March 29, 2018

 

//தனக்கு ராயல்டி சில ஆண்டுகளாக வரவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் மாலதி மைத்ரி செய்தி பகிர்ந்திருந்தார். அவருக்கு முதல் பத்து ஆண்டுகள் ராயல்டி சென்றிருக்கிறது. பின்னர் தடைபட்டிருக்கிறது. லாபம் இல்லாமல் ராயல்டியும் இல்லை. நான் லாபம் அடைகிறேன் என்று பழிசொல்வதற்கும் எழுத்தாளர் ராயல்டிக்கு ஆசைப்படுகிறார் என்று குற்றம்சாட்டுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. எழுத்தாளருக்கு உரியது அவருக்கு. எனக்கு உரியது எனக்கு. எழுத்தாளருக்குக் கூடுதல் ராயல்டி கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே, அசூயை எதுவும் இல்லை. எனக்கு லாபம் கிடைத்துவிடுமோ என்ற பதற்றம் மாலதியிடமிருந்து வெளிப்படுவது இது முதல் முறை அல்ல.

இதற்கு முன்னர் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நினைவூட்டல் தருவார், ரயல்டியும் சென்றுவிடும். இப்போது ஒரு முறைகூட நினைவூட்டாமல், பொறுத்திருந்து, சந்தர்ப்பம் பார்த்து, வரவில்லை என்று பதிவிட்டிருக்கிறார். யாருடன் இணைந்து இதை செய்திருக்கிறார் என்பதும் நினைக்கத்தக்கது. இதில் மட்டுமல்ல காலச்சுவடுக்கு எதிராக எது கிளம்பினாலும் மாலதி வன்மத்தோடு பதிவிடுவதை கவனித்து வருகிறேன். இந்த அணுகுமுறை அவர் பதிப்பகம் தொடங்க முடிவெடுத்ததின் பின்னரானது.

மாலதி நூல்களைக் காலச்சுவடு தற்போது வெளியிடுவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தானே முழுக் கவிதைத் தொகுதி வெளியிடுவதாக தெரிவித்ததும் நிறுத்திக்கொண்டோம்.

கைவசம் இருந்த தலைப்புகளின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கணிசமாகக் குறைந்துவிட்டது. அடிக்கடி பார்த்து அனுப்பும் அளவுக்கு தொகை சேரவில்லை. இன்றுவரையிலும்கூட ரூ 15,000 வரலாம். அதை மார்ச் முடிய அனுப்புவதில் பிரச்சினை இல்லை. அத்தோடு கணக்கு முடிந்துவிடும். இதைச் சேமித்துத்தான் லாபம் பார்க்க வேண்டும் என்பது இல்லை. பிரதிகள் அனைத்தும் விற்ற பிறகு கணக்கை மொத்தமாக முடிக்கலாம் என்று இருந்தேன். ஆண்டுகள் சென்றுவிட்டன. கவனிக்காதது காலச்சுவடின் பிழைதான். இப்போதும் கையிருப்பு கணிசமாக உள்ளது. இனி விற்பனையாகும் என்று தோன்றவில்லை. Dead Stockதான்.

ஜூலை மாதம் புத்தகச் சந்தைகள் தொடங்கியதும். மிகக் குறைந்த விலையிலும், பின்னர் அன்பளிப்பாகவும் நூல்களைக் கொடுத்து முடிக்கிறோம். இனி கையிருப்பைத் தீர்க்கும் விற்பனை. Remaindering sales. மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கிவிட்ட நூல்களின் கையிருப்பை இப்படித் தீர்த்துக்கொள்வது பதிப்புலக நடைமுறை. இப்படித் தயாரிப்புச் செலவுக்கும் குறைவாக விற்கப்படும் நூல்களுக்கு ராயல்டி இல்லை.

நூலாசிரியர் விரும்பினால் குறைத்த விலையில் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

ராயல்டி வழங்குவது தொடர்பான காலச்சுவடின் அணுகுமுறை பற்றிய பொதுப்படையான ஒரு பதிவை விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்.// 

***

இது காலச்சுவடு பதிப்பகம் பி லிமிட்டடின் எம்டி கண்ணன் அவர்கள் பேஸ்புக்கில் எழுதியது. 

புனைவு என்னும் புதிர் eBook உரிமைப் பிரச்சனை எனக்கும் கண்ணனுக்கும் இடையில் எழுந்ததிலிருந்து, கிளாசிக் பொய் வரிசை என்று வெளியிடத்தக்க ஏகப்பட்டக் கதைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார். அவற்றில் புத்தம் புதிய காப்பி இது. 

மாலதி மைத்ரி என்கிற தனி நபர் இங்கு முக்கியமே இல்லை. அதே சமயத்தில், எனக்கடுத்து ஜெயமோகனுக்கடுத்து கண்ணனின் ‘நேர்மை’ முகத்திரையை நேரடியாகப் பெயர் குறிப்பிட்டுக் கிழித்த இன்னொரு இலக்கியவாதி இவர்தான். 

கண்ணன் என்ன சொல்கிறார். 

//கைவசம் இருந்த தலைப்புகளின் விற்பனை கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கணிசமாகக் குறைந்துவிட்டது. அடிக்கடி பார்த்து அனுப்பும் அளவுக்கு தொகை சேரவில்லை. இன்றுவரையிலும்கூட ரூ 15,000 வரலாம்.// 

காலச்சுவடு வெளியிட்ட மாலதி மைத்ரியின் புத்தகங்களின் விலை, பனுவலில் என்ன என்று பார்க்கலாமா. 

   

இரண்டைத் தவிர எல்லாமே 100 ரூபாய்க்குக் கீழ் இருப்பவை. நிகர விலையில் அதாவது, சேல்ஸ் டிஸ்கவுண்ட் போக கம்பேனிக்கு வரும் தொகையில் 15% எழுத்தாளருக்கு என்பதே காலச்சுவடின் ராயல்டி பாலிசி. 70 ரூபாய் புத்தகத்துக்கு 30% ஆண்டு விற்பனை 2 லட்சத்தைத் தாண்டினால் விற்பனையாளருக்கு 35% கழிவு உண்டு. காலச்சுவடின் புத்தகங்கள் எல்லாமே Mac விலை iPone விலை என்பதால் நிச்சயமாக ஒரு வருடத்தில் எளிதாக 2 லட்சத்தைத் தொட்டுவிடுவார்கள். எனவே 35% உறுதி. அதாவது 70 ரூபாயில் 35%மான 24.50 போய்விட்டால் மீதி 45.50. இதில் மாலதி மைத்ரிக்கான ராயல்டி 15%. அதாவது 6.85 (உரூபாய் ஆறு மற்றும் எண்பத்து ஐய்ந்து பைசாக்கள்). 

தோராயமாக 10 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், கண்ணனின் வாக்குமூலப்படி 15,000 ரூபாயில் 1500 புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். கவிதைப் புத்தகம் விற்கவே விற்காது அது வெறும், அந்தக் கவிஞருக்கான விசிட்டிங் கார்டுதான் என்பதே பெரும்பாலான பதிப்பகங்களின் பிலாக்கணம். கடந்த ஐந்து வருடங்களில் மாலதிமத்ரிக்கு 1500 புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்பது சாதாரண விஷயமா. அதிலும் ஒரு புத்தகம் ஆங்கில மொழிபெயர்ப்பு. விலை 295 என்றாலும் அதில் கிடக்கும் ராயல்டியோ 295X35%=103.25. 295-103.25=191.75X15%=28.70 இது நான்கு பேர்களின் தொகுப்பு என்பதால், இந்த 28.70ல் நான்கில் ஒருபங்கான 7.19 பைசாதான் மாலதி மைத்ரிக்கு காலச்சுவடு கொடுக்கிற காசு. ரயிலடியில் கூட இதைவிடக் கூடக் கிடைக்கும். இதுபோன்ற ரயிலடி சில்லறைகளாகச் சேர்ந்ததே கண்ணன் மாலதி மைத்ரிக்குக்கடந்த 5 ஆண்டுகளாகத் தராமல் வைத்துக்கொண்டிருக்கிற 15,000 என்றால் அது ரயிலடியைவிடக் கேவலமாக இல்லையா.

இவர்தான் தமிழ் எழுத்தாளர்களை உலகம் முழுவதற்கும் கொண்டுசெல்ல ஏர்லைன்ஸ் கம்பேனி நடத்த அவதரித்திருக்கும் இலக்கிய எம்டி மல்லையா. 

இதில் இவருக்கு இருக்கும் திமிர் கொஞ்சநஞ்சமல்ல. என்னைக் கேள்வி கேட்டாயா நீ டெட் ஸ்டாக் என்று எழுத்தாளர்ளை துச்சமாகத் தூக்கியெறிந்து பேசுபவர். இதுவரை ஜே ஜே சில குறிப்புகள் 19 எடிஷன் என்று போட்டுக் கொள்கிறீர்களே ஒவ்வொருஎடிஷனும் என்ன 1000 காப்பியா இல்லை அந்தக் காலம் போல 1200 பிரதிகளா. இலவசமாகக் கொடுத்த பசுவய்யா கவிதைகள் மீது டெட் ஸ்டாக் என்று லேபிள் ஒட்டிக் கொடுத்திருக்கலாமே. 

//லாபம் இல்லாமல் ராயல்டியும் இல்லை.// 

மாலதி மைத்ரியின் புத்தகங்கள் விற்றிருப்பதால்தானே உங்கள் பிசினஸில் கிடக்கும் அந்த 15,000 வந்தது. புத்தக விற்பனைதானே அய்யா உங்கள் தொழில். இரண்டு கோடிக்கு புக்கு விற்றதாகத்தானே உங்கள் பேலன்ஸ் ஷீட் கூறுகிறது. இவ்வளவு விற்றும் உங்களுக்கு லாபம் வரவில்லை என்றால் உங்களுக்கு பிசினஸ் பண்ண வரவில்லை என்று எண்ணிக்கொள்ள இங்கே யாரும் வெள்ளந்திகளல்ல. பணம் செலவுக் கணக்கில் வேறு எங்கோ போகிறது என்றுதான் யாரும் எண்ணுவார்கள். 

இப்படி எழுத்தாளர்களின் ராயல்டியைக் கொடுக்காமல் வைத்துக் கொள்வதால்தான். கணக்கிலேயே அதைக் கொண்டுவராமல் இருப்பதால்தான், நிகர வருவாயாக, அதாவது 2 கோடிக்கு புக்கு விற்றும், ஒப்பந்தப்படி அந்த நிகர வருவாய்க்கு 15% ராயல்டியாகக் கொடுத்திருக்கவேண்டிய பணம் வெறும் 2.85%ஆக பேலன்ஸ் ஷீட்டில் இளிக்கிறது. 

//எனக்கு லாபம் கிடைத்துவிடுமோ என்ற பதற்றம்// 

30 லட்சம் ராயல்டி தரவேண்டிய இடத்தில், ஆறிலொரு பங்காக வெறும் 5 லட்சத்தை மட்டுமே காட்டிவிட்டு மீதி எங்கே எனக் கேட்பதால் உங்களுக்குதானய்யா உண்மையான பதற்றம். அதன் வெளிப்பாடுதான் 

//யாருடன் இணைந்து இதை செய்திருக்கிறார் என்பதும் நினைக்கத்தக்கது.// 

என்கிற இது.

எனக்கு மாலதி மைத்ரி நண்பரும் இல்லை எதிரியுமில்லை. சொல்லப்போனால் யாருமே இல்லை. ஆனால் மோசடி செய்யப்படும் யாருக்கும் குரல் கொடுப்பவன் என்பதால் அவருக்கும் சேர்த்து கேள்வி கேட்கிறேன் சோ. தர்மனுக்காக ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடிபிரஸ்ஸுக்குப் போனதைப்போல. ஓலா ஓட்டுநருக்காக இந்து ஆபீஸ் போனதைப் போல. இருவருக்கு ஆதரவாக சின்மயியின் சாதிவெறியை அம்பலப்படுத்தக் கைக்காசைச் செலவழித்து புத்தகம் போட்டதைப்போல.

//பின்னர் அன்பளிப்பாகவும் நூல்களைக் கொடுத்து முடிக்கிறோம்.// 

அதான் மாலதி மைத்ரிக்கு ராயல்டி இல்லை என்றுசொல்லியாகிவிட்டதே. அப்போதுகூட அன்பளிப்பாகக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் என வாய் வருகிறதா பாருங்கள். ரயிலடியில்கூட இப்படி யாரும் இருப்பார்களா என்பது சந்தேகம்தான்.