October 7, 2018

வாசிக்கும் போது 

தக்க வைக்க

வாசிக்க வேண்டிய

துணைச் சொற்கள் சேர்ந்திருத்தலே முறை, நன்று – வாசகனை, வாசிக்கும்போது நம்வசம் அவனைத் தக்கவைக்க, தக்க வைக்க வாசிக்க வேண்டிய என்றில்லாது, வாசிக்கவேண்டிய என்று இருக்கவேண்டும். பிரிந்துத் தனியே நின்றால் பொருள் தராத வற்றை தராதவற்றை என்று எழுதவும். அச்சு அமைப்பில் ‘கொண்டு’ போன்றவற்றைச் சேர்த்தால் பெரிய வார்த்தையாகி, வாக்கியம் கண்ணை உறுத்தும்போது, வேறுவழியின்றிப் பிரித்துப் போட்டுக்கொள்ளலாம். ‘போட்டுக் கொள்ளலாம்’ இல்லை.

 

சரி. எப்ப பிரிக்கணும், எப்ப சேர்க்கணும்னு ஏதும் விதியுண்டா?

 

கொண்டு

‘கொண்டு’ தனியா பொருள் தரலையில்லையா, சேர்க்கணும்

புரியும் படி- ஒரு அர்த்தம்

புரியும்படி வேற அர்த்தம்

வந்து போய் கொண்டிருந்தார்

வந்துபோய்க்கொண்டிருந்தார்

இலக்கணம் என்பதைவிட மொழிச் சரளத்துக்கு இதெல்லாம் அவசியம். வாசகன் இதையெல்லாம் கவனிக்கக்கூடமாட்டான். ஆனா அவனையறியாம அந்த சரளத்தை உணர்வான். 

 

Ok. இதையெல்லாம் யோசிச்சதேயில்லை.

ம்ம்

அடுத்த வாரம் எழுதும்போது இதையும் நினைவில் வைத்துக்கொள்கிறேன்

 

கையால் எழுதியதை அச்சுக்கோர்த்த காலத்திலேயே நானெல்லாம் ‘உடைக்க மாட்டேன்’ என்று வராமல் உடைக்கமாட்டேன் என சேர்ந்துவரும்விதமாகவே பார்த்துக்கொள்வேன்.

‘சேர்ந்துவரும்விதமாகவே’ என்று சேர்த்து எழுதினால் இந்தச் சொல் நீளமாக இருப்பதால், இக்கால ‘டிடிபி பிரிண்ட்டில்’ மற்ற வறரிகளைப்போல் நார்மல் சைஸில் இல்லாமல், இந்த வரியின் ஃபாண்ட் அளவை சிறியதாக்கிவிடும். எனவே இதை வசதிக்காக, சேர்ந்துவரும் விதமாகவே என்று உடைத்துக்கொள்ளலாம்.

ஒலி நயம் உடையாமல்

ஒலிநயம் உடையாமல்

 

ம்ம்

 

அத்தியாவசியமாக இருந்தால்தவிர – ‪விரும்புகின்றது‬ – கின்றது வேண்டாம். கிறது போதும்.

வாசிப்பவனுக்கு, அவன் அறியாமலே, நம் வார்த்தைகள் அவன் மனதிற்குள் உருண்டு ஓடவேண்டும்.

 

சரிதான்.

சும்மாவே நான் ஒரு கட்டுரைக்கு ஏழு நாள் எடுத்துப்பேன்

இதெல்லாம் யோசிச்சா எழுதவேமாட்டேன்னு நினைக்கறேன் 😊😂

 

எழுதும்போது யோசிக்காம ஓட்டி எழுதிட்டு, ஒருக்கா வாசிக்கும்போது யோசிச்சா போதும். திருத்திக்கிட்டு வரும்போதே யோசனை இன்னும்கூட கூர்மையாகலாம். வளவளப்பு குறையலாம். இப்பப் புதுசா சிலது தோணலாம். ஒட்டுமொத்த விஷயம் சரியா வந்திருக்கா இல்லையானு தெரியவரலாம்.  தொனி சரியா வந்துருக்கா இல்லையானு பிடிபடலாம். திரும்பத் திரும்ப எழுதறது, மூளையில்லாம மட்டித்தனமா இயந்திரத்தனமா செய்யிற காரியமில்லே. நெருக்கியடிக்கிற ரயில்ல ஒண்டி ஒடுங்கி நின்னுக்கிட்டே சங்கீதம் தெரிஞ்சவன் மனசுக்குள்ள சாதகம் பண்றாமாதிரி. விஸ்தாரமான வெளில சஞ்சரிக்கிறா மாதிரி. சாதகம், சரளமான சங்கீத சஞ்சாரத்துக்குக் கைகுடுக்கறா மாதிரி, எழுதும்போதே நாளாவட்டத்தில் ‘எழுதும் போதேனு’ பிரிச்சுத் துண்டுத் துண்டா துவம்சம்பண்ணி எழுதமுடியாம போயிரும்🤪

 

🙏

 

பேஸ்புக் போஸ்ட் உட்பட அலட்சியப்படுத்தாம இதைக் கடைப்பிடிக்கத் தொடங்கினா, சரளமா தமிழ் எழுதறது, சுவாசிக்கிறா மாதிரி இயல்பாயிடும்.

 

சுட்டிக்காட்டினதுக்கு🙏 

 

நீங்களே இப்ப ‘சுட்டிக் காட்டினதுக்கு’னு பிரிச்சி எழுதாம சேர்த்து எழுதியிருக்கீங்க கவனிச்சீங்களா. கவனிச்சி எழுதியிருந்தா நல்லது. கவனிக்காம எழுதியிருந்தீங்கனா ரொம்ப நல்லது. கவனிக்காமலே கவனமா எழுதறது, எல்லாரையும் நம்மை கவனிக்கவைக்குதோ இல்லையோ, கவனமில்லாத ‘வாசகனை’யும் நம்மை வாசிக்கவைக்கும். வாசிக்க வாசிக்க நாம் சொல்லவரதை, அவனையறியாம கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பான்.