September 27, 2018

விலங்குப் பண்ணை

நிறைய படித்த வாசகனுக்குக் கதை சொல்வதில் உள்ள நெளிவு சுளிவு சூட்சமங்கள் ஓரளவுக்குப் பிடிபட்டுவிடும். தனக்குப் போக்குக் காட்டி, கண்ணைக்கட்டி ஏமாற்றி, தான் முற்றிலும் எதிர்பாராதத் திருப்பங்களை வைத்துக் கதைச் சொல்லும் எழுத்தாளனையே அவன் சிறந்த கதை சொல்லியாகக் கொண்டாடுவான். கதை என்ன சொல்கிறது எப்படிச் சொல்கிறது என்பதையெல்லாம் விட, எப்படிச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்கமுடியாமல் ‘அவனையே’ அசத்திவிட்டது என்றால் அவனைப் பொறுத்தவரை அதுவே சிறந்த எழுத்து.

வெகுஜன எழுத்தாளர்களில் நிறைய பேருக்கு இது அத்துப்படி. அவர்களுக்குள், இந்த சூட்சமத்தில் கைதேர்ந்தவர் வியாபார இலக்கிய உலகில் வித்தகர்.

தீவிர இலக்கிய எழுத்தாளனுக்கோ வாசகனே இரண்டாம்பட்சம். தான் என்ன சொல்ல வருகிறோம் என்பது மட்டுமே அவனது இலக்கு. எனவே இதுபோன்ற எழுத்தாளர்களில் நிறைய பேருடைய எழுத்து சமயத்தில் பயிற்சியுள்ள வாசகனுக்கே அசதியை ஏற்படுத்திவிடுகிறது.

கொஞ்சம் முயன்று கூர்ந்து கவனித்தால், சிறந்த எழுத்தாளன் எவ்வளவு நுட்பமாகக் கதை சொல்கிறான் என்பது தேர்ந்த வாசகனுக்குப் பிடிபட்டுவிடும். தீவிர இலக்கியத்தில், எதிர்பாரா திருப்பங்களல்ல, இந்த நுட்பமே சுவாரசியமான விஷயமாக நிற்கிறது. மனம் இடம் பொருள் காட்சி என்று இவற்றை எழுத்தாளன் எப்படிப் பார்க்கிறான் என்பதும் அவன் சொல்ல வருவதும் இணையும்போது தீவிர வாசகன் நிறைவடைகிறான். அதோடு நிற்காமல் மனதை விரிவடையவும் வைக்கிறது இலக்கியம்.

சுவாரசியமாக எழுத வராததாலேயே -வெகுஜனங்களிடம் செல்லமுடியாமல், காலகாலமாகக் குட்டைபோல தேங்கிக்கிடந்த இலக்கியம்- குளமாக வளர்ந்துள்ள தற்காலத்தில், இன்னும் கிடந்து உழப்பிக்கொண்டிருக்கிற அசடுகளும் இங்கே இருக்கின்றன. இந்த நவீன தொழில்நுட்ப காலத்தில், கணினியில் தட்டச்சத் தெரிகிற ஒரே காரணத்தால் மட்டுமே இலக்கியவாதி போலத் திரிந்துகொண்டிருப்பவர்களே ஏராளம்.

மனிதனுக்கு ஆதார விஷயங்கள் என்று வயிற்றுக்குப் பசியையும் மனதுக்கு சுதந்திரத்தையும் சொல்லலாம். வயிற்றுப் பசியைப் போக்கிக்கொள்ள, விடுதலைப் போராளிக் குழுக்களில் போய் செர்ந்த இரண்டு சிறுவர்களைப் பற்றிச் சொல்லும் கதைக்கு விலங்குப் பண்ணை என்கிற தலைப்பைக் கொடுத்ததன் மூலம் பல்வேறு அர்த்தங்களைப் படிக்கிற வாசகன் உருவாக்கிக்கொள்ள வாய்ப்பளிப்பதே ஷோபாசக்தியின் கலை என்று கூறலாம்.

பார்க்கப் போனால் கதை தொடங்கும் பள்ளியே, கதையின் தலைப்பான விலங்குப் பண்ணை போலதான் காட்சியளிக்கிறது. வசதியான விலங்குகளுக்கிடையில் வயிற்றுக்கு உண்ண வழியற்ற இரண்டு விலங்குகள். இரண்டுக்குமிடையில் வித்தியாசம் என்னவென்றால், கதை சொல்லிக்குக் கற்பனைத் திறமுண்டு எனவே பசியை வறுமையை மறைக்க நிறைய பொய் சொல்கிறான். மற்றவன் நேருக்கு நேராய் எளிமையாய் எதிர்கொள்கிறான்.

வாசகனைப் பிடித்து உலுக்கவும் குலுங்கிக் குலுங்கி அழவைக்கவும் எந்த எழுத்தாளருக்கும் இதைவிடச் சிறந்த ‘களம்’ கிடைக்காது. கதையின் கடைசி வரியில் உட்பட ஷோபாசக்தி எங்கேயும் இதைச் செய்வதே இல்லை. வெகுஜன மற்றும் முற்போக்கு எழுத்தாளர்களின் கவனமெல்லாம் வாசகனைத் தம் பக்கம் ஈர்க்க, அவனிடம்  இரக்கத்தைச் சுரக்கவைக்க, எல்லாம் எப்படி இருக்கின்றன என்று, இருப்பதை மிகை நாடகீயமாக்கி வர்ணிப்பதிலேயே இருக்கும். கலைஞனின் பார்வை எப்படியெப்படியெல்லாம் இருக்கவேண்டியவை எப்படியெப்படியெல்லாம் இருக்கின்றன என்று தொட்டுக்காட்டிச் செல்வதிலேயே குவிந்திருக்கும்.

பாடம் எடுக்க வருகிற ஆசிரியர்கள் அனைவருமே மேல் சாதியைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்து சமய ஆசிரியர் இருப்பவர்களிலேயே நல்லவர். பள்ளி அதிபரைப்போல் வைட் அண்ட் வைட் போடாமல் வரும் பையன்களின் குண்டியைப் பழுக்க வைக்காமல், இரண்டு அன்ரனிகளும் வேதக்காரர்கள் என்பதால் இவர்களைத் தம் வகுப்பைவிட்டு, கிறிஸ்துவ சமயத்தைக் கற்றுக்கொள்ள அசெம்ளி ஹாலுக்கு அனுப்பிவிடுகிற அளவுக்கு நல்லவர். அந்தப் பள்ளியில் கிறிஸ்துவர் ஒருவர், சமூகக் கல்வியும் ஆங்கிலமும் கற்றுக்கொடுக்கிற ஆசிரியராக இருக்கிறார். இவைபோக அவருக்குப் பல வேலைகள் அவற்றிலொன்று கிறித்துவம் போதிப்பதல்ல.

இங்கிருந்து, கதை அவர்களது பசியின் பல்வேறு முகங்களை நோக்கித் திரும்பிவிடுகிறது. பசிப் புராணத்தைச் சொல்ல ஆரம்பிக்க எவ்வளவு பொருத்தமான இடம் ‘சமயம்’. ஒன்று வெளியே அனுப்புகிறது, கருணையின் உருவான மற்றது கண்டுக்கொள்வதேயில்லை.

பசி மயக்கத்தில் தூங்கி விழும் மற்ற அன்ரனியை உலுக்கி எழுப்பி, ‘போய் உங்கள் சாதித் தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்’ என்கிறவர் விஞ்ஞான டீச்சர். அவர் பெயர் மிஸஸ் கந்தையாவாக இருக்கிறது.

படிக்கிற பிள்ளைகளுக்கிடையில் ஏழை பணக்காரன் என்கிற வேறுபாடு தெரியக்கூடாது என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் சீருடை. இரண்டு அன்ரனிகளுக்கும் சீருடையே பிரச்சனை என்கிற அளவுக்கு வறுமை.

வறுமை காரணமாக பிரமிள் கவிதை போல, அன்ரனிகளின் ‘வயிற்றில் குடியிருந்து வாழ்ந்து பசிக்கிறது நிகழ்காலம்’. பசியின் வெவ்வேறு முக லட்சணங்கள் விலாவாரியாக விவரிக்கப்பட்டுப் போய் முடிகிற இடம் பெரிய வியாழனன்று கடைசி இராப்போசன விருந்து நடக்கும் சின்னமடு தேவாலயம்.

நாங்கள் இருவரும் சின்னமடு மாதாவுக்கு வைத்த நேர்த்தி வீண்போகவில்லை. அன்றிரவு என் வயிற்றினுள் கிடந்த மிருகம் உறங்கிற்று.

கதை, இங்கே முடிந்திருந்தால் கூட கச்சிதமான இந்திய சிறுகதையாக இருந்திருக்கும். 80களில் நடக்கும் இலங்கைச் சிறுகதையான இது, ஒன்றுக்கு மேற்பட்டப் பரிமாணங்களுடன் இருப்பதற்கான காரணமே, 1982ஆம் ஆண்டில் தொடங்கி 1989ஆம் ஆண்டில் முடிகிற இந்தக் கதையின் பின்னால் வருகிற பகுதிதான்.

இத்தனை ஆண்டுகளுக்கு விரிவது எப்படிச் சிறுகதையாகும் என்கிற கேள்வி சிலருக்கு எழக்கூடும். தொடங்கியதிலிருந்து இறுதி வரிவரை மையப்பொருளான ‘பசி’யை விட்டு விலகவேயில்லை என்பதில் இருக்கிறது விடை.

எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புக்குத் தேர்வானதும் ஒரு அன்ரனி பள்ளிக்கு வருவதில்லை. கதை சொல்லி அன்ரனி கிழங்கு விற்க யாழ்ப்பாணம் போகிறான். அங்கே ‘ரஜினி கூல் பாரில்’ சாப்பாட்டை சம்பளமாகப் பெறும், மேசை துடைக்கும் அன்ரனி, கொஞ்சம் உடம்பு தெளிந்திருக்கிறான்.

அங்கு வேலை செய்தால் வடை வாய்ப்பன் என்று வித விதமாகச் சாப்பிடலாம் என்று கதைசொல்லி அன்ரனிக்குத் தோன்றுகிறது. முதலாளியிடம் பேசுவதாகவும் அடுத்தவாரம் வரும்படியும்  சொல்கிறான் அந்த அன்ரனி. அடுத்த கிழமை இந்த அன்ரனி செல்லும்போது அங்கிருந்த கடைத் தொடரையே எரித்து நாசமாக்கிவிட்டிருக்கிறது இராணுவம்.

இரண்டு அன்ரனிகளும் மறுபடி சந்திப்பது அடுத்த ஆண்டு சென்னை புறநகர் ரயில் நிலயத்தில். இரண்டு அன்ரனிகளும் வெவ்வேறு இயக்கங்களில் இருப்பது கதை சொல்லிக்குத் தெரியவருகிறது.

அதற்குப் பின் இருக்கும் ஒரு பத்தியில் கதை முடிந்துவிடுகிறது. ஆனால் ஆண்டுகளின் வரலாற்றுப் பின்னணியில் அசைபோடும் வாசகன் மனதில் பல பரிமாணங்களுடன் மிளிரத் தொடங்குகிறது கதை. 

நன்றி: அரும்பு அக்டோபர் 2018