August 3, 2018

சிறுகதை: எழுச்சி 

அவலத்தை இவ்வளவு நகைச்சுவையாகச் சொல்லமுடியுமா என வியக்கவைக்கிற கதை.

தனிமனிதர்களின் அவலம்தான் இலக்கியம் நெடுகிலும் காணக்கிடைக்கிறது. ஒரு மனிதனின் அவலத்தைப்போய் நகைச்சுவையாகச் சொல்வது நியாயமா என்கிற கேள்வி எழுவதும் இயல்புதான்.

கலை இலக்கியத்தில் அவலச்சுவை என்பது எழுத்தாளர்களுக்கு அல்வா தின்பதுபோல. நெகிழவைப்பதன்மூலம் வாசகன் மனதில் இடம்பிடிப்பது எளிது. வெகுஜன எழுத்தாளர்களுக்கு இது ஆகிவந்த காரியம். முடிந்தவரை நெகிழ்வான பகுதிகளை ஊதிப்பெருக்குவதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். சமீபத்தில் இதற்குப் பெரிய இடைஞ்சலாக வந்து முளைத்திருப்பவை வாசகனைப் பார்வையாளனாக்கிவிட்டிருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள்.

இந்தக் கதையின் அவலம், தனிமனிதனில் தொடங்கி சொந்த நாட்டு அளவில் விரிந்து, குடிபெயர்ந்த நாட்டில் வசிக்கும் அனைத்து நாட்டு அகதிகள் வரை பரவிக்கிடக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தக் கதையும்  சொல்லப்பட்டிருப்பதென்னவோ நகைச்சுவைப் பூச்சுடன்.

புரியாமல் போக இந்தக் கதையில் எதுவுமே இல்லை. இவ்வளவு பெரிய அவலம் ஏன் இவ்வளவு நகைச்சுவையாகச் சொல்லப்படிருக்கிறது என்கிற ஒன்றைத் தவிர.

இது என்ன பெரிய விஷயம், வெகுஜன பத்திரிகைகளில் எழுதி, இறந்த பின்பும் பிரபல எழுத்தாளர்களார்களுக்கிடையில் பிதாமகனாக விளங்கும் சுஜாதா இப்படித்தானே எதையும் வித்தியாசமாகத் துள்ளலும் துடிப்புமாகச் சொல்வார். இதிலென்ன புதிதாக இருக்கிறது என்பதும் இளைஞர்களுக்கு எழக்கூடிய இயல்பான கேள்விதான்.

கதையைவிட நடைக்காக நினைவில் நிற்கும் சுஜாதாவின் கதைகளே ஏராளம். சீரியஸான கதையை எழுதுகையில் அவர் நடையில் இருக்கும் துள்ளல் மட்டுப்பட்டுவிடும். எனவே அவை இலக்கியத்தரமான கதைகள் என்கிற அந்தஸ்தையும் அவரது வாசகர்களிடம் அடைந்துவிட்டன.

ஷோபாசக்தியின் இந்தக் கதை அப்படியல்ல. தொடக்கத்திலிருந்தே கதைநெடுக நகைச்சுவையுடனேயே போகிறது எனினும் முடிகையில் சிரிக்கமுடிவதில்லை.

பொதுவாக, கொட்டை என்று சொன்னாலே யாராக இருந்தாலும் வாய்விட்டுச் சிரித்துவிடுவார்கள். ஆனால் கொட்டையில் அடிபட்டால் வலி உயிர் போய்விடும். அதை அவ்வளவு சுலபத்தில் வாய்விட்டு வெளியில் சொல்லக்கூட முடியாது என்பது அதைவிட அதிகமான வலி.

ராணுவ ஆட்சியில் தனி மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அடிவிழ வாய்ப்புண்டு. கேள்விகேட்க நாதியில்லை. விழும் அடி கொட்டையிலேயே விழுவதற்கான வாய்ப்பே அதிகம். வலியில் உயிரே போனாலும் வாய்விட்டு அரற்றக்கூட முடியாது.

இப்படிப் பார்த்தால் இது வெறும் ஒரு தனி நபரின் கதையாகவா தெரிகிறது.

அரச பயங்கரவாதம் இப்படியென்றால் பயங்கரவாதிகளைப் பார்த்து பயப்படுகிற அரசுகளும் பாதுகாப்பு கருதி கெடுபிடிகளைச் செலுத்தவேண்டியது தவிர்க்கமுடியாததாக ஆகிவிட்டது.  கதையின் நாயகன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் நகைச்சுவயாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

வெகுஜன எழுத்தாளர்களுக்கும் இலக்கிய எழுத்தாளர்களுக்கும் இடையிலிருக்கும் முக்கியமான வேறுபாடு முன்னவர் நேர்க்கோட்டில் கதையை மட்டுமே சொல்லிக்கொண்டு போவார். பின்னவர் எங்கெங்கோ திரிந்து ஊரப்பட்டக் கதைகளைச் சொல்லிக்கொண்டு போவார். பின்னது பெரும்பாலான வாசகர்களுக்கு மைய இழையைப் பிடிப்பதில் சிரமமேற்படுத்தும். அதன் காரணமாக அசுவாரசியத்தை உண்டாக்கி, அடுத்தமுறை அந்தப் பக்கமே தலை வைத்தும் படுக்கமுடியாமல் அடித்துவிடும்.

எங்கெங்கோ அலைவதைப்போல மேற்பார்வைக்குத் தோற்றமளித்தாலும் சொல்லவந்த விஷயத்துடன் எல்லாவற்றையும் கச்சிதமாகக் கோர்க்க, இலக்கிய எழுத்தாளர்களுக்கிடையிலும் தேர்ந்தவர்களுக்கு மட்டுமே கைகூடுகிறது.

கள்ளத்தோணியில் புறப்பட்டு, அகதியாக பதிமூன்று வருடங்கள் பிரான்ஸில் இருந்தபிறகு, நாற்பத்தியேழாவது வயதில் விசா கிடைப்பதில் தொடங்குகிற யாழ்ப்பாணக்காரரின் கதை, விமானத்தில் இந்தியாவுக்குப் போய், பல வருடங்கள் பிரிந்திருந்த மனைவியுடன் மகிழ்ச்சியாய் இருந்துவிட்டுத் திரும்பி வரும்போது, வேலைபார்த்துவரும் தொழிற்சாலையில் நிகழும் மாற்றத்துடன் முடிகிற இரண்டு மாத காலத்திற்குள் நிகழும் கதையில்தான் எத்தனைக் கதைகள் எத்தனைச் சம்பவங்கள். இவை ஒவ்வொன்றும் கதையின் மையத்துடன் எவ்வளவு கச்சிதமாக இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது பிரமிக்க வைக்கிறது. ஆனால் இது இவரது அத்தனைக் கதைகளிலும் காணக்கிடைக்கும் ஒரு சாதாரண கதை சொல்லும் உத்தியாக இருப்பதுதான் ஷோபாசக்தியை அசாதாரண எழுத்தாளராக்குகின்றன என்றால், எடுத்துக்கொள்ளும் கருவை அணுவிலிருந்து அண்டத்துக்கு விரிப்பது இவரைக் கலைஞனாக்குகிறது.

பொடியன்களைச் சுற்றி உட்கார வைத்துக்கொண்டு எங்கோ தொடங்கி எதையோ தொட்டு எதையெதையோ தொடர்புபடுத்தி, கதை சொல்லிக்கொண்டு போகிற பொழுதுபோகாத தாத்தாவைப் போல, மேற்பார்வைக்குத் தோன்றினாலும் தேர்ந்த எழுத்து என்று தீவிர வாசகனுக்குத் தொடக்கத்திலேயே பிடிபட்டுவிடும்.

கதையின் முதல் பத்தியை எடுத்துக்கொள்வோம். இறுதியில் வரும் உச்சகட்டத்துக்கான அத்தனைத் தகவல்களும் கொடுக்கப்பட்டுவிடுகின்றன. கதையின் ஆதார புள்ளிக்கான தர்க்கக் காரணமும் நியாயமும் அதன் இறுதி வரியிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பிறந்து வளர்ந்ததற்கு இதுவரை அவர் விமானத்தில் ஏறியதில்லை.

வெறும் கதை சொல்லிகள் இதை சுவாரசியத்துக்காக மட்டுமே வைப்பார்கள். இதுவரை விமானத்தில் ஏறாமலே இருப்பவன் எப்படி இலங்கையிலிருந்து பாரிசுக்கு வந்திருக்கக்கூடும் என்று வாசகனின் ஆவலுக்கான தூண்டிலாகவே இதைப் போடுவார்கள். பத்திரிகை ஆசிரியரின் கவனத்தை ஈர்த்தால்தான் பிரசுரமாகும் எனவே இப்படி நம்பமுடியாவண்ணம் எதையாவது எழுதி, அதற்குப்பின் கதை நடுவில் அதை நியாயப்படுத்தும்படி வேறு எதையாவது எழுதி சமாளியுங்கள் என்று சிறுகதை எழுதுவது எப்படி என்று வகுப்பெடுப்பார்கள்.

ஆனால் அந்த வரிதான் இந்தக் கதையையே எழுத வைத்திருக்கிறது.

விமானத்தில் ஏற நேர்கையில் எதிர்கொள்ளவேண்டியிருப்பதைப் பற்றியதே இந்தக் கதை. நமக்கெல்லாம் சாதாரண காரியமாக இருப்பது கதையின் நாயகனுக்கேன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருக்கிறது என்பதே கதையின் பின்புலம். பின்புலத்தில் இருப்பதோ ஒரு மனித இனத்தின் பேரவலம். எனவே இங்கே அது சுவாரசியத்துக்கல்ல மனித அவலத்தை வெளிப்படுத்துவதற்காகவே வைக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த பத்தியிலேயே பதினைந்து வருடங்களுக்கு முன்னால் போய்விடுகிற கதை, எப்படிக் கொட்டையில் அடிபட்டது என்கிற அபத்த நிகழ்வுக்குப் போகிறது, அங்கு நிகழும் சம்பவத்திற்கான காரணத்தை விளக்க இன்னும் பின்னோக்கிச் செல்கிறது. இதற்கிடையில் போகிற போக்கில் ராணுவம் அங்கே எப்படி இருந்துகொண்டு இருந்தது என்பது ஆவணமாகிறது. அதற்கும் முன்பாக திலீபனின் மரணம், இயக்கத்திற்கு சப்போர்ட்டும் எதிர்ப்பும் இல்லாத ஒரு சாதாரண மனிதரான இவரை எப்படிப் பாதித்தது என்கிற கதை சொல்லப்படுகிறது. ஆனால் அந்தச் சம்பவமே, தனிச் சச்சரவு காரணமாக அடுத்தவீட்டுக்காரனால் எப்படிப் பயன்படுத்தப்பட்டு அவருக்கு எதிராகப் போய் எவ்வளவு பெரிய விளைவை உண்டாக்கிவிடுகிறது.

இயக்கங்களிற்கு அவர் சப்போர்ட்டுமில்லை எதிருமில்லை என்கிற வாக்கியம், தேவாரமும் திருமந்திரமுமாக இருக்கிற தர்மலிங்கத்தின் அரசியல் கொள்கையானது அமிர்தலிங்கத்தைத் தாண்டவுமில்லை என்று முடிகிறது.

இந்தியாவுக்கு விமானமேறுவதில் தொடங்குகிற பரிசோதனை, இந்திய சினிமா தியேட்டரிலும் தொடர்கிறது. பாரீசுக்குத் திரும்பி வந்தால், அவர் வேலைபார்க்கிற தொழிற்சாலைக்கும் வந்திருக்கிறது.

மேலோட்டமான பார்வையில், கொட்டையில் அடிபட்ட மனிதனின் வெளியில் சொல்லமுடியாத சங்கடம் பகடியாகச் சொல்லப்பட்டிருப்பதுபோலத் தெரிகிற கதை, தீவிர வாசகனுக்கு ஒரு மனித இனத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் வெளியில் சொல்லமுடியாத அவஸ்தையுமாக விரியக்கூடும்.

நன்றி: உயிர்மை

ஆகஸ்ட் 2018 இதழ்