August 30, 2018

லைலா – ஷோபாசக்தி

ஷோபாசக்தி மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு, அவர் புலி எதிர்ப்பாளர் என்பது. புலி எதிர்ப்பையும் பிரபாகரன் வெறுப்பையும் தாண்டி, அவரிடம் வேறு எதுவுமே இல்லை என்பதுதான் புலி ஆதரவாளர்களில் பெரும்பாலோரது கருத்து. அவர் கதைகளில் வருகிற ‘இயக்கம்’ என்கிற வார்த்தையே, புலிகளைக் குறிக்கிற மறுபெயர் என்பதுபோல இவர்களில் பெரும்பாலோர் முகம் சிவக்கின்றனர்.

இவர்களுக்கும் இலக்கியத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே பொருட்படுத்தத் தேவையில்லை என எளிதாக ஒதுக்கிவிட்டுப் போக முடியாது. ஏனென்றால், தாம் கதை எழுதுவதே, தமது அரசியல் செயல்பாடு என்று கூறுகிறவர் ஷோபாசக்தி. எனில் இலக்கியம் இதில் எங்கே வருகிறது என்கிற கேள்வி, புலிகளுக்கோ அரசியலுக்கோ அப்போசும் பண்ணாத சப்போர்ட்டும் இல்லாத இலக்கிய வாசகனுக்கு எழுவது இயல்புதானே.

லைலா கதையின் கடைசி வரிகூட இவர்களைச் சீண்டுவதுபோலவே அமைந்திருக்கிறது.

எழுதப்பட்டதிலிருந்து, எழுதப்படாமல் விடப்பட்டிருப்பதையும் எழுதியதைத் தாண்டி உருவாகும் எண்ணங்களையும் மனதில் எழுதி முழுமையாக்கிக்கொள்வதே இலக்கிய வாசிப்பு.

பாத்திரத்துக்குப் பெயர் வைப்பதிலிருந்து, பிரத்தியேக வாக்கியங்களுடன் கதையைத் தொடங்குவதுமுதல், ஒரு பாத்திரத்தின் கதையைச் சொல்வதைப் போன்ற பாவனையில் ஒரு மனிதக் கூட்டமே அழிந்துபட்ட அவலத்தைச் சொல்வதுவரை, அசோகமித்திரன் தி. ஜானகிராமன் சுந்தர ராமசாமி போன்ற எவரையுமே, தமது பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பார்வை காரணமாக குறைந்தபட்சமாக ஏற்காதவர் அதிகபட்சமாக முற்றிலும் நிராகரிப்பவர் என்றபோதிலும் ஷோபாசக்தியின் கதைகள் இதுபோன்ற இலக்கிய ஆளுமைகளின் வெவ்வேறு கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்பது வியப்பளிக்கிற விஷயம்.

ஜே. ஜே. சில குறிப்புகள் இப்படித் தொடங்குகிறது.

ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆவது வயதில், ஆல்பெர் காம்யு விபத்தில் மாண்டதற்கு மறுநாள், இறந்தான்.

ஷோபாசக்தியின் லைலா இப்படித் தொடங்குகிறது.

இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும்போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம். அல்லது புன்னகை செய்த உங்களது ஆன்மா அவ்வாறு சிதைந்து போயிருக்கலாம். ஒருவேளை நம்மிருவரது ஆன்மாக்களுமே வக்கரித்துப் போயிருக்கவும் கூடும்.

ஜே ஜே சில குறிப்புகள் பாகம் – II இப்படித் தொடங்குகிறது.

ஜே. ஜே. 1921ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை நாலரை மணிக்குப் பிறந்தான்.

பாரதி இறந்தது 1921ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை 1:30.

பாரதியின் இறப்பிற்கும் ஆல்பெர்ட் காம்யுவின் மறைவுக்கும் இடையில் எழுத்தாளனான தம் கதாபாத்திரத்தின் வாழ்வை அமைப்பதன் மூலம் தமிழின் உச்சத்திலிருந்து உலக உச்சத்தைத் தமிழ் இலக்கியம் அடையவேண்டும் என்கிற விழைவை இப்படி விதைத்திருக்கிறார் சுந்தர ராமசாமி.

இப்படியெல்லாம் கணக்குவழக்குடன், முன் திட்டங்களுடன் எழுதுவது சரியா தப்பா என்பதல்ல, இவ்விதச் செய்முறை, உள்ளொளி தரிசனம் உன்னதம் போன்ற மதிப்பீடுகளை முன்னிருத்தியவரிடமும்  அவரது மதிப்பீடுகள் அனைத்திற்கும் எதிர்கோடியில் இருப்பதாக எண்ணிக்கொள்ள விரும்புகிறவரிடமும் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பார்த்து தன்னை விஸ்தரித்துக்கொள்வதே கொள்வதே நல்ல வாசகனின் லட்சியமாக இருக்கவேண்டும்.

லைலாவில், இந்தத் தொடக்க வரிகளுக்கான பொருள், கதையின் இறுதியுடன் எப்படி இணைக்கப்பட்டுள்ளது, கதை முழுவதும் எப்படி இயங்குகிறது என்பது இந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களுக்கே பிடிபட்டுவிடும்.

சுந்தர ராமசாமியை முதல் முதலாக 1982ல் சந்தித்தபோது அசோகமித்திரன் தம் கதைகளில் போட்டு வைக்கும் கண்ணிகளைக் கதையின் வெவ்வேறு இடங்களில் எப்படித் தொட்டுச் செல்கிறார் என கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தேன். அசோகமித்திரன் இதை வீணை மாதிரி மீட்டிண்டே இருப்பார் இல்லியோ என்றார், பரவாயில்லையே இந்தப் பொடியனுக்கு இவ்வளவு தெரிகிறதே என்கிற பாராட்டுப் புன்னகையுடன்.

இங்கே, லைலா என்கிற வளர்ப்பு நாய் கதை நெடுக வந்துகொண்டே இருக்கிறது.

பல விஷயங்களில் அதுவும் ஒன்று என்பதாக ஒன்றும் தெரியாததைப்போல புதைத்து வைத்ததை ஆங்காங்கே தொட்டு, தொடர்புபடுத்திச் செல்வது அசோகமித்திரன் பாணி என்றால் வெளிப்படையாய் அதை அடிக்கோடிட்டுக் காட்டுவது ஷோபாசக்தியின் சொல்முறை.

தமிழின் மகத்தான எழுத்தாளரான தி. ஜானகிராமன் கதைகளில் வில்லன் என்கிற அம்சமே இருக்காது. மோசமாக நடந்துகொள்ளும் பாத்திரங்கள் இருக்கும் ஆனால், சூழ்நிலையே அவர்களை அப்படி நடந்துகொள்ள வைக்கிறது என்கிற கருணை எல்லார் மீதும் கவிந்திருக்கும்.

இந்தக் கட்டுரையை நான் ஏன் அப்படித் தொடங்கினேன் என்பதற்குக் காரணமே இதுதான். ஆனால் இது எனக்கு அப்போது இவ்வளவு துல்லியமாய் தெரியாது. அதை, ஷோபாசக்திக்கு எவ்வித சம்மந்தமும் இல்லாத தி. ஜானகிராமனுடன் கொண்டுவந்து இப்படிக் கோர்ப்பேன் என்று அப்போது சத்தியமாய் எனக்கே தெரியாது. இது, எழுதும் மனம் எழுத்தாளனுக்கே காட்டுகிற விசித்திரமான புதிர்.

பிரதான கதாபாத்திரத்தின் செல்லப் பிராணியாக இருந்து, அவர் பின்னாலேயே சென்றுகொண்டிருந்த லைலாவின் கொடூர முடிவுக்கு முடிவுக்கு யார் காரணம்.

‘இந்தக் கதையை படித்துக்கொண்டிருக்கும் போது எந்த இடத்திலாவது நீங்கள் ஒரு புன்னகையைச் செய்தால் இந்தக் கதைசொல்லியின் ஆன்மா வக்கிரத்தால் நிறைந்துள்ளதாக அர்த்தம்’ என்று தொடங்குவதற்கு என்ன காரணம்.

இரண்டுக்குமான ஒரே பதில், இவரது விமர்சகர்கள் கொதிப்பதைப்போல ஷோபாசக்தியின் கதைகளில் புலி எதிர்ப்பையும் பிரபாகரன் வெறுப்பையும் தாண்டி எதுவுமே இல்லை என்பதுதானா.

ஆம் எனில் கதையின் தலைப்பு லைலாவுக்கு பதில் இலங்கை நாயகி என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்குமே.

இலங்கை நாயகி அந்தக் குடியிருப்புக்கு வந்திருப்பதே, தன்னைக் கொல்லத்தானோ என்கிற அச்சம், ஆரம்பத்தில் கதைசொல்லிக்கு ஏற்படுகிறது. அப்படியோர் சம்பவம் நேர்ந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, அவரை எப்படித் திருப்பித் தாக்குவது என்று கதைசொல்லி மனதிற்குள் ஒத்திகை பார்த்துக்கொள்வதுபோல ஒரு இடம் வரும். அதையடுத்து இப்படியொரு பத்தி வருகிறது.

‘உனக்கென்ன மனம் வக்கரித்துவிட்டதா, எதற்காக அந்த அழகிய நாய் லைலாவை நீ சுட வேண்டும்?’ என என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஜார் மன்னனை ட்ரொட்ஸ்கி சுடும்போது ஜாரின் நாயையும் சுட்டுக் கொன்றார் என்கிற விஷயம் அந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வந்தது.

இதை, கதையின் இறுதியில் இலங்கை நாயகியே லைலாவை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்று கதைசொல்லி நம்புவதுடனும் லைலா இருந்ததற்கான தடயம் கூட இல்லாதிருப்பதுடனும் லைலா இறந்துவிட்டதற்கான ஆதாரமாக வீசுகிற துற்நாற்றம் வேறு எவருக்கும் தெரியாமல் இவன் மட்டுமே உணரக்கூடியதாக இருப்பதுடனும் இணைத்துப்பார்த்தால் சொல்லவந்த கதை இலங்கை நாயகி பற்றியதல்ல, செல்லப் பிராணியாய் பொத்திப்பொத்தி வளர்க்கப்பட்டு, கடைசிவரை இலங்கை நாயகியுடன் விசுவாசமாய் கூடக்கூட வந்த மனிதக் கூட்டத்தின் இழப்பின் அவலம் பற்றியது என்று பிடிபடக்கூடும்.

அதுதான்இந்தக் கதையின் ஆரம்பித்திலேயே நான் சொன்னேனே, இந்தக் கதைசொல்லியின் மனது வக்கிரத்தால் நிரம்பியிக்கிறது!

என்கிற இந்த இறுதி வாக்கியம், புலி ஆதரவாளர்களுக்குத் தம்மைச் சீண்டுகிற புன்னகையாகவும் பொது வாசகனுக்கும் ஈழத்தின் எதிர்காலத் தலைமுறைக்கும் ஒரு மனிதக் கூட்டத்தையே இழந்த அவலம் உண்டாக்கிய கையறுநிலையின் துயரப் புன்னகையாகவும் தோன்றக்கூடும். 

நன்றி: அம்ருதா செப்டம்பர் 2018