May 4, 2018

ஹலோ 

நீங்க யாரு 

நீங்கதானே போன் பண்ணியிருக்கீங்க யார் பேசறீங்கனு நீங்கதானே சொல்லணும் 

அப்படியா சரி. நான் இதயகுமார் 

எ..ந்..த.. இதயகுமார் 

நாந்தாம்ப்பா பச்சையப்பாஸ் இதயகுமார் 

இதயகுமார். எவ்ளோ வருஷமா தேடிக்கிட்டிருக்கேன். குடியாத்தம் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன்னாங்க…

திருப்பத்தூர். இப்ப சென்னைக்கு வந்திருக்கேன். நீ எங்க இருக்கே 

மாரீஸ்ல சாப்ட்டுட்டு இப்பதான் வெளிய வந்தேன். பார்க்கிங்ல இருக்கேன். நீ எங்க இருக்கே இப்ப 

நான் இங்க சிட்டாடல்ல இருக்கேன் 

எங்க. 1982ல அரும்பு பத்திரிகை ஆபீஸ் இருந்துதே ஈகா தியேட்டராண்ட… 

அங்கையேதான். ஆனா அரும்பு ஆபீஸ் இப்ப அங்க இல்ல 

சரி அங்க எவ்ளோ நேரம் இருப்பே. கொஞ்ச நேரம்தான். அதுக்கப்பறம் கீழ்பாக்கத்துக்கு மூவ் ஆயிருவேன்

சரி. இதோ நான் அங்க வந்துடறேன் 

நீ இருக்கிற இடத்துலேந்து இங்க வர எவ்ளோ நேரம் ஆகும்

பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன் 

சரி வா 

இதயகுமாரை கடைசியாகப் பார்த்தது 1982ல். 36 வருட இடைவெளிக்குப்பின் இன்றுதான் சந்தித்தேன். என்னைவிட நான்கு வயது மூத்தவன் என்பது இதை தட்டச்சு செய்துகொண்டிருக்கையில் அவனது பேஸ்புக் பக்கத்தைப் பார்த்துதான் தெரிந்தது. இந்த நிமிடம் வரை ஓரிரு வயது மூத்தவனாக இருகக்கூடும் என்றுதான் எண்ணியிருந்தேன். பச்சையப்பன் கல்லூரியில் நான் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கையில் இதயகுமார் முதலாம் ஆண்டு தமிழ் முதுகலை. BA முடித்தபின் வேறெங்கோ வேலை பார்த்துவிட்டு MA படிக்க வந்திருக்கவேண்டும். இவனுடன் பயின்றவர்களில் நிறைய பேருடைய பெயர்கள் நினைவில் இருக்கின்றன.

இதயகுமாருடன் படித்த இன்னொருவர் குடியரசு கட்சித் தலைவர் செ. கு. தமிழரசன். அவரை டிரைவின் சரவணபவன் என்று சில முறை சந்தித்திருக்கிறேன். அண்ணா நகர் குடியிருப்பில், 98ல் எங்கள் வீட்டிற்கு வந்து, LDயில் மால்கம் X பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் அப்செட் ஆகி இருந்ததாக பின்பொருமுறை கூறினார். மற்றொருவர் கிறித்துவக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பாலுச்சாமி என்கிற பாரதி புத்திரன். இவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து படித்தார். நிறையமுறை இவரது அறைக்குச் சென்று பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். 

பச்சையப்பன் கல்லூரி நண்பர்களில் அன்றுமுதல் இன்றுவரை தொடர்பில் இருப்பவர்கள் ஷங்கர் ராமன் இயக்குனர் வசந்த் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் L. சந்திரகுமார்.

இதயகுமார் தனி. 1979 முதல் இவனளவுக்கு, பச்சையப்பன் கல்லூரியில் நான் நெருங்கிப் பழகியவர்கள் என்றோ நிறைய நேரம் செலவழித்தவர்கள் என்றோ ஷங்கர் ராமனைத் தவிர வேறு எவரையும் சொல்ல முடியாது. 

இதயகுமாரை சந்திக்க, இன்று மதியம் பைக்கில் சென்றுகொண்டிருக்கையில் ஸ்டெர்லிங் ரோடு சிக்னலில் நின்றிருந்தபோது, இந்தக் கட்டுரையை கீழ்க்கண்டபடி ஆரம்பித்தால் சரியாக இருக்கு என்று தோன்றியது. 

பேச்சு பேச்சு பேச்சு. பேசியே வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது திமுக என்பது என் பால்ய பருவத்தில் பாண்டிச்சேரியில் அடிக்கடி கேட்ட வார்த்தை. அது பாராட்டாகச் சொல்லப்பட்டதல்ல என்பது வேறு விஷயம். 

யோசித்துப் பார்த்தால், நண்பர்களுடன் பேசி மட்டுமேதான் நானும் வளர்ந்திருக்கிறேன். 

பேசிப்பேசியே தெளிவாயிட்டப்பா என்று தமிழினி வசந்தகுமார் நிறையமுறை சொல்லியிருக்கிறான். 

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, இலக்கியத்துக்கு அடித்தளம் என்று சொல்லவேண்டுமென்றால் ஷங்கர் ராமன் இதயகுமார் இருவருடனும் பேசிக் கழித்தப் பொழுதுகளைத்தான் சொல்லவேண்டும். குறிப்பாக அந்தப் 19-20 வயதுகளில் ஜெயகாந்தனும் அசோகமித்திரனும் சுஜாதாவுமாகப் பேசி ஒப்பிட்டு பகுத்து கலைத்து தொகுத்துக்கொண்ட வார்ப்புக் காலம்.

பாண்டிச்சேரியின் பள்ளிப்பருவத்திலிருந்தே ஒன்றுக்கொன்று நேர் எதிரிடையான பின்புலம் வளர்ப்பு வசதி என்று பல்வேறுபட்ட ஆட்களும் எனக்கு நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் ஞானவள்ளல் பரஞ்சோதி மகானிடம் குண்டலினி கற்கப் போனது ஒரு பக்கம் என்றால் தட்டாஞ்சாவடி தமிழ்மணியுடன் பெருஞ்சித்திரனார் பின்னால் அலைந்தது இன்னொரு பக்கம். இரண்டு இடத்திலும் ஒரே சமயத்தில் இருந்துகொண்டிருக்கிறேன் என்பது இரண்டு தரப்புக்குமே தெரியாது. 

பச்சையப்பன் கல்லூரியில் எனக்கு நண்பர்களாக இருந்தவர்களுக்குள் பொதுவான விஷயம் என்று ஏதேனும் இருந்திருக்குமா என்பதுகூட ஐயம்தான். ஆனால் ஆள் உண்மையானவனாக இருந்தால் போதும். அவன் யாராக வேண்டுமானாலும் -என்ன கொள்கை என்ன நம்பிக்கை கொண்டவனாகவும் இருந்துவிட்டுப் போகட்டும் நான் அதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. இதயகுமாரின் முழுபெயரே அரும்பு அலுவலகத்தில் வைத்துதான் தெரியவே வந்தது. பெயரில் என்ன இருக்கிறது. அது, அழைக்கவும் குறிப்பிடவுமான ஒரு அடையாளம் அவ்வளவுதானே.

புத்தகங்களைப் படித்து மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு பதிலாக மனிதர்களுடன் நேரடியாகப் பழகி அவர்களைப் படிப்பதையே இலக்கியத்துக்கு அடிப்படையாக ஆரம்பகாலம் முதலே கொண்டிருந்திருக்கிறேன் என்று இப்போது தோன்றுகிறது. 

தொடரும்