October 2, 2018

காணாமற்போனவர்

சுஜாதா ஏன் சுவாரசியக் குப்பை ஷோபாசக்தி ஏன் கலைஞன் என தெரியவேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டிய கதை கண்டி வீரன் தொகுப்பிலிருக்கும் காணாமற்போனவர்.

பொழுதுபோக்குக் கதைகள் சுவாரஸியத்துக்கான எதிர்பாராத திடீர் திருப்பங்களைக் கொண்டவை. இதற்காக இலக்கிய கதைகளில் இவை இருக்கக்கூடாதென்றில்லை. இவற்றில் இருக்கும் திருப்பங்கள் வெறும் சுவாரசியத்தைத் தாண்டி வேறொரு விஷயத்தைச் சொல்ல வருபவை. இரண்டும் அடிப்படையில் எப்படி வேறுவேறானவையோ அப்படியே இதிலும் வேறுபடுகின்றன.

திருப்பங்களை வாசகன் எதிர்பாராவகையில் உண்டாக்குவதில் ஆகிவந்த உத்திகளில் ஒன்று, அவனது கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பிவிடுவது.

னக்கு எதிரே உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் தேடிக்கொண்டிருந்த பாவெல் தோழரைக் கொல்வதற்குத் தானே உத்தரவிட்டதாகச் சொல்லிவிட்டு ஒரு கோணல் சிரிப்புடன், பாதி நரைத்துப்போன அவரது மீசையில் படிந்திருந்த ‘பியர்’ நுரையை அழுத்தித் துடைத்துக்கொண்டார்.

என்று கதையை ஆரம்பித்துவிட்டு, அடுத்த பத்தியிலேயே,

‘இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது. சென்ற கோடை காலத்தில் எனது அப்பா சென்னையில் இறந்துபோனார்…

என்று, வேறிடத்துக்குத் தாவிவிடுகிறது. ஆனால் இதுபோல், முதல் பத்தி ஒன்றாகவும் இரண்டாவது பத்தி வேறொன்றாகவும் இருப்பது ஷோபாசக்தியின் நிறைய கதைகளில் காணக்கிடைப்பதுதான்.

“நான் ஜன்னலுக்கு அருகே நின்று கொண்டு தலை வாரிக் கொண்டிருந்தேன்। தெருவில் ஒருவன் நடந்து போய் கொண்டிருந்தான். அவனுக்கு தலையே இல்லை” .இது முதல் பேரா. அடுத்த பேராவில் “அவன் தலையில் ஒரு பானையை கவிழத்து கொண்டு போய் கொண்டிருந்தான்।” என்று எழுது அல்லது “அவன் தலை வெட்டப்பட்டு விட்டது. முண்டம் மட்டும் நடந்து போய் சுருண்டு விழுந்தது” என்று எழுது. முதல் வகை நகைச்சுவை கதை. இரண்டாவது துப்பறியும் கதை. வேறு ஏதாவது விதமாகவும் கூட இதை எழுதலாம். ஆனால் முதல் பேராவில், முதல் வாக்கியத்தில் கதை ஆரம்பித்து விட வேண்டும்.

என்று தமக்குக் கதை எழுத சுஜாதா கற்றுக்கொடுத்ததாக பாலகுமாரன் பிளாகில் சொல்கிறார்.

காணாமற்போனவர் கதையை சுஜாதா சொல்வதைப்போல் வகைப்படுத்தினால் அது துப்பறியும் கதை வகையில்தான் போய்விழும். ஆனால் சுஜாதா சொல்லும் இலக்கணத்தை ஒட்டி ஷோபாசக்தி எழுதியிருந்தால், கண்டிப்பாக இந்தக் கதையை பொருட்படுத்திப் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்.

பாவெல் என்பவரைக் கொல்ல உத்தரவிடப்பட்டதைப் பற்றி ஒருவர் சொல்வதாக முதல் பத்தியில் தொடங்கிய கதை, -கதையை நேர் செய்து பார்த்தால், இந்தப் பத்தி கதையின் இறுதியில் வந்து நிற்கும். ஆகவேதான், இரண்டாவது பத்தியை,

இந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது….. இந்தக் கதை இன்னும் அய்ந்து நிமிடங்களில் முடியவிருக்கிறது.

என்று தொடங்குகிறார் ஷோபாசக்தி. தந்தை இறந்து நான்கு நாட்கள் ஆகி சென்னைக்கு போகவேண்டி நேர்வதை விவரித்து விமானநிலயத்திற்கு வாசகனை அழைத்துச் செல்கிற, 2012ல் நடக்கிற கதைசொல்லியின் கதை, அங்கு வரும் சவரியான் என்கிற வேறொரு பாத்திரத்தின் மூலமாக பாவெல் என்கிற பாத்திரத்தின் மனைவியின் பெயர் பால்ராணி என்பதைக் குறிப்பிட்டு, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சவரியான் சொல்கிற கதையாகச் மாறிவிடுகிறது. அதாவது 1977ஆம் ஆண்டிற்குச் செல்கிறது.

சவரியான், தலைமறைவு வாழ்க்கையில் தம்மைப் பாதுகாத்து உதவிய பாவெல் தோழரையே, போலீஸ் சித்தரவதையைத் தாங்கமுடியாமல் காட்டிக்கொடுக்க நேர்ந்ததையும் அந்தக் குற்றவுணர்வு காரணமாக சவரியான் உழல்வதையும் சொல்கிறது. பிறகு பாவெல்லின் டிராட்ஸ்கிய சிறு கட்சி 86ல் தமிழ்ப் பகுதிகளிலும் 88ல் சிங்களப்பகுதிகளும் தடைசெய்யப்படுகிறது.

பிறகு, 2004ல் வறுமையில் இலங்கையில் உழன்றுகொண்டிருந்த பாவெல்லை, பிரான்ஸிலிருந்து சவரியான் போய் சந்தித்ததைச் சொல்கிறது. முதலில் நட்புடனும் பண உதவியுடனும் தொடங்குகிற சந்திப்பு, பாவெல் தரப்பில் இடதுசாரி பார்வையிலும் சவரியான் பார்வையில் புலிகளின் ஆதரவாகவும் வெளிப்படுகிறது. தமக்கு மட்டுமின்றி சவரியான் புலிகளுக்கும் பெருந்தொகையைக் கொடுத்திருப்பது தெரியவர, சவரியான் அன்பளிப்பாய் கொடுத்த பொருட்களையும் பணம் ஐம்பதாயிரத்தையும் திருப்பிக் கொடுத்து நட்பை முறித்துக்கொள்கிறார் பாவெல். அவருடைய வீட்டைவிட்டு வெளியேறுகையில் பாவெலுக்குத் தெரியாமல் எதிரில் வந்து நிற்கும் பாவெல்லின் மனைவி, எதுவும் பேசாமல் பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டுச் செல்கிறார். சவரியான் பிரான்சுக்கும் வந்துவிடுகிறார். வந்த உடனே பாவெல் தோழருக்கு நீண்ட மன்னிப்புக் கடிதமொன்றை எழுதுகிறார். ஒரு மாதம் கழித்து பாவெல்லிடமிருந்து, வவுனியாவிலிருந்து அஞ்சல் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரமொன்று சவரியானுக்கு வருகிறது.

இது நடந்து ஓராண்டு கழித்து, 2005 வாக்கில், விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டுக் காணாமல் போகிறார் பாவெல்.

இதுவரை கதை சொன்னது சவரியான். அதைத் தொகுத்துச் சொன்னவர் கதைசொல்லி. சவரியான், விமானம் புறப்படவிடுக்கும் நெருக்கத்தில், 2012ஆம் ஆண்டில் கதைசொல்லியிடம், கும்மிடிப்பூண்டியில் இருக்கும் அகதிகள் முகாமில் இருக்கிற பால்ராணியிடம், அவர் கணவர் பாவெல் பற்றி விசாரித்துத் தெரிந்து வருமாறு வேண்டிக்கொள்கிறார்.

“தோழர் பாவெல் இன்னும் உயிரோடுதான் இருப்பார் என்றே எனது மனம் சொல்கிறது, அவரை எதுவும் செய்திருக்கமாட்டார்கள்” என்று சவரியான் சொல்லும்போது அவருக்குக் கண்கள் சிவந்து நீர் கோர்த்திருந்தது.

இப்போது, கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கதையின் முதல் பத்தியை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது.

கதையில் வருடங்கள் முக்கியம். அவற்றில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள் முக்கியம். இவையெல்லாம் பின்புலத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.

ஆண்டாண்டுகாலமாய் நடந்த போரின் காரணமாக மனிதர்கள் எப்படியெல்லாம் மாறிவிடுகிறார்கள் அல்லது நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்கிற கதையில்,

சென்னை விமான நிலையத்திற்கு அம்மா வந்திருந்தார். ஒரு பெரிய அழுகையுடன் அம்மா என்னை எதிர்கொள்வார் என நினைத்திருந்த எனக்கு அம்மாவின் அமைதியான புன்னகை நிம்மதியைக் கொடுத்தது. 

சொல்லவந்த கதைக்குத் தொடர்பே இல்லாததுபோல கிளைக்கதையில் இப்படிப் போகிற போக்கில், சொல்லிவிட்டுப் போவது எல்லோருக்கும் எளிதில் கைவரும் காரியமில்லை.

கதையின் பிற்பகுதியில் வருகிற அம்மான், கடைசி பத்திக்கு முந்தைய பத்தியில், உண்மையில் யார் என்பது தெரிய வந்ததும் விடுபடும் எதிர்பாரா மர்மத்தில் பெரும்பாலான வாசகர்கள் பிரமித்து நிற்கக்கூடும். இதற்காகவே சுஜாதா, இதை சிறந்த கதை என்றும் சொல்லிவிடக்கூடும்.

ஆனால் இந்தக் கதையின் சிறப்பு, வாசகன் ஊகிக்கமுடியாதபடி கொண்டு சென்று இறுதியில் மர்மத்தை விடுவிப்பதில் இல்லை. மனிதர்கள், தாம் பிழைத்துக் கிடப்பதற்காக, எப்படித் தாங்கள் அனுபவித்த அவலத்தையே பிறிதொருவன் மீது ஏற்றி, தங்களைப் பெருமையாகக் காட்டிக்கொள்ளவும் எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வுகளில் தம்மைப் பொருத்திப் புனைந்துகொள்வதிலும் அடுத்தவரிடம் தம் மீதான இரக்கத்தைத் தருவிக்கவும் கேட்பவருக்குக் குற்றவுணர்வை உண்டாக்கவல்ல கதைகளையும் பொய்களையும் அச்சு அசலாய் உண்மை போலவே தோற்றமளிக்கக்கூடிய கற்பனைகளையும் எப்படி உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்வதில் இருக்கிறது. அது கதையின் பிற்பகுதி முழுவதிலும் விரவிக் கிடக்கிறது.

இப்படி அடுக்கிக்கொண்டே போவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவே, மர்மம் விடுபட்ட பின்னும் திரும்பத்திரும்ப முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் பலமுறை படிக்க வைக்கிறது இந்தக் கதை. இலக்கிய தரமற்ற, சுஜாதா எழுதக் கற்றுக்கொடுத்ததாக பாலகுமாரன் பெருமையுடன் கூறிக்கொண்ட வெறும் கிரைம் துப்பறியும் கதைகளுக்கு இது ஒருபோதும் சாத்தியமில்லை.

இந்த மர்ம கிரைம் கதையின் மேன்மை, இறுதி வரியில் இல்லை. அதற்குச் சற்றுமுன்,

ஏனோ அப்போது எனக்கு அம்மானிடம் பேரச்சம் உண்டாகியது.

என்ற கதைசொல்லி, அதற்கு இரண்டு மூன்று பத்திகளுக்குப் பின்னர்,

அம்மானின் கையை இழுத்து மறுபடியும் உட்கார வைத்துவிட்டு, பரிசாரகனை அழைத்து மது கொண்டுவரச் சொன்னேன்.

என்று அம்மானைப் புரிந்துகொள்வதில் இருக்கிறது.

நன்றி: அம்ருதா அக்டோபர் 2018