July 2, 2018

கதை என்பது சுவாரசியமாக இருக்கவேண்டும். இதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால் எது சுவாரசியம் என்பதில்தான் ஆளுக்கு ஆள் கருத்து வேறுபாடு. ஒருவருக்கு சுவாரசியமாக இருப்பது அடுத்தவருக்கும் அப்படியே இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. அவரவர் ரசனைக்குத் தக, அனுபவம் பார்வை வாசிப்புக்குத் தக்கப்படி ஒன்று சுவாரசியமாகவோ போரடிக்கவோ செய்கிறது. இதன் காரணமாகவே இலக்கியமெல்லாம் நமக்கானதில்லை அதெல்லாம் மெத்தப் படித்த அறிவுகஜீவிகளுக்கானது என்கிற பொதுவான எண்ணம் பெரும்பான்மை மக்களிடம் ஆழமாக அமர்ந்திருக்கிறது. இதன் காரனமாகவே இலக்கியம் நிறைய பேரால் வாசிக்கப்படுவதில்லை.

பிறக்கும்போதே எல்லோரும் பேரிலக்கியங்களைக் கையில் பிடித்துக்கொண்டு பிறப்பதில்லை. இலக்கியம் படைப்பவர்களேகூட இதற்கு விலக்கில்லை.

எந்தப் படைப்பாளியும் முதலில் வாசகனாகவே வாழ்வைத் தொடங்குகிறான். அவனுக்குப் படிக்கக் கிடைப்பதைத்தான் படிக்கத் தொடங்குகிறான். படிக்கிற பழக்கம் இல்லாமல் எதையுமே படிக்கமுடியாது. படிப்பதே போரடிக்கிற காரியமாக இருப்பவர்களைப்பற்றி பேச எதுவுமில்லை. படிப்பவர்களையும் படிக்க ஆசைப்படுபவர்களையுமே எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் படிக்கக் கிடைப்பவை பொழுதுபோக்குக் கதைகள் தொடர்கதைகள் நாவல்கள் என்றுதான் இருக்கின்றன. கொஞ்சம் யோசிக்கிற சீர்தூக்கிப் பார்க்கிற சிலருக்கு இவை சீக்கிரத்திலேயே போரடிக்கத் தொடங்கிவிடுகின்றன. வாசிக்க வேறு என்ன கிடைக்கும் எனும் தேடல், இவர்களுக்குள் தொடங்குகிறது. தேடுகிறவன் இலக்கியத்தைக் கண்டடைகிறான்.

பொழுதுபோக்குக் கதையைப் போலவே இலக்கியமும் ஒரு கதையைத்தான் சொல்கிறது. ஆனால் இரண்டும் ஒன்றுக்கொன்று சம்மந்தமே இல்லாமல் ஆகிவிடுவது எப்படி நிகழ்கிறது என்பதுதான் சுவாரசியமானது.

பொழுதுபோக்குக் கதைக்காரனுக்கு முற்றமுழுதான நோக்கம் வாசகனைக் கவர்வது மட்டுமே. ஆனால் இலக்கியக் கதைக்காரனின் முழுமுதல் இலக்கு தன் புத்திசாலித்தனத்தைக் காட்டுவதன்று. சொல்லவரும் பொருளில் மட்டுமின்றி வடிவத்தில் பார்வையில் வெளிப்பாட்டில் என்று எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு, அவன் பார்த்த கண்டடைந்த உண்மைக்கு அருகில் வாசகனைக் கொண்டுசென்றுவிடுவதே அவனது ஆதார இலக்கு.

பாச்சி செத்துப்போனாள் என்பதில் என்ன இருக்கிறது. கதையில் பாச்சி என்பது யார் என்பதைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டு போவதில்தான் எல்லாமே இருக்கிறது.

‘செத்துப்போனாள்’ என்கிற வார்த்தையின் காரணமாகப் பெண் என்கிற சித்திரம் உருவாகிறது. ஆனால் அந்தப் பெண்ணின் வயதுபற்றித் தெரியவில்லை.

மனதில் தீண்டிக்கூடப் பார்க்காத பயங்கரமாக அந்தச் சாவு நாணுவுக்குத் தோன்றுவதால், இறந்தவள் அவனுக்கு நெருக்கமானவள் என்பதைத் தாண்டி அவன் மனைவியா தாயா என்பதைப் போன்ற பதைப்பு, கதையின் முதல் பத்தியிலேயே வாசகனுக்குள் எழுகிறது. 

அடுத்த பத்தி முழுக்கவும் விடியற்காலையின் சாலைக் கடை எப்படி இருக்கிறது என்பதுபற்றிய விவரிப்பு. இது ஏன் இங்கு அவசியமாகிறது. பாச்சி இறந்துபோனது தெரியாமல். எல்லாம் தன் போக்கில் எப்போதும்போல் இயக்கிக்கொண்டிருக்கிறது என்கிற அவலம் மட்டுமே காரணமில்லை. பாச்சியின் களமே அந்த சாலைக் கடைத்தெருதான் என்பதன் காரணமாகவே பாச்சி யார் என்று சொல்லுமுன்பே இதைப்பற்றிய விவரணை அர்த்தமுள்ளதாய் ஆகிறது.

கதையின் இரண்டாவது பக்கத்தில்,

அவனை வெரட்டாதே…’ என்று தட்டிக்கொடுத்த பின்னர்தான் பாச்சி அடங்கினாள்.

என்கிற வரியில் ஒருவேளை இது பெண்ணோ மூதாட்டியோ இல்லையோ என்கிற ஐயம் தலைகாட்டுகிறது.

பாச்சிக்குத்தான், திருட்டென்றால் மூக்கில் மணக்குமே. எல்லாமே ஒரு நிமிஷம்தான். காலாற எங்கேயோ போய்விட்டு வந்துகொண்டிருந்த பாச்சி, அப்படியே மாடுகளின் கால் இடுக்கு வழியாக ஒரு பாய்ச்சல், குத்துக்கம்பும், துவர்த்து முண்டுமாக சோனி அகப்பட்டுக்கொண்டான்.

என அடுத்துவரும் வரிகளில் இது மனித ஜீவனைப்பற்றிய கதையேயில்லை போல, பெண் நாயைப் பற்றியது போலும் என்று தோன்றத்தொடங்குகிறது. ஆனால், கதைநெடுக ஒரு இடத்தில்கூட அதை நாய் என்று ஆசிரியர் குறிப்பிடுவதேயில்லை. காரணம் கதையின் நாயகனான நாணு, எப்போதுமே அதை நாயாகப் பார்த்ததே இல்லை.

நாயை நன்றியுள்ள ஜீவனாகவும் மனிதனை நன்றிகெட்ட ஜென்மமாகவும்தானே இதுவரை பார்த்திருக்கிறோம்.

இறந்துபோன தெரு நாயை, மிகுந்த  நன்றியுடனும் வாஞ்சையுடனும் நினைத்துப் பார்க்கும், கிட்டத்தட்ட தெருநாயின் வாழ்க்கைத் தரத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு மனித ஜீவனின் முழு சரித்திரத்தையும் திருவனந்தபுரம் சாலைக்கடையின் பின்னணியில் வைத்துச் சொல்லிவிடுகிறது இந்தச் சிறுகதை.

கதை தொடங்குவதோ விடியற்காலையில் முடிவதோ வெயில் ஏறிக்கொண்டிருக்கும் காலைக்குள். ஆனால் கதைக்குள் காட்டப்படுவதோ நாணுவுடைய முழுவாழ்வும். அதற்காகத்தான் பாச்சி இறந்துபோனாள் பாச்சி இறந்துபோனாள் என்று இடைவெட்டி இடைவெட்டி, கதையை பிளாஷ்பேக்குத் துண்டுகளாகச் சொல்லிச் செல்கிறார். இந்தக் கதை 1966ல் எழுதப்பட்டிருக்கிறதென்றால் சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.

பாச்சி அவனிடம் எப்படி வந்து சேர்ந்தது எப்படி இருந்தது என்பது ஒரு இழை என்றால் நாணு என்கிற சாலைக் கடைதெருவில் மூட்டை சுமக்கும் மனிதனின் வாழ்க்கைக் கதை, அம்மா எவனோடோ ஓடிப்போய் அப்பா ஏதோ கடைச் சண்டையில் செத்துப்போய் யாருமற்று சேரியில் தொடங்குகிறது. சாலைக்கடையில் மூட்டைத் தூக்கும் கூலியாகி, காலில் ஆணி வந்து நடக்கவே முடியாத நிலைக்குப்போய், வேலை கொடுக்க ஆளில்லை ஆகவே வாழ்வில் ஒன்றுமில்லை என்கிற நிலையில், யதார்த்தம் அவனை வெறிக்கும்போது, பாச்சியின் உதவியால் அவன் வாழ்நிலை, இனி பாரம் சுமக்கவேண்டியதில்லை என்கிறவிதமாய் சற்றே உயர்கிறது.

எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் என நாய் போல அலையும் மனித குலத்தில், நாணு போன்ற எளிய மனிதர்கள், தங்களது வாழ்வு இருப்பதைவிட சற்று உயர்வதிலேயே நிறைவடைந்துவிடுகிறார்கள். அந்த வேலையே பாச்சியின் உதவியால் கிடைத்ததாக நன்றியோடு நினைப்பதால்தான், தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைபற்றிப் பெரிதாக எந்தப் புகாருமே இல்லாத நாணுவுக்கு அந்த நாயின் இழப்பு பெரிதாகத் தோன்றுகிறது.

கதையை உணர்ச்சிப் பிழம்பாக்கி உருகி உருகி எழுதி வாசகனை அழவைக்க ஆ. மாதவன் எள்ளளவுகூட முயலவில்லை. விளிம்புநிலை மனிதர்கள் என்பதற்காக, முற்போக்கு முலாம் பூசிக்கொண்டு எல்லோரையும் குணக்குன்றுகளாகவும் சித்தரித்துவிடவில்லை. நாணுவைத் தவிர எல்லோருமே பாச்சியை நாயாகவும் அலட்சியமாகவும் அந்த நாய்க்கும் நாணுவுக்குமான நெருக்கத்தைச் சிரிப்பிற்குரிய விஷயமாகவுமே பார்க்கிறார்கள். சேட்டுக்கு இருக்கிற ஈரம் கூட மற்ற விளிம்புநிலை மனிதர்களுக்கில்லை.

சின்னச் சின்ன கோடுகளில் எத்தனை மனிதர்களின் முகங்கள் தெளிவாக உருப்பெற்றுவிடுகின்றன என்பது கதையைச் சம்பவங்களாகப் படித்துக்கொண்டு போகாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்கிற வாசகனுக்கு துல்லியமாக விளங்கும்.

கதையில் நாணுவின் வாழ்க்கை மட்டுமல்ல, பிற மனிதர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, சாலைக்கடையின் மாறுதல்களும் வரலாறாக ஒரே பத்தியில் ஆவணமாக்கப்படுகிறது.

கதை என்பது பொழுதுபோக்கிற்காகவோ கொள்கையை நிறுவுவதற்காகவோ சும்மா கதைவிடுவதில்லை என்பதற்கு இந்தக் கதையைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு இருக்கமுடியாது. போலவே, கதை என்று எழுதப்படுபவை எல்லாம் ஏன் இலக்கியமென்று கொண்டாடப்படுவதில்லை என்பதற்கும் இதைவிடச் சரியான உதாரணம் இருக்கமுடியாது. 

அரும்பு இதழ்: ஜூலை 2018