October 27, 2018

தங்கரேகை

இலக்கியமும் அரசியலும் பெரும்பாலும் இணைவதில்லை. இதை, இலக்கியத்தைத் தவிர இலக்கியவாதிகளுக்கு வேறு எதிலும் அக்கறையில்லை என்று அரசியல் விழிப்புணர்வு உள்ளவர்களும் அரசியல்வாதிகளுக்கு அறிவில்லை என்பதாக இலக்கியவாதிகளும் பரஸ்பர அவமதிப்புடன் அணுகுகின்றனர்.

இரண்டுமே மனிதர் வாழ்வில் தவிர்க்கமுடியாதவை எனினும் இவ்விரண்டின் அடிப்படை இயல்பு காரணமாகவே இரண்டும் எதிரெதிரானவை என்பதுபோன்ற மேற்போக்கான தோற்றத்தை அளிக்கின்றன.

அரசியலில் நாட்டு நலனே அடிப்படை எனினும் கட்சி நலனை ஆதாரமாகக்கொண்டே, அது நடைமுறையில் இயங்கிக்கொண்டு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மை. 

அரசியல் இலக்கியம் இரண்டுமே இலட்சியம் சார்ந்தவை. இரண்டுமே மக்களுக்கானவையே எனினும் இலக்கியம் அன்றாட நடைமுறை சார்ந்ததன்று. இதன் காரணமாகவே, கட்சி அரசியலிலோ தாம் உட்பட மக்கள் அனைவரையும் பாதிக்கும் அன்றாட நாட்டு நடப்புகளிலோ இலக்கியவாதிகளின் கவனம் குவிவதில்லை. இதற்காக, இலக்கியத்தில் அரசியல் இல்லையென்றோ இலக்கியவாதிக்கு நாட்டைப்பற்றிய அக்கறையில்லையென்றோ அர்த்தமில்லை. அரசியல் இலக்கியம் இரண்டுமே அடைப்படையிலும் அணுகுமுறையிலும் வெளிப்பாட்டிலும் இயல்பிலும் முற்றிலும் வெவ்வேறானவையாக இருக்கின்றன எனினும் எதிரெதிரானவை அல்ல.

அடிப்படையில், அரசியல் மனிதனின் பெளதிக வாழ்வை மேன்மைப்படுத்துவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது என்றால் இலக்கியம் மனித இயல்புகளை மேன்மைப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறது.

அணுகுமுறையில், அரசியல் தன் எல்லைக்குட்பட்ட ஒட்டுமொத்த மனிதக் கூட்டத்தின் நலம் குறித்து சிந்திக்கிறது. இலக்கியம் மனிதர்களின் அவலங்களை முன்னிறுத்தி, தனிமனிதர்களைச் சிந்திக்கவைப்பதிலேயே குறியாய் இருக்கிறது.

வெளிப்பாட்டில், அரசியல் மனிதக் கூட்டத்தை நோக்கி உரத்துக் கூவுகிறது. இலக்கியம் வாசிக்கும் மனிதனை யோசிக்கவைக்கிறது.

இயல்பில், அரசியல் மனிதர்களை எதிரெதிர் தரப்பாக்கி உணர்ச்சிவயப்பட்டு ஆவேசம்கொள்ள வைக்கிறது என்றால் இலக்கியம் சிந்திக்க வைத்து அமைதிப்படுத்துகிறது. எதிர் தரப்பின் மீது வெறுப்பை உமிழ்வதன் மூலமாகமட்டுமே தன் தரப்பை நிலைப்படுத்திக்கொள்ளப் பார்ப்பது உலகெங்கும் அரசியலாக இருக்கையில், தரப்புகளை மீறி சாதாரண மனிதர்களிடம் மனிதம் எவ்வளவு உயிர்ப்போடு இருக்கிறது என்று பார்க்க முனைவது இலக்கியமாகிறது.

இரண்டு மனிதர்களைப் பற்றிச் சொல்கிற கதைகள், வாசகனை எளிதில் ஈர்க்கவல்லவை. வெகுஜன எழுத்தில் இது பெரும்பாலும் நாயகன் வில்லன் என்கிற சூத்திரத்தில் இயங்குகிறது. இலக்கியத்தில், நல்லவன் கெட்டவனாக ஆரம்பித்து, இறுதியில் இருவருமே நல்லவர்களாக முடிகிறவையே, என்றைக்குமான சிறந்த கதைகளாக விளங்குகின்றன.

ஷோபாசக்தியின் தங்கரேகையில் வரும் இருவருமே நல்லவர்களுமில்லை கெட்டவர்களுமில்லை. இருவருமே, போருக்கு நடுவில் எப்படியாவது கொஞ்சம் நன்றாக வாழ்ந்துவிட முடியாதா என்கிற நப்பாசையில், ஆபத்து என்று தெரிந்தே தலையை நீட்டி எட்டிப் பார்க்கிற, நல்லதும் கெட்டதும் புத்திசாலித்தனமும் அசட்டுத்தனமும் என எல்லாம் கலந்த எளிய மனிதர்கள்.

அரசியல் தரப்பில் கெட்டிப்பட்டு இறுகி நிற்போருக்கு, ஷோபாசக்தியின் கதைகள் எல்லாம் புலி எதிர்ப்பாகவே பூச்சாண்டி காட்டுகின்றன. அதற்கு இந்தக் கதையும் விலக்கில்லை. ஆனால் திறந்த மனதுடன் படிக்க விழையும் வாசகனை, இறுதியில் விக்கித்து நிற்கச் செய்வதே இதன் வெற்றி.

மேலோட்டமான முதல் பார்வைக்கு, ஷோபாசக்தியின் கதைகள் எங்கோ ஆரம்பித்து எதையெதையோ வளவளவென்று சொல்லிக்கொண்டுபோய் எங்கோ முடிகின்றன என்று தோன்றக்கூடும். பகடியாக இருப்பதால் மட்டுமே இவை ஈர்க்கின்றன என்று கூறி திருப்திபட்டுக்கொள்ளும் விமர்சகர்களுக்குக் கொஞ்சம் இலக்கியமும் தெரிந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணிதான் இரக்கப்பட்டுக்கொள்ளவேண்டும்.

கதை தொடங்குவது புனிதவதி டீச்சரிடம். ஆனால் கதையின் நாயகி அவரில்லை. அவரிடம் இயக்கத்துக்குத் தங்கம் கேட்டு வம்படியாய் பெற்றுக்கொள்கின்ற புலி பொடியர்கள் இந்தக் கதையின் வில்லன்களுமில்லை.

கதையின் ஒரு நாயகனைப்பற்றி -புனிதவதி டீச்சரின் தம்பியான வேலும் மயிலும் என்கிற பாத்திரம் பற்றிய குறிப்பு வருவதற்கே நான்கு பக்கங்கள் ஆகிவிடுகின்றன. அவனே வர இன்னும் நான்கு பக்கங்கள். இருபது பக்கக் கதையில் ஒரு கதாநாயகன் வரவே இப்படியென்றால் இன்னொரு கதாநாயகன் அறிமுகமாக சரிபாதி பக்கங்களுக்கும்மேல் கடந்துவிடுகின்றன.

இவரது கதைகளில் அநேகமாக அனாவசியம் என்று எதுவுமே கிடையாது. கதையின் முதல் எட்டு பக்கங்களில், புலிகள் தங்கம் வசூலிப்பது பகடியாகச் சொல்லப்படும் பாவனையில் கதைக்கான அடித்தளம் இடப்படுகிறது. கதைநெடுக தங்கம் இழையோடிக்கொண்டே இருக்கிறது. அவரிடமிருந்த நான்கு பவுன் செயினைப் புலிகளுக்குத் தாரைவார்த்தபின் மருத்துவமனையில் அவருக்கு ஆப்பரேஷன் செய்ய நான்கு லட்சம் தேவைப்படுவது, வேலும் மயிலுவிற்குத் தெரியவருகிறது. பிரான்ஸுக்கு  எப்போதோ சென்றுவிட்ட புனிதவதியின் மகன், சீட்டுப் பிடிக்கும் தொழில்செய்து, மக்கள், மாதாமாதம் கட்டிய சீட்டில் ஆயிரம் பவுன்களோடு தலைமறைவாகிவிட்டான் என்பதுகூட இலங்கையில் எவருக்கும் தெரியாது. புனிதவதி டீச்சருக்கு ஆப்பரேஷன் செய்ய அவர் மகனிடம் பேசி பண உதவி பெறவே வேலும் மயிலும், அப்போது இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் வவுனியாவை நோக்கிப் பயணப்படுகிறான்.

இரண்டாவது கதாநாயகனோ பூதாகாரமாக வளர்ந்த சிங்கள மட்டி. புலிகள், மக்களிடமிருந்துத் தங்கத்தைத் திரட்டி, துப்பாக்கிக் குண்டு செய்கிறார்கள். தாம் இருக்கும் வீட்டைக் கட்ட முடிந்ததே, தம் காலில் பாய்ந்த புலிகளின் தங்கக் குண்டுகளை வைத்துதான் என்று, ராணுவத்தில் இருந்த அவனது எஜமான் சொல்கிற புருடாவை நம்பி இலங்கை ராணுவத்தில் சேர்ந்தால் தானும் பணக்காரனாகிவிடலாம் என்று பயணப்படுகிற அளவுக்கு முட்டாள்.

ராணுவத்திற்கும் புலிகளுக்குமான போரில் இரு தரப்புக்கும் இடையில் எல்லைக்கோடுகள் நிரந்தரமாக இல்லாமல், நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டிருக்கிற காலகட்டத்தில் கதை நிகழ்கிறது.

தமிழனான வேலும் மயிலும், தமிழ் எல்லையைத் தாண்டி சிங்கள ராணுவத்தின் வசம் இருக்கும் வவுனியாவுக்குள் வெற்றிகரமாகப் போய், பிரான்ஸுக்கு போன் பேசி அக்காள் புனிதவதியின் மகனைத் தொடர்புகொள்ள முடியாமல், வெறுங்கையோடு புலிகளின் வசம் இருக்கும் தங்கள் ஊருக்குத் திரும்பியாகவேண்டும்.

இலங்கை ராணுவத்தில் சேர்ந்து, தன் எசமானைப்போல் தங்கக் குண்டுகள் கையிலோ காலிலோ தனக்கும் பாய்ந்தால் தானும் அவரைப்போலப் பணக்காரனாகிவிடலாம் என்கிற கனவோடு புறப்படுகிற பமு என்கிற சிங்களவன், ராணுவத்தில் சிக்கி சின்னாபின்னப்பட்டு, அவர்களால் விரட்டப்பட்டு, கிண்டலாகச் சொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தில்தான் இராணுவத்துக்கு ஆட்கள் தேவை என்பதை உண்மையென நம்பி எல்லையை நோக்கிப் பயணப்படுகிறான்.

இருவரும் எல்லையோர பிள்ளையார் கோவிலில் சந்திக்க நேர்கிறது.

சிங்களவனின் பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டு, வேலும் மயிலும் தன்னிடம் இருக்கிற ரொட்டியில் பாதியைப் பிய்த்து சிங்களவனுக்குக் கொடுக்கிறான்.

இரவு, இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலும், எல்லைகள் மாறியிருப்பதை அறியாமலும் எல்லையைக் கடக்க முற்படுகிறார்கள். ஒருவன் கொல்லப்படுகிறான். ராணுவத்தில் சேர்கிற லட்சியத்துடன் புறப்பட்டவனின் சடலம் ராணுவ உடையில் ஊருக்குள் புலிகளால் கொண்டுவரப்படுகிறது.

இப்போது, கதை எப்படித் தொடங்கியது என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள். ‘நாங்கள் உங்களுக்காகத்தானே சண்டைபிடித்துச் சாகிறோம்’ என்று கூறிக் கட்டாயப்படுத்தித் தங்கம் சேகரிப்பதில், கதை தொடங்கியதை நினைவுகூர்ந்தால், ராணுவ உடையுடன்கூடிய சிங்களப் பிரேதம் புலிகளால் ஊருக்குள் கொண்டுவரப்படுவது விளம்பரப் பிரச்சாரத்திற்காகவே என்பதும் ஆனால், தங்கம் கிடைக்கும் என்று ராணுவத்தில் சேரபுறப்பட்ட பரிதாபத்துக்குரிய சிங்கள மூடனுக்கு, செத்த பின்பு ராணுவ உடை கிடைத்திருக்கும் பின்னணியில் இருக்கும் அபத்தமும் புலப்படும்.

வேலும்மயிலும் கொல்லப்படுவது விவரிக்கப்படுவதோடு சரி. அவன் சடலம் என்ன ஆயிற்று என்பது சொல்லப்படுவதில்லை. ஆனால் கதையின் இறுதி வரிகளில் தமிழனும் சிங்களவனும் பகிர்ந்து தின்ற ரொட்டி என்ன ஆயிற்று என்பதைச் சொல்லிமுடிக்கிறார் ஆசிரியர்.

அரசியல், மாற்சரியத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கையில், எப்பேர்ப்பட்ட அவலத்திலும் ஒளிர்ந்துகொண்டு இருக்கும் மனிதத்தைச் சொல்வதன் மூலம் இந்தக் கதை, இலக்கியத்தின் உச்சத்தை அனாயாசமாகத் தொட்டுவிடுகிறது. 

 

நன்றி: அரும்பு நவம்பர் 2018