April 4, 2018

 

மாமல்லன் – காலச்சுவடு கண்ணன் இடையிலான ரயிலடி பூசல்களைத் தொடர்ந்து கவனித்ததில்

1. பேலன்ஸ் ஷீட் ராயல்டியும் ரயிலடி பிஸினஸும்

ராயல்டி பிரச்சினையை கம்பெனியின் கணக்குகளுடன் மாமல்லன் வெளியிட்டபொழுது, ‘உனக்கு பேலன்ஸ் ஷீட்டைப் படிக்கவே தெரியல. நாங்க இங்க ப்ரொவிஷன் வெச்சிருக்கோம் தெரியுமா?’ என்ற எதிர்வினை வருமென்று எதிர்பார்த்திருந்தேன்.

அப்படியொன்று வரவேயில்லை.

2. பொறாமை

வந்ததென்னவோ பெருமாள் முருகனின் எழுத்துகள் அமெரிக்காவுக்குச் செல்வது கண்டு மாமல்லன் பொறாமையும் ஆற்றாமையும் கொண்டுவிட்டார் என்பதுதான்.

பெருமாள் முருகன் எழுத்துகளின் இலக்கிய மதிப்பு குறித்த தனது கருத்துகளை இன்று நேற்றென்னவோ பேசத் தொடங்கவில்லை மாமல்லன். நானறிந்து மாதொருபாகன் விவகாரம் கிளம்பிய சமயத்திலிருந்தே பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

3. நல்கைகள்

காலச்சுவடு பெறும் நல்கைகள் பலருடைய கண்ணைக் குத்துகிறது என்றொரு எதிர்வினை.

நல்கை கிடைத்தும் அந்நல்கைக்குரிய நூற்களின் விலை யானை விலை, குதிரை விலையில் நிர்ணயிக்கப்படுவது குறித்தே மாமல்லனால் கேள்வி எழுப்பப் பட்டது.

4. ராயல்டி சிக்கல் 

எழுத்தாளர்களுக்கு நேரத்தில் ராயல்டியை அனுப்பிவிட வேண்டுமென்பதே தமது குறிக்கோள் என்று கண்ணன் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத் தக்கதெனினும் நடைமுறைச் சிக்கல்கள் என்று அவர் தெரிவிக்கும் சில சிக்கல்கள் அவர் சொல்லும் அளவுக்கு அவ்வளவு பெரிய சிக்கல்கள்தானா என்றும் பார்க்க வேண்டுமல்லவா.

நான்கு வெவ்வேறு இடங்களில் 650 தலைப்புகளில் கையிருப்பில் இருக்கும் நூற்களுக்கு ராயல்டி கணக்கிட இரு முழுநேர ஊழியர்கள் தேவைப்படுவர் என்பது கண்ணனின் குறிப்பு.

ஐயா, விற்பனையாகாமல் உங்களது கையிருப்பில் இருக்கும் நூற்களுக்கும் ராயல்டி கொடுக்கச் சொல்லி மனசாட்சியுள்ளவன் கேட்கமாட்டான். தங்களது பதிப்பகம் விற்ற நூற்களுக்கான ராயல்டி தான் இங்கு பேசுபொருளே. விற்பனைக் கணக்கு, லாபநட்டக் கணக்கு, இருப்புநிலைக் குறிப்பு போன்றவை மார்ச் – 2017 வரை முடிக்கப்பட்டு கம்பெனிகள் சட்டம் மற்றும் வருமானவரிச் சட்டம் எனக் குறைந்த பட்சம் இரு சட்டங்களின் கீழ் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. எந்த நூல் எத்தனை படி விற்றது என்ற தகவலை அதிலிருந்து எடுத்து ராயல்டியைக் கணக்கிடுவது என்பது நிறுவனத்துக்கு அத்தனை சிரமமான செயலா என்ன?

நாங்கள் ஆதிகாலம் போல பேரேடு, நாளேடு, இன்வாய்ஸ் எல்லாம் பேனா பென்சில் கொண்டுதான் எழுதி வைத்திருக்கிறோம், யாருக்கு எவ்வளவு ராயல்டி என்று கண்டுபிடிக்க மாமாங்கமாகும் என்பீர்களானால் தோராயமாக விற்றுவரவுத் தொகையின் மீது குறிப்பிட்ட சதவீதத்தை Provision for Royalties Payable என்று பற்றாவது வைத்துக் கொண்டிருக்க வேண்டுமல்லவா! அதைச் செய்யாததால்தான் விற்றுவரவின் மீது 2.85% மட்டுமே ராயல்டி மூன்றாண்டுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது  பெருச்சாளியின் கண்களில் பட்டுத் தொலைக்கிறது.

2017 மார்ச் முடிய மூன்று நிதியாண்டுகளில் மொத்த விற்றுவரவு  ரூ. 470 லட்சங்கள். ஒவ்வொரு ஒப்பந்தமும் வெவ்வேறு சதவீதத்தில் இருக்கலாம் என்பதாலும், 2017 மார்ச்சுக்குப் பிறகும் மேற்குறிப்பிட்ட விற்பனையில் sales returns இருந்திருக்கலாம் என்பதாலும் மாமல்லன் சொல்லும் 15 சதவீதத்துக்குப் பதிலாக பத்து சதவீதம் என்று தோராயமாகக் கொண்டால் ராயல்டி செலவு ஐம்பது லட்ச ரூபாயைத் தொடுகிறது. ஆனால் அம்மூன்றாண்டுகளில் ரூ.12.32 லட்ச ரூபாய் மட்டுமே ராயல்டி செலவாகக் கணக்குக்கு வந்துள்ளது. மீதமுள்ள 38 லட்ச ரூபாய்களை நீங்கள் மார்ச்-17 வரை தரவில்லை என்பதில் எனக்குப் பிரச்சினை ஏதுமில்லை, அது பதிப்பகத்துக்கும் அந்தந்த எழுத்தாளருக்குமானது. தரவேண்டிய தொகை என்று கணக்கில் கூட ஏற்றிக் கொள்ளவில்லையே என்பதுதான் இங்குக் கேள்வி. ராயல்டி கிடைத்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக வந்து ‘எனக்கு ராயல்டி வந்ததே என்று சாட்சியம் சொல்லலாம்தான். Boss, where is 50 lacs and where is 12 lacs? இதில் deadstock, livestock என்று வேறு தரம்பிரிப்பு.

5. எழுத்தாளர்களிடம் ஏன் மாற்றாந்தாய் மனப்பான்மை

தாயாருக்குத் தரவேண்டிய ராயல்டியை வருங்காலத்தில் ஒருநாள் பெருந்தொகையாக அவரிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்கிற பதிப்பாளரின் விருப்பம் மகிழ்ச்சியளிக்கிறது. இயக்குநர்களுக்கான சிறிய தொகை மதிப்பூதியத்தை அவ்வப்போது எடுத்துக் கொள்ளாவிட்டாலும், கொடுக்கப்படவேண்டிய மதிப்பூதியம் என்று கணக்கில் ஏற்றி வைத்திருக்கும் நிறுவனம், கொடுக்கிறோமோ இல்லையோ, தாயாருக்கும் இன்ன பிறருக்கும்கொடுக்கப்படவேண்டிய ராயல்டி என்று அவ்வப்போது கணக்கில் ஏற்றி வைத்திருக்க வேண்டுமா இல்லையா?

6. தயார் நிலையில் இருக்கும் ராயல்டி

‘சிறு நினைவூட்டல் எழுத்தாளரிடமிருந்து வந்தாலே ராயல்டியை அனுப்பிவிடுகிறோம், கேளுங்கள் தரப்படும்’ என்று இயசுநாதராக மாறி பதிப்பாளர் பேசினால் ‘கணக்கில் காணோமே, தேடுங்கள் கிடைக்கிறதா பார்க்கலாம்’ என்று பெருச்சாளி நோண்டுகிறது.

விற்றுவரவை accrual basis-ல் கணக்கெடுத்துக் கொண்டு ராயல்டியை cash basis-ல் கணக்கெடுப்பதில் என்ன தருக்கமிருக்கமுடியும்! தருக்கமென்ன தருக்கம்? சட்டப்படி இந்த நிறுவனம் mercantile basis of accountingதான் பின்பற்றவேண்டும். Mixed basis தடை செய்யப்பட்டுள்ளது.

7. நீ யார், நாட்டைப்பற்றிக் கேள்வி கேட்க – தலையங்கத்தில் / பேஸ்புக்கில்

இதையெல்லாம் கவனிக்க அரசின் வெவ்வேறு துறைகள் உள்ளன, உனக்கென்ன என்று கேட்டால், பேசப்படும் அனைத்து விவகாரங்களுக்கும் ஏதோவொரு அரசுத்துறை இருக்கத்தான் செய்கிறது. எவருமே எதையுமே பேசமுடியாது.

பின்குறிப்பு: மெயின் தலைப்பும் உள் தலைப்புகளும் மட்டுமே என் உபயம். ரிப்போர்ட்டுக்கான காப்புரிமை 100% ஆடிட்டருக்கானது மட்டுமே.