July 26, 2018

தர்ப்பணம் சிறுகதை – சார்வாகன்

முன்சீப் ராமச்சந்திரன் குட்டிபோட்ட பூனைபோல் உள்ளுக்கும் வாசலுக்குமாக அலைந்துகொண்டிருந்தான்.முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சீ, சனியன்! யாரது வழியிலே பலகாயைப் போட்டது?”

எட்டி உதைத்தான். சீனு, கடைசி மகன். கூனிக் குறுகிக் கொண்டு மணையை நகர்த்தி வைத்தான்.

“டே சீனு, எங்கே போய்த் தொலைஞ்சான் அந்த முனுசாமி. வாத்தியாரைக் கூட்டிண்டு வரத்துக்குப் பிரம்ம தேசமே போய்ட் டான் போல இருக்கே. தெருக்கோடி வரைக்கும் போய்ப் பாரு. வரலேன்னா நீயே போய் கையோட அவரை அழைச்சுண்டு வா.”

சீனு ஓடி மறைந்தான். முன்சீப் மீண்டும் கூண்டுக் கரடியாய் அலைய ஆரம்பித்து விட்டது.

“சனியன்கள், இந்த வைதிகன்களுக்கெல்லாம் வர வர திமிர் ஜாஸ்தியாய் போச்சு. ஏழு மணிக்கே வரன்னான் மனுஷன், மணி எட்டாகப் போறது, இன்னும் ஆளையே காணம்.”

“ஏன்னா, கொஞ்சம் ஒக்காந்துக்கறதுக்கு தானே, தானே வரார். வயஸானவரைப் போயி ஏன் வையறேள்?”இது அவன் சகதர்மிணி சுந்தரகாமாட்சி, இரட்டை நாடி உடம்பிலிருந்து ஈனசுரத்தில் பேசினாள் அவள்.

“இந்தப் பாழாப்போன ஊர்லே வேறே முக்கியமான சாஸ்திரி யும் கிடையாது. எல்லாரும் கிராப் வெட்டிண்டு சினிமாப் பாத்துண்டிருக்கான். இருக்கிற ஒருத்தனுக்கும் தான் மகாபிரகஸ்பதின்னு எண்ணம்”என்று முணுமுணுத்துக்கொண்டே ஸ்டூலின் மேல் உட்கார்ந்தான் ராமச்சந்திரன். கடிகாரம் ஓடிக்கொண்டே இருந்தது.

சங்கர சாஸ்திரிகளுக்கு வயது அறுபதைத்தாண்டி எழுபதை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது. காய்ந்த முருங்கைக் காய்உடம்பு. வியர்வையால் மூல விக்கிரகம் போல பள அடர்ந்து நரைத்த புருவத்தினடியில் இரு விழிகள் சிம்னி விளக்குப்போல மினுக்கிக்கொண்டிருக்கும். வெள்ளையெல்லாம் புழுதியடைந்த கண்கள். கண்களுக்கும் மோவாய்க்கு பாலம் போட்டாற் போல் மூக்கு. கீழே பஞ்சு மாலை போல மீசை தாடி மார்பை மறைத்தது. தாடியினடியிலிருந்து பூணல் ஒட்டிய வயிற்றையும் உலர்ந்த உடம்பையும் சுற்றளவு பார்த்துக்கொண்டிருந்தது. தோய்த்துத் தோய்த்துக் காவியேறியிருந்த கச்சம் போட்டுக் கட்டிய வேஷ்டி தொடைகளைக் கூட முழுசாக மறைக்க முடியாமல் இருந்தது. இந்த அழகில் கிழிசல் வேறு.

“மீனாட்சி, நாளைக்குக் கார்த்தாலே எழுப்பீடு. முன்சீப்பாத்துக் தர்ப்பணத்துக்குப் போகணும். நேரத்துக்குப் போகலேன்னா கழுகாக் கொத்தியெடுத்திடுவான், அந்தக் கிராதகன்” என்று சொல்லிவிட்டுத் தெருத்திண்ணைக்குத் துண்டை எடுத்துக் கொண்டு போனவர் சூரியன் சுளீரென்று மேலே உறைத்தபோது தான் விழித்துக்கொண்டார்.

“என்ன கஷ்டம், எனக்குத்தான் வயசாச்சுன்னா இவளுக் கும்னா என்னைவிட மறதியாயிட்டிருக்கு” என்ற முனகிக்கொண்டே உள்ளே போய் ஒரு செம்பை எடுத்துக்கொண்டு பூணூலைக் காதில் மாட்டிக்கொண்டு வெளியே ஓடினார். அந்தக்’கொத்தவால் சாவடி’யில் இந்த வேளைக்கு குளிக்கவோ அல்லது வேறெந்தக் காரியத்துக்குமோ இடம் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். மூன்று பர்லாங்கு தூரத்தில் அப்போதுதான் வறள ஆரம்பித்துக் கொண்டிருந்த ஏரியும் வாய்க்கால் கரையும்தான் அவருக்கு அடைக்கலம்.

திரும்பி வரும்போது சூரியன் நன்றாக மேலே ஏறிவிட்டிருந்தான். அவர் மனசு உதைத்துக்கொண்டது.

“சாமிநாதா. மணி என்ன சொல்லேன்? என்றார் சாஸ்திரி. வீட்டிற்குள் நுழைந்துகொண்டே. அடுப்பை ஊதிக் கொண்டிருந்த சாமிநாதன், ‘மணி ஏழரையாறது சாஸ்திரிகளே’ என்றான். சாமிநாதன் அந்தக் கொத்தவால் சாவடியிலிருந்த ஒண்டுக்குடித்தனங்களுள் ஒரு குடி. அவன் வீட்டில் என்றும் அவன்தான் சமையல். அவன் மனைவி மீனா எப்போதும் இடுப்பில் ஒரு குழந்தையும் வயிற்றில் ஒரு குழந்தையுமாகத்தான் இருப்பாள். சாதாரணமாக மேற்கொண்டு ஒரு குழந்தை பிறக்கும்போது முந்தியதில் ஒன்று போய்விடும். வாந்தியோ பேதியோ ஜூரமோ ஏதா”சென்ஸஸ்’ஸைச் சரிசெய்து விடும். எல்லாம் சாதாரணமாக தீர்க்கக்கூடிய தடுக்கக்கூடிய நோய்கள்தான் எப்படியோ இயற்கையே சாமிநாதன் விஷயத்தில் இந்த மாதிரிக்கட்டுப்பாட்டைச் செய்துகொண்டிருந்தது. மீனாவுக்கு இப்போது அஞ்சாவதோ ஆறாவதோ. இத்தனைக்கும் சாமிநாதன் பொறுப்புணர்ச்சி மிக்கவன். கொத்தவால் சாவடியில் அவனிடம் மாத்திரமே கடிகாரம் இருந்தது. தினமும் போஸ்டாபீஸில் பார்த்துக் கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளுவான்;சாவடியில் எல்லாரும் பணிக்கு இவனைத்தானே நம்பிக் கொண்டிருந்தார்கள்?

சாமிநாதனிடம் மணி கேட்டுக்கொண்டே சங்கர சாஸ்திரி தாமாக முன் தாழ்வாரத்தைத் தாண்டி பாசி பிடித்த முற்றத்தை சர்க்கஸ்காரன் கம்பிமேலே நடக்கிற மாதிரிக் கடந்து கொண்டிருந்த போது’சாஸ்திரிகளே’ என்று சாமிநாதன் கூப்பிட்டது கேட்டுத் திரும்பிப் பார்த்தார்.

“சாஸ்திரிகளே, முன்சீப் வீட்டிலேந்து ஆள் வந்திருக்கான்” மனுசாமியின் பரட்டைத் தலை கதவோரத்திலிருந்து எட்டிப் பார்த்துவிட்டு மறைந்துகொண்டது. “வந்துண்டேருக்கேன்னு சொல்லுடாப்பா” என்றார் சாஸ்திரி. “சாஸ்திரிகளே, இந்தாங்கோ, நேத்திக்கிச் சாயங்காலம் இந்தக் கடிதாசு வந்துது. மீனாட்சின்னு போட்டிருக்கவே தனக்காக்கும்னு இவ வாங்கிண்டுட்டா, ஆனா இது உங்காத்துக்கு வந்திருக்காப்பல இருக்கு” என்று ஒரு கையில் இரும்புக் கரண்டியையும் மற்றொரு கையில் ஒரு கார்டையும் வீசிக்கொண்டு மறுபடியும் கூப்பிட்டான் சாமிநாதன். சாஸ்திரி மெதுவாகத் திரும்பி வந்து சாமிநாதன் கையிலிருந்த கடிதத்தை ஒரு கையில் வாங்கிக்கொண்டு, இன்னொரு கையில் செம்பையும் ஈர வேஷ்டியையும் தூக்கிப் பிடித்தபடி மீண்டும் ஒருமுறை முற்றத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்தார். ‘எனக்கு யார் எழுதுவா? கிட்டுவாத்தான் இருக்கணும்’ என்று நினைத்தபடி உள்ளே போனார்.

உயிரோடிருந்த அவர் சந்ததிகளில் ஒரே ஒரு ஆண் வாரிசு கிட்டு. அந்தக் காலத்தில் பிறந்த அருமைப்புத்திரன், இவருக்குக் கொள்ளி வைக்கவும் எள்ளும் தண்ணீரும் இறைக்கவும் பாத்தியதையுள்ள ஒரே ஜீவன். அணில் போல இவர் சேமித்து வைத்திருந்த அறுபது எழுபது ரூபாயை வாங்கிக்கொண்டு வேலை தேடுவதற்காகச் சென்னைக்குப் பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன் போயிருந்தான். முன்சீப் ராமச்சந்திரன்தான் யாருக்கோ சிபாரிசுக் கடிதம் கொடுத்திருந்தார். அதையும் கையில் எடுத்துக் கொண்டு போனவனிடமிருந்து இதுவரை தகவலே இல்லை. ‘அவன்தான் எழுதியிருக்க வேண்டும், என்ன எழுதியிருக்கிறான்’ என்று பார்க்கக் கூரை விட்டத்தைத் துழாவி இரும்பு பிரேம் போட்ட வெள்ளெழுத்துக் கண்ணாடியை மாட்டிக்கொண்டு பின் தாழ்வாரத்தைத் தாண்டிக் கொல்லைப்புறம் வந்தார் வெளிச்சத்துக்காக.

“அன்புள்ள அம்மாவுக்குக் கிட்டு அநேக நமஸ்காரம்.  க்ஷேமம்.  க்ஷேமத்திற்கு எழுதவும். முன்சீப் கொடுத்த கடுதாசை சுப்பிரமணிய ஐயரிடம் கொடுத்தேன். தற்போது வேலையில்லை, ஆனாலும், ஒண்ணு விட்டொரு நாளைக்கு, பார்க்கணும்னு சொன்னார். நான் மூன்றாந்தரம் போய்ப்பார்த்த போது, ஆராவமுதய்யங்கார் என்கிறவர்க்கு ஒரு கடிதாசு கொடுத்தார். நானும் போய்ப் பார்த்தேன். என் கடையிலே வேலை செய்ய நம்பகமான நல்ல பிராமணப்பிள்ளை வேணும். வேலை செய்ய இஷ்டமா? அப்பா என்ன செய்கிறார், நான் என்ன படிச்சிருக்கிறேன்– என்றெல்லாம் கேட்டார். கடைசியிலே வேலைக்கு வெச்சுக்கறேன், ஐம்பது ரூபாய் டெபாசிட் கட்டணும் என்றும் சொன்னார். நானும் சரின்னு சொல்லிவிட்டேன். மறுநாள் போய்ப் பார்த்தா அது செருப்புக்கடை, வரவா காலிலே அவாளுக்கு வேணுங்கிற செருப்பை மாட்டிச் சரியாயிருக்கான்னு பார்க்கணும். வியாபாரம் பண்ணணும். நான் அவர்கிட்டே போய் என்ன சார் நீங்க செருப்பு கடைன்னு சொல்லலியேன்னு கேட்டேன். அவருக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. நானே இருக்கிறபோது ஒனக்கென்னன்னு சத்தம் போட்டார். ‘சென்ட் கடையிலேதான் வேலை செய்வியோ என்று கேலி பண்ணினார். அந்த வேலை வேண்டாம் என்று நான் வந்துவிட்டேன். ஒரு வாரம் வேறே வேலைக்காக ஊரெல்லாம் அலைஞ்சு கஷ்டப்பட்டேன். தலைக் குடுமியைப் பார்த்துவிட்டு எல்லாரும் கேலி பண்ணறா. மறுபடியும் ஆராவமுதய்யங்கரிடம் போய்க் கெஞ்சி கேட்டுண்டேன். முதலிலே ஒண்ணும் முடியாதுன்னுட்டார். அப்புறம் போனால் போகிறது, பிராமணப் பிள்ளையா யிருக்கே, வேலைக்கு எடுத்துக்கறேன். ஆனா உடனே போய்க் குடுமியை சிரச்சிண்டுவான்னார். நேத்திக்கே போய் மொட்டை அடிச்சுண்டு விட்டேன். நான் செருப்புக் கடையிலே இருக்கிறதை அப்பாகிட்டே சொல்லாதே, கேட்டா அப்பா ரொம்பக் கஷ்டப்படுவார். நீயும் கஷ்டப்பட்டுக்காதே. மாசம் ஐம்பது ரூபாய் சம்பளம். நன்னா வேலை செய்தா இன்னும்கூட ஒசரும். செருப்பு வித்துச் சம்பாதிச்சா என்ன, பணம் நாறவா போகிறது? ஆனா தயவுசெய்து இதை அப்பாகிட்டே சொல்லிடாதே.”

இப்படிக்கு

உன் பிரியமுள்ள கிட்டு.

முக்காலணா கார்டில் கிட்டு நுணுக்கி நுணுக்கி எழுதியிருந்தது. சாஸ்திரியின் மனத்தைப் பெரும் பாரமாக அழுத்தியது. விஷயம் மனத்தில் இறங்க அவருக்குப் பகீரென்றது. மனம் சூனியமாயிற்று. உலகே இருண்டு அவர் உள்ளத்தை ஒடுக்கிப் பிதுக்கிக் கசக்கி விட்டது. ‘கிட்டூ, என்னடா பண்ணீட்டே’ என்று அந்தராத்மா அலறியது. நோஞ்சான் கால்கள் பின்னலிட தன் தன் மனைவியைப்பார்க்க உள்ளே ஓடினார். அவர்’வீடான பின் தாழ்வாரத்திலிருந்த ஓர் இருட்டறையில் உறங்கிக்கொண்டிருந்த மீனாட்சியம்மாள் இன்னும் எழுந்திருக்கவில்லை. ‘என்ன மூதேவியாட்டமா இன்னும் தூக்கம்’ என்று முனகிக்கொண்டே அவளை உலுக்கினார்.

மீனாட்சியம்மாளுக்குச் சரியாக அறுபது வயது. ஆனால், பார்ப்பதற்கு எண்பது போலிருக்கும். தும்பைப் பூத் தலை. ஒட்டிய கன்னங்கள். பற்கள் அற்ற வாய், வற்றிய உடம்பு. உலர்ந்த சுள்ளி போன்ற கணுக்குக் கணு வீங்கிய விரல்கள். காலணா அகலத்துக்கு நெற்றியில் குங்குமம். வண்ணமெல்லாம் போய்ப் புழுதி நிறமான புடவை. அதுதான் மீனாட்சியம்மாள்.

அவள் கண்கள் மூடியிருந்தன. புடவைத் தலைப்பு நழுவி, வாடிய மார்பு சரிந்து கிடந்தது. முகத்தின் சுருக்கங்களெல்லாம் ஒரு படிமானத்துக்கு வந்து அசாதாரணமான சாந்தத்தைக் காட்டியது. அறுபது வருடம் ஓடியாடி உழைத்த அலுப்புத் தீர ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போன்றிருந்தது. சாஸ்திரி அவளை உலுக்கினார். உடம்பு சில்லென்றிருந்தது.

‘பிள்ளை உயிரோடு செத்தான், பிராமணப் பிள்ளை நீசனாகி விட்டான். இவளோ போய் வருகிறேன் என்றுகூடச் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டாள். ராமா, ஏன் என்னை அந்திம காலத்தில் இப்படி வதைக்கிறாய்’ என்று அவர் மனம் அரற்றியது. வறண்ட கண்களுடன் வெறித்த பார்வையுடன் தலைமேல் கை வைத்து அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

“சாஸ்திரிகளே, சாஸ்திரிகளே”

யாரோ கூப்பிட்டார்கள். மெதுவாக வெளியே வந்தார். சாமிநாதன்தான். அவன் பின்னால் சீனு, முன்சீப்பின் கடைசிப் பிள்ளை, ஒண்டிக்கொண்டிருந்தான்.

சாஸ்திரிகளே, அப்பா காத்துண்டிருக்கா, சீக்கிரம் வாங்கோ, கோவிச்சுக்கறா, தர்ப்பணம் பண்ணீட்டு வெளிலே போணுமாம், ரொம்ப டயம் ஆயிடுத்தாம்”

சீனு தெத்திக்கொண்டிருந்தான்.

“ஆமா, ஆமா, தர்ப்பணம் பண்ணணும், பண்ணட்டும்” என்று முனகியபடி சாஸ்திரி மீண்டும் உள்ளே சென்றார். சாமிநாதனும் சீனுவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

உள்ளே போனவர் மீனாட்சியம்மாளின் சடலத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் நின்றார்.

‘மீனாட்சி, நீ அதிருஷ்டசாலி, குங்குமத்தோடே போய்ட்டே. பிள்ளை பஞ்சமன் ஆனது தெரியறதுக்குள்ளே கண்ணை மூடீட்டே. என்னை மட்டும் லோகத்திலே தனியா விட்டூட்டே’ என முணுமுணுத்தபடி புடவைத் தலைப்பைச் சரி செய்தார். கீழே கிடந்த கிட்டுவின் கடிதத்தை, மூலையிலிருந்த தகரப் பெட்டியினடியில் தள்ளினார். நெடுமூச்சை விட்டபடி வேஷ்டியால் மூக்கைக் கொண்டு முன் தாழ்வாரத்துக்கு வந்தார்.

சீனு மாத்திரம் நின்றுகொண்டிருந்தான். கையோடே அழைச்சிண்டு வரச்சொன்னா அப்பா’ என்று மெலிந்த குரலில் சொன்னான். ‘வாடாப்பா போகலாம்’ என்று சாஸ்திரி சொன்னதும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் பின் தலையைத் தாழ்த்திக்கொண்டு ஆடுபோல அவருடன் நடக்க ஆரம்பித்தான். பிஞ்சும் பழமும் தர்ப்பணப் பிரயாணத்தைத் தொடங்கின.

“என்ன ஒய், இவ்வளவு லேட் பண்ணீட்டீர், நான் வேலைக்குப் போகறதா, இல்லே ஒமக்காக நாளெல்லாம் இங்கேயே காத்துண்டுருக்கறதா, சீக்கிரமா சட்டுப்புட்டுனு முடியும்” என்று உறுமினபடியே ராமச்சந்திரன் உட்கார்ந்தான். ஒற்றைநாடி தேகம். சைனாக்காரன் தாடிபோல அங்கொன்றும் இங்கொன்றுமாக நெஞ்சிலே முடி. சிறு பானையைக் கட்டி வைத்த மாதிரி குட்டித் தொந்தி. தொடையின் பின்புறம் மேல்வரை தெரியக் கட்டிய பட்டு வேட்டி, அது அவிழ்ந்துவிடாமல் இருக்க இடுப்பில் பட்டு அங்கவஸ்திரக் கச்சை, கழுத்துப்பிடியில் வியர்வை, நெற்றியிலும் புஜத்திலும் திருநீற்றுப் பட்டைகள், ‘ரோல்டு கோல்டு’ பிரேம் போட்ட கண்ணாடி சகிதம் மனைமேல் உட்கார்ந்தான் ராமச்சந்திரன்.

“டேய்! சாஸ்திரிகளுக்கு மணை கொண்டா”

தர்ப்பணம் தொடங்கியது. சங்கர சாஸ்திரி வெற்று மனத்துடன் யந்திரம்போல மந்திரம் ஓத ஆரம்பித்தார். “சுக்லம் பரதரம்…… பூணூலை மாலையாப் போடறது..தர்ப்பையை கையிலே எடுத்துக்கறது…”

அவர் வாய் ஓடிக்கொண்டிருந்தது. கண்கள் மெதுவா தன்னையறியாமல் மூட ஆரம்பித்தன. தலைக்குள் உலைக்களம் போலச் சூடு. யாரோ சம்மட்டியால் அடிக்க ஆரம்பித்தார்கள். மிக்கப் பிரயாசைப்பட்டுக் கண்களைத் திறந்தார்.

“என்ன சாஸ்திரிகளே, ஒடம்பு சரியாயில்லியா என்ன வேணுன்னா ஒரு லெட்டர் தரேன். போயிக் கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலே காமியுங்கோ” என்றான் ராமச்சந்திரன்.

உடம்புக்கு ஒன்றுமில்லை என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினார் சாஸ்திரி. தலைக்குள் குழம்பு கொதித்தது. கூழாங்கற்கள் உருண்டு மோதிப் பீரங்கிக் குண்டுகளாகக் கனத்தன.

“லெட்டராம் லெட்டர், என்ன லெட்டர், கிட்டுவுக்குத் தந்தேளே, ஒங்க பவிஷு லெட்டர் அவனை ஒழிச்சது போரும், என்னையும் சாக்கிறதுக்கா, நான் தரேன் சித்திரகுப்தனுக்கு லெட்டர், கொண்டு போய்க் காமியும்” என்று சாஸ்திரியின் வாய் சொன்னது. ஆனால், சொற்கள் ஒன்றோடொன்று பின்னிப் புரண்டன. ராமச்சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“தாயார் பேரைச் சொல்லுங்கோ.”

“மீனாட்சியம்மாள்” என்றான் ராமச்சந்திரன்.

“மீனாட்சி போயிட்டியேடீ!”

சவுக்காலடிபட்டது போல ராமச்சந்திரன் துள்ளியெழுந்தான். சங்கர சாஸ்திரியின் சூனியப் பார்வையும் அவர் அரைக்கண்ணை மூடியபடி இருந்ததும் அவன் அடி வயிற்றை என்னமோ செய்தது. நா எழும்பவில்லை.

சாஸ்திரி கண்ணை மூடித்திறந்தார். ஆயிரம் ஆண்டுகள் வேலை செய்தாற்போலக் கண்களிலே அலுப்பு.

“ஒக்காருங்கோ, இன்னும் முடியலியே.”

ராமச்சந்திரன் மெதுவாக வந்தான்.

“சாஸ்திரிகளே, ஒங்களுக்கு ஒடம்பு சரியாயில்லை. நீங்க நேரே போய் டாக்டரைப் பாருங்கோ” என்று சொன்னபடி மணையின் விளிம்பில் உட்கார்ந்தான். கிலியும் கேள்வியும் குடிகொண்ட முகத்துடன் சுந்தரகாமாட்சி எட்டிப் பார்த்தாள். சீனு ஜன்னலுக்குப் பின் ஒளிந்துகொண்டான்.

“ஆமா, ஆமா, வயசாச்சோல்லியோ, ரொம்ப அசதியாயிருக்கு, சரி, உத்தரணியை எடுங்கோ…”

மந்திர மெஷின் மீண்டும் தொடங்கியது.

ராமச்சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. மௌனமாகத் தலையை ஆட்டிக்கொண்டே சாஸ்திரியை ஓரக்கண்ணால் கவனித்தபடி உத்தரணியை எடுத்தான். கொஞ்ச நேரம் ஓடிக் கொண்டேயிருந்து பின் மெஷின் திடீரென்று நின்றது.

ரகசியமான குரலில், “அவளை இன்னும் எடுக்கல்லே. நான் கூடத் தீட்டு. அக்னி வெக்கிறதுக்கும் ஆளில்லே…” சாஸ்திரி பேசிக் கொண்டிருந்தார். கண்களில் ஒளியில்லை.

ராமச்சந்திரன் பூனைபோல் எழுந்து அடிமேல் அடிவைத்துப் பின்னம் புறமாக நடந்து சமையல் கட்டுக்குள் போனான்.

“சாஸ்திரி என்னமோ பேத்தறார், சித்தப் பிரமை போலிருக்கு. இல்லை ஜன்னியோ” என்று சுந்தரகாமாட்சியின் காதில் ஓதினான்.  மிரண்ட முகத்துடன் அவள் தலையை ஆட்டினாளே தவிர ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் சந்தடி செய்யாமல் வந்தான். சங்கர சாஸ்திரி எதிரே இருந்த தாம்பாளத் தண்ணீருடன் ரகசியமாக என்னமோ பேசிக்கொண்டிருந்தார். அவன் காதில் ஒன்றும் சரியாக விழவில்லை. சுமங்கலி… பஞ்சமன்… கலி… அக்கினி… பிராமணன்… காயிதம் என்று அங்குமிங்குமாய் சம்பந்தமற்ற சொற்கள். ஓசைபடாமல் வந்து மணைமேல் உட்கார்ந்து சாஸ்திரியை நோக்கினான்.

கண்களிலிருந்து வடிந்துகொண்டிருந்த நீர்தான் அவருக்குக் கண்கள் இருந்தன என்பதைக் காட்டின.  

“சாஸ்திரிகளே, சாஸ்திரிகளே” என்று மெதுவாகக் கூப்பிட்டான்.

தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்திருப்பவனைப் போலத் தலையைத் தூக்கினார் சங்கர சாஸ்திரி.

“க்ஷமிக்கணும், ரொம்ப ஆயாசம், தூங்கிட்டேன் போலிருக்கு, சீக்கிரம் முடிச்சுப்பிடறேன், கோவிச்சுக்காதீங்கோ.”

மந்திரம் மீண்டும் ஆரம்பித்தது. எப்படியோ சீக்கிரம் முடிந் தால் போதும் என்று ராமச்சந்திரனும் ஒத்தூத ஆரம்பித்தான். ஆனால், அவன் சாஸ்திரியை விட்டுக் கண்ணை எடுக்கவில்லை.

ஒரு வழியாக வேறு தடங்கலின்றித் தர்ப்பணம் முடிந்தது.

ராமச்சந்திரன் உள்ளே போய்க் கையில் ஒரு’கவரு’டன் வந்தான்.

“சாஸ்திரிகளே, டாக்டருக்கு லெட்டர் எழுதி வெச்சிருக்கேன். உள்ளே தட்சிணையும் இருக்கு. ஒங்களுக்கு ஒடம்பு சரியில்லே, நேரே ஆஸ்பத்திரிக்குப் போங்கோ” என்று குழந்தைக்குச் சொல்லுவதுபோலச் சொன்னான்.

சாஸ்திரியின் கண்ணில் மின்வெட்டு ஒன்று தோன்றி மறைந்தது.

“சீ, அஸத்து, என்னை என்ன செம்படவச்சீன்னு நெனச்சுட்டயா பணத்தைக் கொடுத்து வாங்கிக்க?” என்று அசாதாரணமான குரலில் உரத்துச் சொன்னார் சாஸ்திரி.

ராமச்சந்திரனுக்கு’திக்’கென்றது. தன் முந்தைய பலஹீனங்கள் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. சாஸ்திரி பேசிக்கொண்டே போனார். கூச்சல் கூப்பாடு எதுவும் போடாமல் ஆனால், வழக்கத்தைவிடச் சிறிது உரத்த குரலில் நிறுத்தி நிதானமாக அழுத்தந் திருத்தமாகப் பேசிக்கொண்டே போனார். அவர் குரலில் உயிரில்லை. கல்லறையிலிருந்து சவம்பேசுவது போலக் குளிரும் பாழும் கூடிக்கிடந்த குரலில் பேசிக்கொண்டே போனார்.

‘ஒங்க மாதிரி ஜாதிகெட்ட ஜென்மாக்கள் கிட்ட கையேந்திக் கையேந்தித்தான் எனக்குப் பாபமும் சாபமும் வந்து தொலைச்சிருக்கு. ஒனக்குப் பூணூல் போட்டேனோ இல்லியோ அதுனாலே நீ பண்ற பாபகிருத்தியங்கள்ளாம் என்னை வந்து வந்து அண்டிட்டிருக்கு. நீ ஒருநாள் ஆத்மார்த்தமா பூஜை பண்ணிருப்பியா, ஒரு ஸத்ஸங்கம் உண்டா, பெரிவாளை மதிச்சதுண்டா. ஒங்க பவிஷு தெரிஞ்சிருந்தும் கேவலம் கால் ரூபாய்க்காக ஆசைப்பட்டுண்டு ஒங்க காலடியிலே வந்து விழறேனே அந்தப் பாவம்தான் என்னை ஆட்டி வைக்கிறது. அதான் லோகமே பிராம்மணாள்னா தூஷிக்கிறது. ஊருக்கெல்லாம் எள்ளும் தண்ணியும் இறைச்சுட்டு எனக்கு இறைக்கிறதுக்கு ஆளில்லாமே அடிச்சுட்டியே, ஒங்கிட்டேயிருந்து தட்சணையும் வாண்டாம், லெட்டரும் வாண்டாம், எனக்கு என்னத்துக்கு வைத்தியம்? மொதல்லே ஒங்க ஆத்மாக்களுக்கு வைத்தியம் பண்ணிண்டு வாங்கோ, இல்லாட்டா பிரம்ம ராட்சஸா அலைவேள். மீனாட்சி புண்யவதி, போய்ட்டா. நான்தான் இன்னும் ஆசையை விடாமே உசிரைப் பிடிச்சுண்டு ஆமை மாதிரி உக்காந்துண்டு இருக்கேனே மகா பாபி. ஒன் லெட்டரை நீயே வெச்சுண்டு கிட, என் பிள்ளையை உசுரோடே கொன்னது போதும், என்னையும் ஒங்க சாக்கடையிலே விழச் செய்யாதே!”

இதுவரை அணைந்திருந்த அவர் கண்கள் திடீரென்று அனல் கக்கின. ‘மகா பாபி, மகா பாபி, எனக்கு யாருடா தர்ப்பணம் பண்ணுவா,’ என்று உரத்த குரலில் கூவிக்கொண்டு’மடேர் மடேர்’ என்று தலையில் அடித்துக்கொண்டு அப்படியே தெருவில் இறங்கினார் சங்கர சாஸ்திரி இன்னும் அலைந்துகொண்டுதான் இருக்கிறார்.

இப்போதெல்லாம் அது நடுரோட்டில் நின்றபடி மந்திரம் ஓதிக் கொண்டிருக்கும். யாராவது போய், ‘என்ன ஸ்வாமீ பண்றீர்?’ என்று கேட்டால், ‘தர்ப்பணம் பண்றேண்டா, தர்ப்பணம் பண்றேன். எங்க அப்பாவுக்கு, அம்மாவுக்கு, தாத்தாவுக்கு, பாட்டிக்கு, பிள்ளைக்கு, பேரனுக்கு, எங்க வம்சத்துக்கே தர்ப்பணம் பண்றேன், லோகத்துக்கே பண்றேன். ஒனக்கும் பண்ணட்டுமா, ஒண்ணரேணாகூடசெலவில்லாமே பண்ணறேன். ஆனா மந்திரத்துக்கெல்லாம் அர்த்தம் கேட்டுக்கணும்” என்று பதில் வரும். அதுதான் சங்கர சாஸ்திரி.

ஊரில் பலருக்கும் இவரால் பல கவலைகள். வேறே நல்ல வாத்தியார் கிடைக்கலியே என்று சுந்தர காமாட்சிக்குக் கவலை. ராமச்சந்திரனுக்கோ எங்கே’செம்படவச்சி சமாசாரம்’ வெளியில் வந்துவிடுமோ என்று கவலை. உள்ளூர்ச் சனாதனிகளுக்கோ நல்ல பிராமணன் பைத்தியமாகப் போயிப் பாயைச் சுரண்டறதே என்று கவலை. பள்ளிக்கூடம் போகும்போது பைத்தியம் தன்னை ஏதாவது பண்ணிவிடுமோ என்று சீனுவுக்குக் கவலை. சங்கர சாஸ்திரியைக் கேட்டால்’நீங்கள்ளாம் பிரம்ம ராட்சஸாப் போயிண்டிருக்கேளேன்னுதான் எனக்குக் கவலை’ என்கிறார். ஆனால், தனக்குத் தர்ப்பணம் செய்ய ஆளில்லையே என்பதுதான் அவருடைய உண்மையான கவலை என்று எல்லோரும் சொல்லிக் கொள்கிறார்கள். கிட்டு என்னமோ சாஸ்திரிக்குத் தர்ப்பணம் செய்யத் தயாராயிருக்கிறான். இருந்தாலும் கவலை யாரை விட்டது போங்கள்! 

நன்றி: நற்றிணை பதிப்பகம்

***** 

புனைவு என்னும் புதிர்

சார்வாகன் சிறுகதைதர்ப்பணம்

இலக்கியம் இல்லாமல், தெரியாமலேகூட ஒருவர் வாழ்ந்துவிடமுடியும். ஆனால் அரசியல் இல்லாத மனித வாழ்வு சாத்தியமே இல்லை என்பது உண்மைதான். அதற்காக வாழ்க்கை என்பது முழுக்க அரசியல் மட்டுமேவும் இல்லை. 

சமூகநீதி விழிப்புணர்வு ஆகியவை மனித வாழ்வை மேம்படுத்த உருவானவை. சாதிய சார்புகளில் இருந்தும் இழிவுகளில் இருந்தும் வெளிவருவது என்பது காலத்தின் கட்டாயம். மனித வளர்ச்சியில் அத்தியாவசியம். ஆனால் அது குறித்த ஒட்டுமொத்தமான வரலாற்றுப் பார்வையும் தெளிவும் முக்கியம். 

தொழில்நுட்பமும் ஊடகங்களும் ராட்சத வளர்ச்சியை அடைந்தும் நல்ல இலக்கியம் இன்னமும் பரவலாகாமல் இருப்பதற்கு -குறிப்பாக இன்றைய இளைஞர்களிடம் இலக்கியம் / அரசியல் பற்றிய புரிதல் முழுமையுடன் இல்லாதிருப்பதே முக்கியமான காரணம்.

இலக்கியம், தனிமனித வாழ்வை மைக்ராஸ்கோப் பார்வையில் நெருங்கிப் பார்க்கிறது. அரசியல், சமூக வாழ்வை பறவைப் பார்வையில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறது. இரண்டையும் குழப்பிக்கொள்கிற இளைஞர்கள் இலக்கியத்தை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள் அல்லது வட்டாரவழக்கு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் பேச்சுவழக்கு ஆகியவற்றைக் கலாச்சாரம் என்கிற பெயரில் சாதிரீதியானவை அல்லது சாதியத்தைப் பலப்படுத்துபவை என்று ஒதுக்கிவிடுகிறார்கள். 

வெகுஜனப் பத்திரிகைகள் காற்றடிக்கும் திசையில் கலத்தை ஓட்டுபவை எனவே அவை, காலத்துக்கு ஏற்றாற்போல் கதைகளை சகஜமாக ஜனநாயகப்படுத்திவிடுகின்றன. நாளையே எதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கை ஓங்கினால் அதைத் துதிபாடவும் அவை தயங்கமாட்டா என்பதே வரலாறு. எனவே வெகுஜன பரப்பில் எந்த அடையாளமுமற்று எழுதப்படுவற்றை உயர்வாகவோ முற்போக்கானவை என்றோ எண்ணிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதன்றி வேறில்லை.

சாதியையும் சாதியத்தையும் ஒழிப்பதே மேன்மை எனில் ஏன் சாதிய வழக்கு சமூக சடங்கு சம்பிரதாயங்களுடன் இலக்கியம் எழுதப்படவேண்டும். இவற்றைத் தவிர்க்கலாகாதா. திரும்பத் திரும்ப இவற்றை அச்சு அசலாகக் கலை இலக்கியம் என்கிற பெயரில் எழுதுகிற காரியம், சமூகத்தில் புரையோடிப்போன சாதியை இன்னும் ஆழமாக வேரூன்றச் செய்துவிடாதா என்பது முக்கியமான கேள்வி. 

எதுவென்றையும் எழுதுவதே தவறு என ஒதுக்கிவிட்டுச் செல்வதைவிட எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பரிசீலிப்பதும் ஏன் அப்படி எழுதப்பட்டிருக்கிறது என அணுகிப் பார்த்துப் புரிந்துகொள்வதுமே நம்மை ஆழமாக்கும். 

நீத்தார் நினைவேந்தல் என்பது சாதி மத இன பேதமற்று எல்லா சமூகத்திலும் கடைப்பிடிக்கப்படும் சடங்கு. இது பிராமணர்களிடம் தர்ப்பணம் என்கிற பெயரில் மாதாமாதம் அமாவாசையன்று, இறந்துவிட்ட தாய் தந்தையருக்கு முன்னோர்களுக்கு மகன் செய்யவேண்டிய காரியமாக இருந்துவருகிறது.

பகுத்தறிவு என்பதன் பெயரால், இதெல்லாம் மூடப்பழக்கம் என்று இந்தச் சடங்கையே புறந்தள்ளிவிடுவது அரசியல். ஆனால் நாம் ஏற்கிறோமோ இல்லையோ, இதைச் செய்கிற மனிதர்களுக்கு உள்ளே சென்று அந்தத் தருணத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள், மனிதம் எங்கே சாகிறது அல்லது உயிர்க்கிறது என்று பார்ப்பதே இலக்கியம். 

அரசியல் ரீதியாக விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் இளைஞர்கள் அதிகமுள்ள தமிழ் மொழியில் பிராமண பாஷையில் எழுதப்படும் கதைகளுடன் ஒவ்வாமை இருப்பது இயல்புதான். ஆனால் எட்டிகூடப் பார்க்காமல் நின்றுவிடுவதால் இழப்பு எழுத்தாளனுக்கோ இலக்கியத்துக்கோ இல்லை என்பது வயதேறி அனுபவம் கூடுகையில் புரிபடும்.

தர்ப்பணம் என்பதே பிராமணச் சடங்கு என்றானபின் அதைப் பற்றி எழுதுகையில் பிராமண மொழியோ அதுபற்றிய விவரணைகளோ எழுதப்படுவது தவிர்க்கமுடியாதது. இலக்கிய வாசகனின் அக்கறை, இவற்றைத் தாண்டி கதை எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்ன சொல்கிறது என்பதிலேயே நிலைத்திருக்கும்.

கதை தொடங்குகையில் தர்ப்பணம் பண்ணவேண்டும் என்பதைவிட, அதைச் சீக்கிரம் செய்துவிட்டுப் போகவேண்டும் என்பதிலேயே கவலை கொண்டிருக்கிறது கதையின் அறிமுகப் பாத்திரமான முன்சீப். அந்தப் பாத்திரத்தை நீதிபதியாக அடையாளப்படுத்துவதிலேயே, கதை நிகழ்வது 70களுக்கு முந்தைய காலகட்டம் என்பது உட்பட நிறைய விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். 

நீதிபதிக்குத் தமது தனிக் கடமையை வேகமாய் முடித்துக்கொண்டு பொதுக்கடமையை ஆற்றப் போகவேண்டிய அவசரத்தில் தொடங்குகிறது கதை. தர்ப்பணம் செய்துவைக்கிற பிராமணர் வர தாமதாவதன் கோபத்தோடு கோபமாய், கால மாற்றத்தின் யதார்த்தம் வெளிப்படுகிறது.

‘இந்தப் பாழாப்போன ஊர்லே வேற முக்கியமான சாஸ்திரியும் கிடையாது. எல்லாரும் கிராப் வெட்டிண்டு சினிமாப் பாத்துண்டிருக்கான்’ 

கதை, முன்சீபை ஸ்டூலில் உட்காரவைத்துவிட்டு சாஸ்திரிகள் வர ஏன் தாமதம் ஆகிறது என்று பார்க்கப் போகிறது. 

தர்ப்பணம் செய்து வைக்கிற சாஸ்திரிகளோ வயதானவர். வறுமையில் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ்பவர். நகரமாகிக்கொண்டிருக்கும் எதோ ஒரு டவுன் போலும். காலையில் முன்சீப் வீட்டில் தர்ப்பணம் செய்துவைக்கவேண்டும் சீக்கிரம் எழுப்பிவிடு என்று மனைவியிடம் சொல்லிவிட்டுப் படுத்தவரை எழுப்பிவிட மறந்துவிட்டாள் மனைவி. சூரியோதயத்துக்குப் பின்னர் இயற்கை உபாதைகளை முடிக்கமுடியாத அளவுக்கு நெரிசலாகிவிடும் ‘கொத்தவால் சாவடி’ போலிருக்கும் அந்த ஒண்டுக்குடித்தனம். எனவே அவர் நெடுந்தூரம் சென்றே காலைக்கடனை முடிக்கவேண்டிய கட்டாயமும் சேர்ந்து அவரைத் தாமதப்படுத்துகிறது

இந்தக் கதைக்குள் ஒரு கடிதம். சாஸ்திரிகளின் சேமிப்புடன் சென்னை போன சீமந்தபுத்திரனிடமிருந்து வந்த கடிதம். கடிதத்திற்குள் ஒரு குட்டிக்கதை. ஏதுமில்லாவிடினும் பிறப்பின் மேன்மை என்கிற கயிற்றில் தொங்கிக்கொண்டு வாழ்வின் யதார்த்தத்தைத் தொடக்கத்தில் இழிவாகக் கருதித் தயங்கினாலும் இறுதியில் ஏற்கும் இளைய தலைமுறை பிராமண பையனின் கதை. 

சமூகத்தில் ஜட்ஜ் என்கிற அந்தஸ்த்தும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கும் பிராமண ‘பெரிய மனிதர்’ கண்மறைவாகக் காமத்தில் வழுக்கி விழுந்த கதை போகிற போக்கில் சொல்லப்பட்டுப் போகிறது. 

செத்துக் கிடக்கிறவளுக்குத் தாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் எப்போதோ யாருக்கோ செத்துப் போனவர்களுக்காகத் தர்ப்பணம் செய்துவைக்கப் போகவேண்டியிருக்கிறது என்று ஒரு கதைக்குள் எத்தனை முரண்கள். 

நெருங்கியவர்களின் மரணம் ஒரேயடியாய் தாக்காமல் விட்டுவிட்டுத் தாக்கும் இயல்புடையது. துக்கத்திலிருந்து விடுபட முயலும் மனம், வேறு எதிலோ ஈடுபடும். ஆனால் வேறு ஏதோ ஒன்று அதை நினைவுபடுத்தித் துக்கத்துக்கே திரும்பத் திரும்ப இழுக்கும். இதுதான், முன்சீப் வீட்டில் தர்ப்பணம் செய்து வைத்துக்கொண்டிருக்கையில் நிகழத்தொடங்கி சாஸ்திரிகளின் வாழ்நாள் முழுக்கத் தொடர்கிறது. 

முன்னோர்களின் ஆன்மா திருப்தியடைவதற்காகச் செய்யப்படும் சடங்கை வைத்து, நிஜவாழ்வில் நிம்மதியற்று அலையும் ஆன்மாக்களைப் பற்றிக் கூறிச் செல்கிறார் சார்வாகன். 

கதையை எழுதுகிறவிதம் தேர்ச்சியைக் காட்டுமென்றால், எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிராமல் விட்டுச்செல்வது முதிர்ச்சியைக் காட்டும். கதை தர்ப்பணம் பற்றியது. எனவே மனைவியின் ஈமச்சடங்கு சொல்லப்படாமலே விடப்பட்டிருப்பது எழுத்தைக் கலையாக்குகிறது.

கதை உணர்வுப்பூர்வமாக இருக்கவேண்டியது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அது, தவறின்றி தர்க்கபூர்வமாக இருக்கவேண்டியதும். மகனின் கடிதம் மனைவி உயிரோடிருக்கையில் அவள் கையில் கிடைத்திருந்தால் சாஸ்திரிகள் பார்வையில் கதையின் நடுப்பகுதி விரியமுடியாது. எனவே துணைப் பாத்திரமாக வரும் துக்கிணியூண்டு கேரெக்டரின் மனைவி பெயரும் சங்கர சாஸ்திரிகளின் மனைவி பெயரும் மீனாட்சியாக இருக்கிறது. இது கை நேர்த்தி. கதை சொல்லும் தொழில் நேர்த்தி என்றால், தர்ப்பணம் நடக்கையில் முன்சீபின் தாயார் பெயரும் மீனாட்சியாகி கதையை உணர்ச்சிகரமாக்குவது கலை நேர்த்தி. 

ஒரே நேர்கோட்டில் செல்லாமல் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் நின்று நிதானமாக அவற்றின் பின்புலத்தோடு விவரித்துச் செல்வதுபோலத் தோன்றினாலும் எல்லாம், இருப்புக்கும் இறப்புக்கும் இடையில் இருப்பு உருவாக்கும் முரண்களை வெளிப்படுத்துவது என்கிற ஒரே சரடில் இணைக்கப்பட்டிருப்பதைக் கதையின் இறுதிப்பகுதி கொண்டுவந்து கோர்த்துவிடுகிறது. 

நேரமாகிறதே என்கிற முன்சீபின் கவலையில் தொடங்கிய கதை கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் இருக்கும் கவலைகளில்போய் கச்சிதமான சிறுகதையாக முடிகிறது.

நன்றி: அரும்பு
ஆகஸ்ட் 2018 அரும்பு மாத இதழ் pdf