October 2, 2018

எம்.ஜி.ஆர். கொலை வழக்கு

இந்தச் சிறுகதை என்ன சொல்ல வருகிறது என்பதை ஒரு வரியில் சொல்லிவிடலாம். ஆனால் அதை அப்படிச் சொல்லிவிடுவது நியாயமில்லை. ஒரு வரியில் ஒரு கட்டுரையை எழுதுவதோ வெளியிடுவதோ யாருமே செய்திராத புதுமையாக இருக்கும் என்றாலும் பொது அறிவுள்ள யாருக்குமே அது கட்டுரை என்று ஏற்கக்கூடியதாக இருக்காது.

இப்படித்தான் இந்தக் கதையில் எம்.ஜி.ஆர் கொல்லப்பட்டதற்காகச் சொல்லப்பட்டிருக்கிற காரணமும் அபத்தமாக அமைந்திருக்கிறது. இவ்வளவு அபத்தமான காரணத்திற்காகவெல்லாம் எப்படி இயக்கங்களின் பெயரால் மனித உயிர்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன என்பதை நம் முகத்தில் அறையும்படிச் சொல்வதற்காகதான் இந்தக் கதையே எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

கிருபானந்த வாரியாரின் கதாகாலட்சேபத்தை, பாண்டிச்சேரியில் ஆறு ஏழாம் வகுப்பு படிக்கையில் துரத்தித் துரத்திக் கேட்டிருக்கிறேன். பத்தாம் வகுப்புப் படிக்கையில், பழைய காங்கிரஸ்காரரும் நாத்திகருமான எங்கள் பள்ளித் தமிழாசிரியர் இரா சுப்பிரமணியன் என்கிற திருமுருகன் அவர்கள் புதுச்சேரி கம்பன் கழகத்தின் வெளியிலிருந்த பெஞ்சில் ஒரு காலை மடக்கியபடி உட்கார்ந்து சொன்னது இடிபோல் தாக்கிற்று.

வாரியார் சொல்ற கதையை சின்னப்பசங்களும் பொம்பளைங்களும் கேட்கலாம். வளந்த ஆளுக்குக் கொஞ்சம் புத்தியிருந்தாலும் கேக்கமுடியுமா என்றார். அதற்கடுத்த முறை வாரியாரைக் கேட்கும்போது இந்த வார்த்தைகள் விடாது என் மூளைக்குள் இடிக்கத் தொடங்கியதால், அவர் சொல்லும் கதையை அதற்குள் வரும் வாய்விட்டுச் சிரிக்கவைக்கிற குட்டிக் கதைகளை பழைய சுவாரசியத்துடன் கேட்கமுடியாமல் போயிற்று.

இது நிகழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகளில் கொஞ்சம் வளர்ந்தபின் கல்கி சாண்டில்யனை விட்டு, தமிழின் நவீன இலக்கியம் அறிமுகமானபோது திருமுருகன் சார் எழுதிக்கொண்டிருந்தவை கவிதைகளல்ல செய்யுள் என்பது புரியத் தொடங்கியபோது வாரியார் படு திறமையான கதை சொல்லி என்பது புரிந்தது.

கதையைத் தொடங்கிய கொஞ்ச நேரத்தில், வாரியார் சுவாமிகள் இன்னொரு கதை சொல்லத் தொடங்குவார். அதிலிருந்து வேறொன்றுக்குத் தாவுவார். கிளை விட்டுக் கிளை, கிளைக்கதைக்குக் கிளைக்கதை என்று தாவிக்கொண்டே இருப்பார். ஒன்றிலிருந்து பிறிதொன்றுக்கு எங்கே போனார் எப்போது போனார் என்கிற மாயம் எப்படி நிகழ்ந்ததென்று அவ்வளவு எளிதில் பிடிபடாது. கதை கேட்டுக்கொண்டிருக்கையில் இடையில் தூங்கிவிட்டோமோ என நம் மீதே ஐயம் வரும்படி எங்கெங்கோ சஞ்சரித்து, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடியும்போது, இப்படியாகத்தான் என்று ஓரிருவரிகள் சொல்லி சரட்டென தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்து இதை அதனுடன் கச்சிதமாகக் கோர்த்துவிட்டு, அப்பமொடவல்பொரி… என்று மங்களம் பாடிக் கதையை முடித்துவிடுவார்.

ஏழெட்டுக் கதைகளைப் படித்தபின் ஷோபாவின் கதை சொல்லும் பாணி ரொம்பப் பரிச்சயப் பட்டதாக இருக்கிறதே என இடித்துக்கொண்டே இருந்தது. அடடா இது வாரியாருடைய டெக்னிக் அல்லவா என்று இப்போதுதான் உறைத்தது. உடனே இதைத் தட்டச்சத் தொடங்கிவிட்டேன்.

வாரியாருக்கும் ஷோபாவுக்கும் இருக்கிற ஒரே வேறுபாடு, முன்னவர் புராணங்களில் இருப்பவற்றின் அருமை பெருமைகளையும் நுட்ப நுணுக்கங்களையும் காரண காரியங்களையும் எல்லோரும் வியந்து ரசிக்கும்படி சிரிக்கச் சிரிக்கச் சொல்லி அப்படியே வைத்து போஷிப்பவர். ஷோபா, எளிமையான அல்லப்பிட்டி கிராமத்து வாழ்வின் தருணங்களைக் கண்கூடாகக் கண்டு வியந்து ரசிக்கும்படிச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லிக்கொண்டே சென்று இறுதியில் அனைத்தையும் கலைத்துப் போடுபவர். கதையை முடிக்கையில் இருவருமே, தொடங்கிய இடத்துடன் சரட்டென ஒரே வாக்கியத்தில் கொண்டுபோய் இணைத்து முடிப்பவர்கள்தாம். ஒரே வேறுபாடு, வாரியாரிடம் வியப்பும் சிரிப்பும் மிஞ்சும். ஷோபாவிடம் சோகமும் சிந்தனையும் கிளம்பும். எனவேதான் வாரியார் கேளிக்கையளராக எஞ்சி விடுகிறார். ஷோபாசக்தி கலைஞனாக விஞ்சி நிற்கிறார்.

கேளுங்கள் பெளசர்! என்று தொடங்குகிறது கதை. முதல் பிளாஷ்பேக்கில் நிகழ்காலத்தில் சற்றே பின்னால் போகிற கதையின் இரண்டாம் பகுதி, பழைய கதையைச் சொல்கிறேன் கேளுங்கள் பெளசர்! என்று எழுத்தாளனான கதை சொல்லியின் பிள்ளைப் பருவத்திற்குச் செல்கிறது. பெளசர் என்பவர் கதைகளை வெளியிடும் பத்திரிகை ஆசிரியர் என்று கதையின் முதல் பத்தியின் மூலம் தெரிகிறது. ஆனால் அவர் யார் எவரென்று கதையில் சொல்லப்படவில்லை.

கதையின் முதல் காட்சி, ஒரு பொடியனை ஆறேழு பொடியன்கள் சேர்ந்து அடித்துக் களைவதாக இருக்கிறது. ஊரில், இயக்கத்தின் பேரில் நடந்த பல கொலைகளுக்கு, டொனாஸ் என்கிற பொடியன் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்ததைப்பற்றிய மற்றவர்களின் விசாரணை சொல்லப்படுகிறது. அவன் எல்லாவற்றையும் மறுக்கிறான். ஆனால் எம்ஜிஆரைக் கொலை செய்தது மட்டும் தான்தான் என ஒப்புக்கொள்கிறான். ஆனால் அவர்களுக்கு வந்தத் தகவலோ எம்ஜிஆர் தற்கொலை செய்துகொண்டு தூக்கில் தொங்கியதாக இருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

இந்தக் கதையை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு, கதையின் இரண்டாம் பாகம் கதைசொலியின் ஊருக்குப் போய், அந்த கிராமமும் சுற்று வட்டாரமும் அடுத்திருக்கும் சிற்றூர்களும் எப்படி எம்ஜிஆரின் தீவிர விசிறியாக இருந்தன என்பதை சீர்யஸா பகடியா என்று பிரித்தறிய முடியாத கலவையில் சொல்லிச் செல்கிறது. வருடங்கள் நகர்ந்து சிறுவர்கள் வளர, இலங்கைத் தழிழர்களின் போராட்டம், ஈழத்திற்கான போராகி உக்கிரம் பெற்று கிராமத்துக்குள் இயக்கம் நுழைகிறது.

இயக்கம் என்றவுடன் ஈழ ஆதரவு இலங்கை இந்திய வாசகர்கள், இது ஷோபாசக்தியின் இன்னொரு புலி எதிர்ப்பு என்று எண்ணி எதிர்மறை மனநிலைக்குப் போய்விடுகின்றனர். ஆனால் கதை அதற்கு எதிர் நிலையில் இருக்கிறது. சார்பெடுக்காத வாசகனுக்கு, ஷோபா எல்லா இயக்கங்களின் அத்துமீறல்களுக்கும் எதிரான நிலையில் நின்றே விமர்சிக்கிறார் என்பது புலப்படும்.

கதையின் இரண்டாவது பகுதியில் எம்ஜிஆரின் மவுசு திகட்டுமளவுக்குத் தரப்படுவதும் கதைசொல்லி தீவிர எம்ஜிஆர் விசிறியாக இருப்பதும் அந்தக் கிராமத்திலேயே எம்ஜிஆரின் நகலாக ஒருவர் உருவாவதும் அது விலாவாரியாகச் சொல்லிச் செல்லப்படுவதும் கதையின் இறுதியை நோக்கியே என்பது சிரிக்கச் சிரிக்க வாசித்துக் கொண்டிருக்கும் வாசகனுக்குக் கிஞ்சித்தும் தோன்றாத அளவுக்குச் சொல்லிக்கொண்டு செல்வதில்தான் இருக்கிறது ஷோபா என்கிற கதை சொல்லியின் வாரியார் திறமை.

எல்லோரிடமும் அன்பாகப் பழகுகிற, எம்ஜிஆரே எல்லாம் என்று எம்ஜிஆர் போலவே தொப்பியணிந்து கருப்புக் கண்ணாடி அணிந்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பாவமும் அறியாத அந்த ஈழத்து எம்ஜிஆர் தூக்குப்போட்டுக்கொண்டு செத்துப்போனதாக அதுவரை  அறியப்பட்டிருந்ததைக் கலைத்துப்போடுகிறது, பிரான்ஸில் கதை சொல்லியின் விசாரனைக்கு உட்பட்டிருக்கும் டொனாஸ், தான்தான் அந்த எம்ஜிஆரைக் கொன்றதாகச் சொல்வது. என்ன காரனத்துக்காக அவன் எம்ஜிஆரைக் கொன்றான் என்பதிக் கதை சொல்லியிடம் கூறுகிறான் டொனாஸ்.

இந்தப் பகுதியை இந்திய வாசகன் ஒருமுறைக்கு இருமுறை கூர்ந்து படிப்பது அவசியம்.

அதற்கடுத்த பத்தி,

நம்ப முடிகிறதா பெளசர்? அந்தக் கொலைக்கு அவன் சொல்லும் காரணத்தை உங்களால் நம்பமுடிகிறதா?

என்று தொடங்குகிறது.

அதிரடி விசாரணை செய்துகொண்டிருந்த பொடியளுக்கு, இயக்கங்களைப் போலல்லாது கோபம் அன்றோடு வடிந்துவிடுகிறது. இது சொற்களில் சொல்லப்படுவதில்லை. வாசகன் உணரும்படி எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவனுக்குச் சிந்திக்கும் சிரமம் கொடுக்காமல் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாவற்றையும் மிச்சம் மீதி வைக்காமல் எழுதிவைத்து விடுவதைப்போல, வாரியார், கேட்பவனுக்கு யோசிக்கும் கஷ்டமே கொடுக்கமாட்டார். அடித்துக்கொண்டிருந்த பொடியன்கள் சொந்த ஜோலியைப் பார்க்கவேண்டி இருந்ததில் இரவே டொனாஸை அவர்கள் விட்டுவிட்டனர் என்று எழுதிப்போட்டுப் போயிருப்பார் எழுத்தாளர். சின்ன தவறு செய்தவனையும் இயக்கம் எப்படி தண்டிக்கும். நிறையபேரைக் கொலைசெய்திருக்கிறான் என்று அடித்துக்கொண்டிருந்த அவனது வயதொத்த பையன்கள் குரோதமின்றி எப்படி நடத்துகின்றனர் என்கிற முரணை வாங்கிக்கொள்ள வேண்டியது, ஷோபாசக்தியிடம், வாரியாரின் வேலையாக இல்லாது வாசகனின் காரியமாகிவிடுகிறது.

ஏழெட்டுக் கதைகள் படித்த அனுபவத்திலேயே, எதையுமே பொருளற்று வைக்க மாட்டாரே ஷோபாசக்தி என்று இணையத்தில் தேடிப் பார்த்ததில்தான், பெளசர் என்பது முஸ்லீம் பெயர் என்பதே எனக்குத் தெரியவந்தது. எல்லோரும் இவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை. ஆனால் இந்த உபரித் தகவலும் தெரிகிறபோது, கதையின் இறுதியுடன் இதைக் கோர்த்தும் பார்க்கக்கூடிய வாசகனுக்கு இலங்கையின் இயக்ககளின் வரலாற்றில், சிங்கள ராணுவத்தால் மட்டுமின்றி எப்படியெல்லாம் எதற்காகவெல்லாம் இயக்கங்களின் கைகளிலும் அந்த மக்கள் சிக்கிச் சின்னாபின்னப்பட்டார்கள் என்கிற இன்னொரு பரிமாணமும் கிடைக்கக்கூடும்.

நன்றி: அம்ருதா அக்டோபர் 2018