April 2, 2018

சோ. தர்மன், ஜெயமோகனிடமும் எஸ். ராமகிருஷ்ணனிடமும் இன்னும் பல எழுத்தாளர்களிடமும் சொல்லிப் புலம்பியதென்ன பொருமியதென்ன.

சோ. தர்மனின் குற்றச்சாட்டு – 1

மலையாள மொழிபெயர்ப்புக்காக எந்த உழைப்பையும் போடாமல், 2011ல் தம்மிடம் ஆங்கிலத்தில் வாங்கிய கையொப்பத்தை வைத்துக்கொண்டு, தமது சொந்த முயற்சியில் ஏற்பாடு செய்த மலையாள பதிப்பகத்திடம் ஓடிப்போய் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அட்வான்ஸ் பணம் 3750 ரூபாயைத் தவிர, காலச்சுவடு கண்ணன் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு பைசாவைக்கூடத் தமக்குத் தரவில்லை. 

சோ. தர்மனின் குற்றச்சாட்டு – 2

மலையாள பதிப்புக்கான ராயல்டி பெறும் உரிமை தனக்கே உரியது என தம்மிடம் கூறி, நேரடியாக மலையாளப் பதிப்பகத்திடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட காலச்சுவடு கண்ணன், அவனிடம் பணம் பெயர்கிற வழியாகத் தெரியவில்லை என்றவுடன், மலையாள உரிமையை உங்களுக்கே தந்துவிடுகிறேன். நீங்களே அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு எனக்குரியதைக் கொடுங்கள் என்று இப்போது கூறுவது என்ன நியாயம். 

சோ. தர்மனின் குற்றச்சாட்டு – 3 

Oxford University Press பதிப்பகத்திலிருந்து கொடுத்த முன்பணம் 3750 தவிர, மூன்று வருடமாகியும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான ராயல்டி என்று கண்ணன் தம் கண்ணில் எதையுமே காட்டவில்லை.

ஆங்கிலம் மலையாளம் இரண்டு பதிப்புகளுமே 2014ல் வெளியானவை. “ராயல்டி தொகை முன்பனணத்தைத் தாண்டும் பொழுதுதான் மீண்டும் அனுப்பிவைப்பார்கள்” என்று சோ. தர்மனுக்குக் கண்ணனே, 08.08.2016 அன்று கையெழுத்துப் போட்டுக்கொடுத்திருக்கும் கடிதம் இது. 

ஆக ஆங்கிலம் மற்றும் மலையாளப் பதிப்பகங்களிடமிருந்து 31.03.2016வரை, அட்வான்ஸைத் தாண்டி ஒரு பைசாக்கூட வரவில்லை, காரணம், காலச்சுவடுக்கும் சோ. தர்மனுக்கும் சேர்த்து முன்பணமாக, ஆங்கிலம் மலையாளம் இரண்டு மொழிபெயர்ப்புகளில் இருந்துமே, 08.06.2016வரை கிடைத்தது 15000 ரூபாய் (கண்ணனுக்கு 3750+3750 தர்மனுக்கு 3750+3750) மட்டுமே. ஏனென்றால் அந்தப் புத்தகம் இரண்டு மொழிகளிலுமே முன்பணத்தை தாண்டி விற்கவில்லை. உண்மை என்ன என்பது அந்த ஆண்டவனுக்கு மட்டுமே வெளிச்சம். எழுத்தாளன் காலச்சுவடு கண்ணன் போன்றவர்கள் உண்மையை மட்டுமே சொல்வார்கள் என்று நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. 

இது ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டிலும் சரி என்பதற்கு ஆதாரம், 05.03.2018 தேதியன்று எனக்கு வந்த இந்த மெய்ல்.

சோ. தர்மன் சார்பில், அண்ணாசாலையில் பழைய சஃபையர் தியேட்டருக்கு எதிரில் இருக்கும் ஆக்ஸ்வர்ட் யூனிவர்சிடி பிரஸுக்கு நான் நேரில் சென்று விசாரித்து டெல்லி மெய்ல் ஐடி வாங்கி தொடர்புகொண்டதில் கிடைத்த பதிலை ஏற்கெனவே பிரசுரித்து இருந்தேன். கண்ணனின் அண்ணாந்த பார்வையில் அது படவில்லை போலும். எனவே அதை இன்னொரு முறை திரும்ப இங்கே எழுத்து வடிவிலும் கொடுக்கிறேன். 

Dear Mr. Maamallan,

We have signed license with Kalachuvada Publication for the English translation of Koogai originally written by Cho. Dharman and paid an advance of INR 7819 in lieu of royalty of 5% on net receipt. Royalty incurred till date against sales of total  350 copies is  INR 8037.12.

We are holding a royalty of INR 218.12 (INR 8037.12- INR 7819). Since the given amount is less than INR 1500, we have forwarded it for next financial year.

Regards,
Deepika  Mathur 

05 மார்ச் 2018 தேதியிட்ட கடிதத்தில் ஆக்ஃபோர்ட் யூனிவர்சிடி பிரஸ் சொல்கிறது, கூகை ஆங்கில பதிப்பு 350 பிரதிகளே விற்றிருக்கின்றன. அதற்கான ராயல்டி (கண்ணனுக்கும் தர்மனுக்குமாகச் சேர்த்து) 8037.12. இதில் ரூபாய் 7819ஐ ஏற்கெனவே காலச்சுவடுக்கு முன்பணமாகக் கொடுத்துவிட்டோம். எங்களிடம் மீதம் இருப்பது ரூபாய் 218.12. இது 1500 ரூபாயாக ஆனதும் அடுத்த வருடம் கொடுக்கலாம் என்று எங்கள்வசமே வைத்துள்ளோம். 

2014ல் வெளியான ஆங்கிலக் கூகைக்கு 2015, 2016ல்கூட கண்ணன் தொலைபேசியிலும் எழுத்துபூர்வமாகவும் சொல்லிக்கொண்டு இருந்தது என்னவென்றால், அட்வான்ஸ் பணத்தைத்தாண்டி ராயல்டி இன்னும் சேரவில்லை எனவே சேர்ந்ததும் தருவார்கள் என்பதே. அதே பதிலைத்தான் ஆக்ஸ்போர்டு லெட்டரும் சொல்கிறது, கொடுத்த அட்வான்ஸ் 7819ஐத் தாண்டி எக்ஸ்ட்ராவாக சேர்ந்திருக்கும் ராயல்டி 218.12 என்று.

ஆனால்,  அரிச்சந்திரன் வீட்டிலேயே டேரா போட்டு வசித்துக்கொண்டிருப்பவரான கண்ணன், ஆங்கில மொழிபெயர்ப்புக்கான பணம் என்று கூறி, இதை நான் இலக்கிய உலகப் பிரச்சனையாக ஆக்கிய பிறகு, இப்போது 5499 ரூபாய்க்கு DD அனுப்பியிருக்கிறாரே இது எப்படி என்பதுதான் எனக்கும் தர்மனுக்கும் விளங்கிக்கொள்ள முடியாத வியப்பு. 

கண்னன் 28.03.2018 அன்று அனுப்பியிருக்கும் 26.03.2018 தேதியிட்ட DD

 காலச்சுவடு இத்துடன் அனுப்பியிருப்பவை, யாருமே கேட்காத, எந்தப் பஞ்சாயத்துமே இல்லாத, காலச்சுவடு பதிப்பித்த சோ. தர்மனின் தமிழ்ப் புத்தகங்களுக்கான விற்பனைக் கணக்குக் காகிதங்கள்.

ஆக்ஸ்ஃபோர்டுக்காரன் என்ன சொன்னான். paid an advance of INR 7819 in lieu of royalty of 5% on net receipt. இதில் ஒரு லட்சத்தைக் கண்னன் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் என்று சோ. தர்மன் சொன்னாரா. 3750+ முன்பனமாகக் கொடுத்தார் என்று ஒப்புக்கொள்கிறாரே. இதற்குப் பிறகு 2014லிருந்து இதுவரை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு விற்றது அதற்கான ராயல்டி எவ்வளவு என்கிற கணக்கைத்தானே கேட்கிறார். எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் கணக்குக் கேட்பதே பிரச்சனைதான்.

ஆக்ஸ்போர்டுக்காரன் எனக்கு அனுப்பிய 05.03.2018 கடிதத்தில் சொல்லியிருப்பது, 350 புத்தகங்கள் விற்றன. அதற்கான ராயல்டி முன்பணமாகக் கொடுத்த 7819ஐக் கழித்துவிட்டால், மீதி இருப்பது 218.12 என்றுதானே. இந்த 218.12ஐயும், அடுத்த வருடம் 1500 ஆனதும் காலச்சுவடிடம் தருவதற்காக, தானே வைத்துக்கொண்டிருப்பதாகத்தானே கூறியிருக்கிறான்.  

ஆக்ஸ்போர்டு சொல்லும் யதார்த்தம் இப்படி இருக்கையில், பேஸ்புக்கில் 16 March at 11:30க்குப் பொய்களின் ஊர்வலம் 3. என கண்ணன் எழுதியதென்ன

 

 

 

இதை அப்போதே நானும் சோ. தர்மனும் கவனித்துவிட்டோம். ஆனாலும் என் பச்சையப்பாஸ் கல்லூரி நாட்களைப் போல ‘கல் வாங்கு” என காத்திருந்தேன்.

கண்ணன் பேஸ்புக்கில் சொன்னது போல, ஆங்கிலத்துக்கும் மலையாளத்துக்குமாகச் சேர்த்துக் காலச்சுவடுக்குக் கிடைத்த ராயல்டி 26,000 ஐ அப்படியே எடுத்துக்கொண்டால், எந்த ஆறறிவு ஜீவிக்கும் உதிக்கிற கேள்வி இதை ஏன் கண்ணன் முன்னமே சொல்லவில்லை. வருடா வருடம் விற்ற கணக்கைக் கொடுத்திருந்தால் இப்படி அம்பலத்தில் காலச்சுவடுபெயர் ரிப்பேர் ஆகியிருக்காதே என்பதுதான். நியாயமான கேள்விகளுக்கும்கூட அதிநேர்மையாளர்களுக்கு அதிபுத்திசாலிகளுக்கும் புத்தி மட்டானவர்களைப் போல ஆத்திரம்தான் வருகிறது. அது எதில் முடிகிறது என்று இந்நேரம் உலகத்துக்கேத் தெரிந்துவிட்டிருக்கும். 

உத்தம சத்தியர், குண்டித் துணியும் உருவப்பட்டபின் இப்போது சொல்கிறார்,

“இதில் இதுவரை அனுப்பியிருப்பது ரூ 7660+. இந்த கணக்கு ஆண்டில் ஆக்ஸ்போர்ட் அனுப்பியத்திலிருந்து தர்மனுக்கு கொடுக்க வேண்டியிருப்பது ரூ 5340+( மார்ச் முடிய அனுப்பிவைக்கப்படும்). அயல் மொழிகள் விற்பனையில் காலச்சுவடுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ 13,000.” 

ஆக்ஸ்போர்ட் 05.03.2018 எனக்கு அனுப்பிய மெய்லில் கூறியிருப்பது என்ன 

Royalty incurred till date against sales of total  350 copies is  INR 8037.12. இதில் ஏற்கெனவே முன்பணமாகக் கொடுத்துவிட்டோம் என ஆக்ஸ்போர்ட் சொல்வது எவ்வளவு 7819/-

05.03.2018ல், ஆங்கிலக் கூகையை விற்ற கணக்கில், தன்னிடம் இருப்பதாக ஆக்ஸ்போர்ட் கூறியதே 218.12தானே. அப்புறம் எப்படி 16.03.2018ல் ஆக்ஸ்போர்ட் இந்தக் கணக்கு ஆண்டில் 5340+ அனுப்பியிருக்கிறது என்கிறார் காலச்சுவடு கண்ணன். 

அத்தோடு நில்லாமல், 5499 ரூபாய்க்கு, 26.03.2018ல் DD எடுத்து, சோ. தர்மனுக்கு அனுப்பிவைக்கிறார் உத்தமபுத்திரர். 

பிரச்ச்னை என்னவென்றால், காலச்சுவடுக்கும் தர்மனுக்கும் சேர்த்து மொத்த ராயல்டி 26,000 என்றால், ஏற்கெனவே அட்வான்ஸாக இருவரும் எடுத்துக்கொண்டது 15,000 என்றால், எஞ்சி நிற்கும் இந்த 11,000 எங்கிருந்து வந்தது எப்போது வந்தது இது இத்தனை நாளும் எங்கிருந்தது என்பதுதான்.

ஆக்ஸ்போர்ட் கொடுக்கவில்லை என்பது எங்களுக்கே தெரியும். இப்போது உங்களுக்கும் தெளிவாகியிருக்கும்.

18.07.2017ல் கண்ணனே கையொப்பமிட்ட கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார் என்று பாருங்கள். 

“கூகை நாவலின் ஆங்கிலப் பதிப்பிற்கான விற்பனைக் கணக்கு இந்த ஆண்டு எனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்ததும் அனுப்பிவைக்கிறேன்.”

இந்த ஆண்டு என்பது 2016 ஏப்ரல் தொடங்கி 2017 மார்ச் முடிய எனில்

பேஸ்புக்கில் கண்ணன் கூறியிருக்கும் இந்த ஆண்டு என்பது 2017 ஏப்ரல் தொடங்கி 2018 மார்ச் முடிய இருக்கவேண்டும். ஆனால் ஆக்ஸ்போர்ட் 05.03.2018 மெய்லில் கூறியிருப்பது 05.03.2018ஆம் தேதிவரை அட்வான்ஸ் போக தன்னிடம் இருப்பது 218.12 என்று.

இது மலையாளப் பணமாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் 18.07.2017 கடிதத்தில் கண்ணனே சொல்லியிருப்பது, 

“மலையாளப் பதிப்பகத்தார் கணக்கு விபரங்களை அனுப்பிவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. மலையாளப் பதிப்பகம் உங்களின் தேர்வு.”

 

அப்படியென்றால் கூகை நாவலின் அட்வான்ஸ் பணமாகக் கிடைத்த, கண்ணனுக்கு (7500 தர்மனுக்கு 7500) 15,000 போக  ராயல்டியாகக் கிடைத்த இந்த 11,000, யார் கொடுத்தது. இது இத்தனை நாளாய் எங்கிருந்தது. இது பேலன்ஸ் ஷீட்டில் ஏன் வரவில்லை. காலச்சுவடின் பேலன்ஸ் ஷீட்டே ஒரு குத்துமதிப்பாய் போடுவது என்பதால்தான் அதில் ராயல்டி 2.85%ஆக இருக்கிறதா. 

பதிப்பகச் செட்டியார்களின் பழக்கம் என்னவென்றால், தீபாவளி நெருக்கத்தில், எழுத்தாலனின் முழி பிதுங்கிக்கொண்டு இருக்கிற நெருக்கடியில், பளபளக்கும் தாம்பாளத் தட்டில் பூ பழம் வேட்டி புடவை மஞ்சள் குங்குமம் வைத்து இவற்றுக்கு நடுவில் கட்டாக நோட்டை வைத்துக் கொடுப்பார்கள். பிரசவ வலியில் துடிக்கையில் அந்தக் கடன்காரன் கிட்ட வரட்டும் வெச்சிக்கறேன் என்பதைப்போல, அதுவரை செட்டியாரை சபித்துக்கொண்டிருந்த எழுத்தாளன், கட்டாகப் பனத்தைப் பார்த்ததும், பிறந்த பிஞ்சின் முகத்தைப் பார்த்ததும் எல்லா வலிகளையும் மறந்து பூரித்துப் போவதைப்போல -அந்த தீபாவளியை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று அதுவரை திணறிக்கொண்டிருந்த எழுத்தாளனுக்கு எல்லாம் மறந்துவிடும். கண்ணெதிரில் செட்டியார்தான் கடவுளாய் தெரிவார். செட்டியார் வருஷம் பூரா டுர்டுர் என்று எழுத்தாளனைக் கணக்குவழக்கின்றி மேய்த்துக்கொண்டிருப்பார். 

அய்யராகப் பிறந்து செட்டியாராக வாழ்ந்துகொண்டிருக்கிறார் காலச்சுவடு கண்ணன். 

மனுஷ்ய புத்திரன் கூடத்தான் ராயல்டி தருபவர். சாருவுக்குத் தந்திருக்கிறார். எஸ்.ராவுக்கும் தந்திருக்கிறார். ஏன் சுகுமாரனுக்குக்கூட தந்திருக்கிறார். கணக்குவழக்கெல்லாம் கிடையாது. பணமுடிப்பு போல தருவார். எப்ப வேணுமோ வாங்கிக்கிங்க என்கிற மாடர்ன் செட்டியார். எனக்குக்கூட மனுஷ்ய புத்திரன், மூன்று வருடங்களுக்கும் சேர்த்து, 10,000/- பக்கமாக ராயல்டி கொடுத்தாரே. இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும். எப்படிக் கொடுத்தார் எப்போது கொடுத்தார் என்பதுதான் கேள்வி. 

பெங்களூரில் இன்ஜினியரிங் படித்த, வெளிநாடுகளுக்கு பறந்துபோய் வெள்ளைக்காரர்களுடன் வெண்ணையாக வியாபாரம் பேசும் காலச்சுவடு கண்ணன் சுந்தரம் செட்டியாரும் ராயல்டி கொடுக்கிறார். எப்போது கொடுக்கிறார். எழுத்தாலன் பிரச்சனை பண்ணினால் கொடுக்கிறார். எப்படிக் கொடுக்கிறார் எழுத்தாளனை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குக் கேவலப்படுத்தி, அவமதித்துக் கொடுக்கிறார்.

காலச்சுவடு கண்ணனிடம் யாரும் கணக்கு கேட்கக் கூடாது. மீறிக் கேட்டால், கணக்கை முடித்துவிடுவார் -எதோ ஒரு கணக்கு சொல்லி காசை விட்டெறிந்து. 

 

இதில் உயிர்மை என்ன மட்டம் காலச்சுவடு என்ன ஒஸ்தி. இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். முன்னவர் திராவிடர் பின்னவர் ஆரியர் அவ்வளவுதான் வித்தியாசம். 

இலக்கிய ஈயத்தை மேனியெங்கும் பூசிக்கொண்டு தகதகக்கும் இந்த இரண்டையும் போல இல்லாது புத்தகத்தைப் பண்டம் என்றவரைப் பற்றி ஏற்கெனவே எழுதிக்கொண்டிருப்பது அடுத்து.