August 8, 2018

83-84 வாக்கில் சி. மோகனைப் பார்க்காத நாட்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். சந்திப்புப் பெரும்பாலும் ராயப்பேட்டையில் இருந்த மோகன் வீட்டில்தான். சில சமயம் வீட்டுப் படிக்கட்டில். உண்மையில் அது கி. ஆ. சச்சிதானந்தத்தின் வீட்டுப் படிக்கட்டு. மோகன் சச்சி வீட்டு மாடியில் குடியிருந்தார். 

வயதில் மோகன் பெரியவர். அவரைவிடவும் பெரியவர் சச்சிதானந்தம் ஆனால் எனக்கும் வசந்தகுமாருக்கும்கூட அவர் சச்சிதான். இலக்கிய உலகில் வயதில் பெரியவர்களாக இருந்தாலும் எல்லோரும் ராமசாமி ராம் சச்சி தருமு அசோகமித்திரன் அல்லது அமி ஜேகேதான் எனக்கு. எவரும் சார் இல்லை. குற்றிலக்கிய உலகம் குமாஸ்தாக்களால் ஆனது. குமாஸ்தாக்கள் சார்களால் ஆனவர்கள். ஆனாலும் இலக்கிய உலகில் சார்க்கு இடமில்லை. அதை எவரும் தவறாக எடுத்துக்கொண்டதுமில்லை. சந்திப்பே பிரியத்தின் வெளிப்பாடுதானே. பிறகு பெயரிட்டு அழைப்பதில் என்ன பிரச்சனை. 

நேரம் காலமின்றி தட்டுகெட்டுத் திரியும் என் சைக்கிள், சச்சி வீட்டு சூரியன் பொருந்திய காம்ப்பவுண்டு மரக்கட்டைக் கதவிற்கு வெளியில் நிற்கும். அப்படி நின்றதில் ஒருமுறை திருட்டுகூடப் போயிருக்கிறது.

சச்சி, வீட்டில் இருந்தால் நாங்கள் கீழே வந்துவிடுவோம். நன்றாக இருட்டும்வரை பேச்சுதான். எனக்கு எல்லோரைப் பற்றியும் குறிப்பாகக் கடந்த காலத்தைப்பற்றித் தெரிந்துகொள்ள எப்போதுமே ஆவல் அதிகம். அதை வம்பென்றும் சொல்லலாம். அப்படியொருநாள் இலக்கியவாதிகளைப்பற்றிய பழைய கதை பேசிக்கொண்டிருந்தபோது, எங்கோ போய் எதற்கோ தாவி, எம்ஜிஆர் பற்றிய பேச்சு வந்தது. எம்ஜிஆருக்கு எந்த செண்ட்டிமெண்ட்டும் கிடையாது. கருணாநிதிக்கு உண்டு. அதனால அந்தாளோட பேச முடியும். எம்ஜிஆர்கிட்ட முடியாது என்றார். எனக்கோ ஆச்சரியம். பொதுவாக இலக்கியவாதிகளில் யாருக்குமே கருணாநிதி எம்ஜிஆரெல்லாம் பொருட்டே இல்லை. அனேகமாகப் பொருட்படுத்திப் பேசக்கூட மாட்டார்கள். சச்சியோ கடும் எழுத்து கசடதபற மெளனி கோஷ்டி. 

எ ன் ன து என்றேன் வாய் பிளக்க. 

சச்சி திமுக தெரியாதா என்று கிண்டலாக சிரித்தார் மோகன். உதயசூரியன் சின்னம் உருவானதே இந்த வீட்டு மொட்டை மாடிலதான் தெரியுமா என்றார். 

நிஜமாவா சச்சி, என்று கூச்சநாச்சமின்றி வாய்விட்டே கேட்டுவிட்டேன். 

(சச்சி வீட்டு மொட்டை மாடியில் [தமிழினி] வசந்தகுமார் எடுத்த புகைப்படம்)

முக்கியத்துவம் உண்டாக்கிய வெட்கத்துடன், அப்ப அண்ணா கருணாநிதி எல்லாம் மாடில கூடிப் பேசுவாங்க என்றார். 

என்ன மாமல்லன் ‘கேட்’டை கவனிக்கலையா என்றார் மோகன். 

அதுவரை அந்த மர கேட்டில் இருந்ததை எதோ அந்தக்காலத்து சூரியன் டிசைனாக மட்டுமே பார்த்திருந்தேன். அப்போதுதான் அதில் உதயசூரியன் தெரிந்தது.

எதனால் கருணாநிதியை செண்ட்டிமெண்ட் உள்ளவர் என்று கூறினார் என்பதை சச்சி விளக்கவில்லை. என் மனதில் படியேறிப்போய்க் கொண்டிருந்தார்கள் அண்ணாவும் கருணாநிதியும் இன்னபிறரும்.

சில வருடங்கள் கழித்து ஒரு சம்பவம் கேள்விப்பட நேர்ந்தது. 

சாவி குங்குமத்துக்குப் பொறுப்பேற்றிருந்தார். நண்பன் அங்கே வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். 

டி. என். சேஷன் பற்றி கிண்டலாகவோ விமர்சனமாகவோ ஏதோ பிரசுரமாகியிருந்தது. முதலாளியைக் குளிர்விக்கும் என்றெண்ணி ஏதோ தம்மால் ஆன கைங்கர்யம் என்று செய்து வைத்திருக்கவேண்டும் சாவி. 

உள்ளே கூப்பிட்டு சாவியை உண்டு இல்லை பண்ணிவிட்டார் கருணாநிதி. 

நொந்துபோய் வேர்த்துக்கொட்டத் தம் அறைக்கு வந்த சாவி, எப்போதும் நல்ல குளிரில் இருக்கும் ஏசியை இன்னும் ஏற்றிவிட்டுக்கொண்டு தலையைத் தொங்கப்போட்டு உட்கார்ந்துவிட்டார். 

இதன் முன்கதைச் சுருக்கம் என்று நண்பன் கூறியது. 

பத்திரிகையுலகத்துல பழம் தின்னு கொட்டபோட்ட ஜாம்பவான், நாம எங்க வேலை பார்க்கிறோம், நம்ம முதலாளியோட நிலைப்பாடென்னனுகூடத் தெரிஞ்சிக்காம இம்ப்ரஸ் பண்றதுக்காகவேண்டி தேவையில்லாம எழுதிவெச்சா இப்படித்தான் பேக் ஃபயராகும். 

வைகோ, திமுகவை விட்டு வெளியேறியபோது, கட்சிப் பெரும்பான்மை தம்மிடமே உள்ளது என்று, உதயசூரியன் சின்னத்தை முடக்கத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றார். அப்போது தேர்தல் ஆணையராக இருந்த டி. என். சேஷன், உதயசூரியன் சின்னம் திமுகவிற்கே என்று முடிவெடுத்தார். 

உண்மையில் பார்க்கப்போனால் சேஷன் திமுகவுக்கு உதவியொன்றும் செய்யவில்லை. வெளி பரபரப்பை விட்டுவிட்டுப் பார்த்தால் கட்சியின் பெரும்பான்மை நியாயப்படியே திமுகவிடமே இருந்தது. ஆனால் சேஷன் நினைத்திருந்தால் அநீதியாகத் தீர்ப்பளித்துக் கெடுத்திருக்க முடியும். இதை எண்ணி உள்ளூர நன்றி பாராட்டுவது எத்தனைப்பேரிடம் எதிர்பார்க்க முடியும்.

பார்ப்பனர்கள் தங்களது ஜென்ம எதிரியாகப் பார்க்கும் கருணாநிதி உள்ளே எப்படி இருக்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை தங்களுக்குள் விட்டே கொடுக்க மாட்டார்கள் என்கிற வெளி பிம்பம் கொண்ட பிராமணர்கள் உள்ளே எப்படி இருக்கிறார்கள்.

ஆனால், சொல்லிக்கொடுத்த சூத்திரங்ளை, சூயிங்கம் போல மென்றுகொண்டிருக்கின்றன பார்ப்பன சூத்திர உலகங்கள்.