்சுவடு தன் எழுத்தாளர்களின் வயிற்றில் 33% என்று அடிப்பது எந்த விதத்தில் நியாயம். 

அமேஸான் எல்லா பதிப்பகத்துடனும் நேரடியாக ஒப்பந்தம் போடவும் வருவதில்லை. குறைந்தது 400- 450 புத்தகங்களையாவது அந்தப் பதிப்பகம் வெளியிட்டிருக்க வெண்டும். கிழக்கு அதற்குத் தகுதி பெறுவதாலேயே அவர்களுடன் நேரடி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. கண்ணனே சொல்லிக்கொள்வதைப் போல காலச்சுவடுதான் 650க்கும் மேற்பட்ட டைட்டில்களில் புத்தகங்களை வைத்திருக்கிறதே. அப்புறம் என்ன பிரச்சனை. கிழக்கு போலவே நேரடியாக அமேஸானுடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டு வெளியிட வேண்டியதுதானே. அமேஸான் கொடுக்கிற 45%ல் கண்ணனுக்கும் 50%ஆக 22.5% காலச்சுவடு எழுத்தாளர்களுக்கும் 22.5% கிடைக்குமே. அதைவிட்டுவிட்டு Book Connect மூலமாக ஏன் இதைs செய்துகொண்டிருக்கிறார்.

சரி இவ்வளவு நோனாவட்டம் பிடிக்கிற நீ ஏன் செய்யக்கூடாது என்று புத்திசாலித்தனமாக என்னிடமே திருப்பிக் கேட்காதீர்கள். நான் 4 புக்கல்லவா போட்டிருக்கிறேன். என்னிடம் அவன் எப்படி ஒப்பந்தம் போடுவான். போதாக்குறைக்கு என்னைப்போன்ற ஏழை எழுத்தாளர்களுக்கு செலவு வைத்துக் கொடுமைப்படுத்தக்கூடாது என்பதால்தானே அய்யா அமேஸான் நீ வேர்ட் பைலில் கொடுத்தாலே போதும் என்கிறான்.

அப்புறம் என்ன மயித்துக்கு நீ இந்த Book Connectடிடம் போய் பேசிக்கொண்டிருந்தாய் என்கிறீர்களா, நம்ம இலக்கிய வியாபார காந்தம் எவ்வளவு தூரத்துக்கு, அசலான காந்தம் என்று நேரடியாகத் தெரிந்துகொள்ள வேவு பர்த்தது, காலச்சுவடு அதிபர் என்று சீட்டு நிறைந்து உட்கார்ந்து கம்பீரமாய் போஸ்கொடுக்கும் இந்த நபர், பெருமாள்முருகன்போல எவனாவது கோடியில் ஒருவனுக்கு, RSSகாரர்களால், விபரீத ராஜயோகமாக மொழிபெயர்ப்புகளில் குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் அவன் முதுகில் பச்சைக்குதிரை ஏறி 50% ராயல்டியைப் பிடுங்கிக்கொள்ளத்தான் லாயக்கு என்பதை ஐயம்திரிபற தெரிந்துகொண்டு உங்களுக்குச் சொல்லத்தான் வேறெதற்கு. 

புத்தகம் என்பது எனக்கு ஒரு விற்பனைப் பண்டம் என்றவர் கிழக்கு பத்ரி என்று பேஸ்புக்கில் யாரோ சொல்லியிருந்ததைப் பார்த்தபோது, அகிலனுக்கு எதிராக சுந்தர ராமசாமி எழுதிய கீழ்க்கண்ட வரிகள்தாம் நினைவுக்கு வந்தன.

“இந்தப் போலி முகங்கள் ரிக்கார்டு டான்சஸுக்கு இல்லை. இங்கு ‘கலைஞி’ தொடையைக் காட்டுகிறபோது தொடைதான் தெரிகிறதே தவிர சங்கராச்சாரியாரின் படம் அங்கு ஒட்டப்பட்டிருப்பதில்லை. தனது தரத்தைப் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் எளிமை இங்கு இருக்கிறது.”

போலி முகங்கள் – சந்தர்ப்பம்: ஞானபீடப் பரிசு – சுந்தர ராமசாமி, ஆளுமைகள் மதிப்பீடுகள், பக்கம் 209 – காலச்சுவடு பதிப்பகம் 2004 பதிப்பு.