November 27, 2018

பரபாஸ் 

பாரபாஸ் – பேர் லாகர்குவிஸ்டு எழுதியது. தேவமலர் – ஸெல்மா லாகர்லெவ் எழுதியது. இரண்டுமே ஸ்வீடிஷ் படைப்புகள். இரண்டுமே திருடர்களைப் பற்றியவை. இரண்டையுமே தமிழில் மொழிபெயர்த்தவர் க.நா.சு. இரண்டுமே இலக்கிய பொக்கிஷங்கள்.

தம்முடைய பரபாஸை, தேவமலர் போன்ற உலக தரத்திற்கு இணையாக எழுதி வைத்திருக்கிறார் ஷோபாசக்தி. இதுவும் திருடர்களைப் பற்றிய கதைதான்.

மூன்று கதைகளிலுமே திருடர்கள் கருணையுடன் பார்க்கப்படுகிறார்கள். அதற்காக அவர்களது திருட்டு மூன்றிலுமே நியாயப்படுத்தப்படவில்லை. மூன்று எழுத்தாளர்களும் அவர்களது கதை மாந்தர்கள் ஏன் திருடர்களாக ஆனார்கள் எப்படி சமுதாயத்தால் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றெல்லாம் முற்போக்காக எந்த முலாமும் பூசி விளக்கிக்கொண்டிராமல், அவர்கள் திருடர்கள் என்பதை, அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கை, எழுத்தாளர்களின் எந்த உச்சுக்கொட்டலும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகும் எவ்வித இறைஞ்சுதலுமின்றி இந்தத் திருடர்கள் மூவரிடமுமே வாசகனை இரக்கம்கொள்ள வைப்பதுதான் இவர்களது எழுத்தின் மேன்மை.

தம் கதைகள் எல்லாமே அரசியல், தாம் கதை எழுதுவதே அரசியல் செயல்பாடுதான் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பவர் ஷோபசக்தி. அவரது அரசியல் எதிரிகளும் அவரது கதைகளில் அவர்களுக்கு எதிரான அரசியலை மட்டுமே பார்த்து, இலக்கியத்தைத் தவறவிடுகிறார்கள். அரசியல் என்று சொல்லிக்கொண்டு இலக்கியத்தைப் படைத்துக்கொண்டிருப்பது தமிழில் கொஞ்சம் அபூர்வம். ஏனென்றால் இங்கே இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு இலக்கியமாகப் படைக்கப்பட்டுபவையே ரொம்பக் கொஞ்சம்.

இவற்றைக் கதையாக மட்டுமே பார்க்கிறான் கால தேசங்களைக் கடந்த தேர்ந்த வாசகன். அவனுக்கு இவை எப்படித் தெரிகின்றன என்பதில்தான் இருக்கிறது எழுதப்பட்டிருக்கும் இக்கதைகளின் இலக்கியத் தகுதி.

பின்புலம் கதையைப் புரிந்துகொள்ள மேலதிகமாக உதவக்கூடும் என்பதால் இது எழுதப்பட்ட காலம் முக்கியமாகிறது. பரபாஸ் ஜூன் 2007ல் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையின் இந்தக் காலகட்டத்தின் பின்னணியுடன் சேர்த்துப் பார்த்தால் சொல்லப்படாத அடுக்கு புலப்படக்கூடும். சொல்லப்பட்டு இருப்பவற்றைவிட சொல்லப்படாமல் விடப்பட்டவையே எந்தக் கதையையும் வேறு தளத்திற்கு நகர்த்தவல்லவை.

மேற்கோளுடன் கதையைத் தொடங்குவது கிளாசிக் இலக்கிய மரபு. ஆனால் மேற்கோள் அல்லது கவித்துவமான தலைப்பு கூட வாசகனிடம் எதிர்பார்ப்பை உருவாக்கி, ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிடும் அபாயம் உள்ளது. மேற்கோளின் தரத்திற்குக் கதை இல்லையென்றால் அதுவே படைப்பைக் கேலிச்சித்திரமாக்கிவிடும்.

“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்கிறீர்கள்? பரபாஸையோ? கிறித்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்” – (மத்தேயு 27:18)

எதிரெதிர் இருமைகளால் ஆனது உலகு.

இயேசு கிறிஸ்து இரட்சகராக அறியப்படுகிறவர். மனிதனை இரட்சிக்க வந்தவையாகச் சொல்லிக் கொள்பவை இயக்கங்கள். போலீஸ் என்கிற அரசு இயந்திரம் இருப்பதும் மக்களை இரட்சிக்கத்தான். திருடர்களும் இரட்சகர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதை நகைச்சுவையுடன் கதை நெடுக தெளித்துச் செல்கிறார் ஆசிரியர்.

“குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்குமிடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக, கலை உணர்வுடன் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும் நம்பிக்கை சிருஷ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகு லாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்” என்று பிரெஞ்சு இலக்கிய மேதையான ஆண்ட்ரே ழீடு, பேர் லாகர்குவெஸ்டின் பாரபாஸ் ஆங்கில மொழிபெயர்ப்பாளருக்கு எழுதியதாக அன்புவழி என்கிற தமது, பாரபாஸ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் கூறுகிறார் க.நா.சு.

ஷோபாசக்தியின் பரபாஸ் தொடங்குவதும் முடிவதும் காலடித் தடங்களில். கடற்படையினரின் பூட்ஸ் கால் தடங்களைத் தவிர சந்தியாப்புலம் கிராமத்தில் வேறு மனிதக் கால் தடங்களே இல்லாமல் போய்விட்டது என்று தொடங்குகிற கதை, அதற்கு இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் என்ன நடந்ததென்று சொல்லி தேவாலயத்தின் சந்தியோகுமையருடைய குதிரையின் குளம்படித் தடங்கள் கடலுக்குள் சென்று மறைவதில் முடிகிறது.

வில்லியம் என்கிற திருடனைப் பற்றிக் கூறத்தொடங்கிய கதை, அறுபது ஆண்டுகளாகத் திருடிக்கொண்டிருக்கும் கள்ளக் கபிரியேலின் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறது. பிரப்பம்தாழ்வு என்றழைக்கப்பட்ட அந்த கிராமம், அறுபது ‘வருடங்களீற்கு’ முன்பு பெத்லேம் இஸ்ரேல் பாதிரியாரால் சந்தியோகுமையர் தேவாலயம் அமைக்கப்பட்டதிலிருந்து மாதத்திற்கு ஓரிருமுறை நடுநிசியில் குதிரைக் குளம்பொலிக்க சந்தியோகுமையர் வீதிவலம் போவதைச் சொல்கிறது. கண்ணிகளை இணைத்துக்கொள்வது வாசகன் கையில்.

கிழவர் திருடுவதும் பிடிபடுவதும் அதற்கொரு சால்ஜாப்பைச் சொல்லி அவர் சாதாரணமாக செல்வதும் பொருளைப் பறிகொடுத்தவனைத் தவிர மற்ற எல்லோரும் அதை சகஜமாக எடுத்துக்கொள்வதுமாக முந்தைய தலைமுறைக் கதை சென்று முடிகிறது.

தூய்மையான வெள்ளைச் சாரமும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிகிற அடுத்த தலைமுறைத் திருடன் வில்லியம். அவன்கூட, நகரத்திற்குச் சென்று ‘சென்ற் பற்றிக்ஸ்’ பாடசாலையில் படித்தவனாக இருந்தும் திருடுகிறான் என்றாலும் பிடிபட்டவுடன் முதல் அடியிலேயே திருடியதை ஒப்புக்கொள்கிறவனாகதான் இருக்கிறான். அவனுக்கும் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அவனோ திரும்பத் திரும்பத் திருடுபவனாகவே இருக்கிறான்.

“பத்து தடவைகள் திருடினால் அவன் பதினொரு தடவைகள் பிடிபட்டான்”

என்கிற வில்லியம் பற்றிய வாக்கியத்தையும் களவைக் கண்டுபிடிக்க விசாரணைக்கு வரும் பொலிஸ் சார்ஜனும் பொலிஸ்காரர்களும் எப்படி நடந்துகொள்கின்றனர் என்பதையும் போகிற போக்கில் சொல்லிப்போகிறார் ஷோபாசக்தி.

தமிழில் இலக்கியக் கதை என்று எழுதப்படுபவற்றில் பலவும் இதை மட்டுமே சொல்லிமுடித்த உப்புசத்தில் துவண்டுவிடுபவையாக இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு துரதிருஷ்டவசமாக இதுதான் தமிழின் நவீன இலக்கியம் என்று வேற்று மொழிகளுக்குப் பறந்துகொண்டு இருக்கின்றன.

பொலிஸுக்கு அடுத்து, திருட ஒன்றுமற்ற கத்தோலிக்க பாடசாலையிலும் அறைக்கதவை உடைத்து வாலிபர் சங்கத்திடம் அடிபடுகிறான் வில்லியம். அறிவுரைகள் கூறி இரக்கப்பட்டு ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

கால ஓட்டத்தில் சந்தியாப்புலம் இயக்கத்தின் கீழ் வந்திருப்பதை, செயின் திருட்டு வழக்கு இயக்கத்திடம் வந்தது என்று சொல்லிப்போகிறார். குடிசைக்குள் தேடியும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் மறுநாள் காலை வில்லியத்தின் குடும்பமே தற்கொலை செய்துகொண்டு கிடக்கிறது. திருட மட்டுமே தெரிந்த ஒருவனால் அதையும் ஒழுங்காகச் செய்யமுடியாத ஒருவனால், செத்துப் போவதைத்தவிர  வேறு என்னதான் செய்யமுடியும். துரதிருஷ்டவசமாக வில்லியத்தால் மனைவி குழந்தைகளைப்போல செத்தும்கூடப் போகமுடியவில்லை. இயக்கம், யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பிழைக்கவைத்துவிடுகிறது.  இனி இங்கே திருடிப் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று குடிசையை பிரித்துப்போட்டு விற்றுவிட்டு ஊரைவிட்டே வெளியேறுகிறான்.

உழைக்க முடியாதா என்பது எவருக்கும் இயல்பாக எழுகிற கேள்விதான். தர்க்க நியாயங்களுக்குள் கட்டுப்பட்டு இருந்தால்  மனித வாழ்வு எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். என்ன செய்வது அப்படி இல்லை என்பதுதானே யதார்த்தம்.

வில்லியம் என்கிற திருடன் சந்தியாப்புலத்திலிருந்து வெளியேறியதற்கு மறுநாள் காலையில், சந்தியோகுமையர் தேவாலயத்தின் பிரமாண்டமான கதவுகள் திறந்துகிடக்க வெள்ளியினாலான திருவிருந்துப் பேழை காணாமல் போகிறது.

கள்ளக் கபிரியேல் காலத்திலிருந்து, அறுபது எழுபது வருடங்களாக ஒவ்வொரு திருட்டின்போதும் குதிரைமேல் வீதிவலம் போய்க்கொண்டிருக்கிற சந்தியோகுமையர், தமது தேவாலயத்திலேயே திருட்டு நடந்தபோது வீதிவலம் போகவில்லை. மாறாக அவரது குதிரையின் காலடித்தடங்கள் கடலுக்குள் சென்று மறைகின்றன.

சொல்லப்பட்டிருப்பதைவிட, சொல்லாமல் விடப்படுவதும் அப்படி விடுபட்டதே கதையை வேறு தளத்திற்கு நகர்த்துவதும் உயர்ந்த எழுத்தின் அடையாளம்.

***

மாதா

சிறுகதை என்பதற்கு, ஒரு நிகழ்வு குறித்தது, எதிர்பாராத திருப்பம் குறித்தது, ஒரு முரண் குறித்தது, எதிர்பாராத முடிவைக் குறித்தது. ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் குறித்தது என்றெல்லாம் அவரவர் மனதுக்கு ஏற்றார்போல இலக்கணம் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து தலைப்பு குறித்தது என்று யாரும் விசேஷ முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.

மேற்சொன்ன அத்தனையும் இந்தக் கதையில் இருக்கின்றன. மேலதிகமாக தலைப்பும் இறுதி வாக்கியமும் இந்தக் கதையை வேறு தளத்திற்கு உயர்த்திவிடுகின்றன.

ரேப் என்கிற ஒரு நிகழ்வைப் பற்றியதுதான் கதை. அது நடக்கும் தருணமான கதையின் மத்தியப் பகுதிவரை, கதை இதைப் பற்றியது என்பது தெரிவதில்லை.

குற்றவாளி பதுங்கிக் கவனித்துக் கொண்டிருந்தான் என்று கதையின் முதல் பத்தியிலேயே வெளிப்படையாய் சொல்லிவிட்டு என்ன செய்யப்போகிறான் என்கிற எதிர்பார்ப்பை வாசகனுக்குள் கிளப்பிவிடுகிற மர்மக் கதை, அவன் என்ன செய்யப் போகிறான் என்றே ஊகிக்க முடியாதபடி, வெற்றிகரமாகப் போய்க்கொண்டே இருக்கிறபோது, ஒருவேளை இதுவாக இருக்கலாமோ என்கிற மெல்லிய சம்சயம் தோன்றும் வண்ணம் கோடிகாட்டப்படுகிறது. ஆனால் அந்தச் சந்தேகத்தை முற்றிலுமாக அழிக்கும் வண்ணம் சம்மந்தப்பட்ட பாத்திரத்தின் செயல்கள் இருப்பதால், பிற்பகுதிக் கதை முழுவதுமே அதைப்பற்றியே இருந்தாலும் கதைப்போக்கில் மற்ற பாத்திரங்களால் கவரப்பட்டு வாசகன் அவற்றுடன் கரைந்துவிடுகிறான்.

ரேப் கூட பக்கவிளைவேயன்றி குற்றவாளியின் முதன்மை நோக்கமன்று. திருடவந்து அடிபட்டதன் வெறி, பெண் அதுவும் ஒரு வயதான பெண் தன்னை அடித்துவிட்டாளே என்கிற, ஆண் என்பதால் உண்டாகிற கபோதக் கோபம் வெறியாகி ரேப்பில் முடிகிறது. பெண்ணின் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் ஆணின் அடுத்த நடவடிக்கையே பாலியல் வசைத் தாக்குதலில் ஈடுபடுவதாகத்தானே இருக்கிறது. பொதுவெளி என்றால் வார்த்தையளவில் நின்றுவிடுகிறது. கேட்க யாருமில்லை என்றால் அத்துமீறி பாலியல் பலாத்காரமாகிறது.

அந்த அம்மா அறுபத்தியெட்டு வயது முதிர்ந்தவர் என்பதுகூட, ஐம்பது வயதில் ஓய்வுபெற்றதாக இரண்டாவது பக்கத்திலும் சில பத்திகள் தாண்டி, அறுபத்தியெட்டாவது வயதில் மனிடம் சென்றதாகவுமாகத் தூவப்பட்டிருக்கும் தகவல்களைக் கூட்டிச் சேர்த்து கவனமாகப் படிப்பவனுக்கே மனதில் தங்கும். அந்த அம்மா ஐந்தடி பத்தங்குலம் இருப்பவர் என்பதும் ‘சற்று உயரம் குறைந்த’ குற்றவாளியைத் தாக்கும் அளவுக்கு வல்லமை மட்டுமின்றி வாளிப்பானவரும்கூட என்பது கவர்ச்சியாக ஆகிவிடாபடி நாசூக்காக ‘எப்போதுமே நிமிர்ந்து கம்பீரமாக நடப்பார்’ என்றும் அவருக்குப் பெயரென்ற ஒன்று இருப்பினும் கதை முழுக்க அம்மா அம்மா என்றுமே சொல்லப்படுகிறது.

தொடங்கிய ஐந்து நிமிடங்களுக்குள் குற்றம் நிகழ்ந்துவிடும். பார்வையாளனுக்கும் அது அப்பட்டமாகக் காட்டப்பட்டுவிடும். ஆனாலும் அதன்பிறகு ஒன்றரை மணிநேரம் பதற வைத்துக்கொண்டிருப்பார் என்பதில்தானே ஹிட்ச்காக்கின் சிறப்பே இருக்கிறது. மற்றப் பாத்திரங்கள் எதர்க்கும் யார் குற்றவாளி என்பது தெரியாது. தெரிந்தாலும் வெளியில் சொல்லமுடியாதபடி சூழ்நிலை அமைந்திருக்கும். அந்தப் பாத்திரத்தின் தவிப்பும் வேறு பார்வையாளனைத் தொற்றிக்கொள்ளும்.

இந்தக் கதையிலும் என்ன நடந்திருக்கிறது என்பது, பாதிக்கப்பட்டவரைத் தவிர எல்லோருக்கும் தெரிகிறது. அல்லது நாளாவட்டத்தில் தெரியவந்துவிடுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு, நடந்தது தெரிந்துவிடக்கூடாதே என்று எல்லோருமே பதைக்கிறார்கள். ஒவ்வொருவரும் அதுகுறித்து மனதளவில் அதீதமாக பாதிக்கப்படுகிறார்கள். ரேப் என்பதை மகனும் மருமகளும் கணவரும் எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களது பாதிப்பு எங்கே மையம் கொள்கிறது, ஆனால் பாதிக்கப்பட்டவரின் பார்வை எப்படியாக இருக்கிறது என்கிற முரண் வெளிப்படும் கதை இது என்றும் கூறலாம். அதையும் தாண்டி ரேப்பை ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நபரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த கதைத்துவ ஆய்வுக் கட்டுரையாகவும் இதைப் பார்க்கலாம் -எவ்வித அலசலோ வியாக்கியான விளக்கச் சொற்பொழிவுகளின் சுவடுகளோக்கூட இல்லை என்றபோதிலும்.

சர்வ சத்தியமாக இந்தக் கதையில் இப்படியான முடிவை நான் எதிர்பார்க்கவே இல்லை. தொடர்ந்து ஷோபாசக்தியைப் படிக்கப்படிக்க கிட்டத்தட்ட ரசிக மனோபாவத்துக்கு நான் தள்ளப்பட்டுவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதிகம் படித்த வாசகனைவிட ஊகிக்கமுடியாதபடி இன்னொரு எழுத்தாளனை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஏனென்றால் எழுதும் தொழிலின் ரகசியம் தெரிந்தவனல்லவா மற்றவனும். ஆனால் இந்தக் கண்கட்டும் கலை ஷோபாசக்திக்கு அநாயாசமாகக் கைவருகிறது.

ஒரு வார்த்தையில் கதையின் கடைசி வாக்கியத்தில் கதையைத் தலைகீழாக மாற்றிவிடுவது பெரிய திறமைதான். தொடக்கத்திலிருந்து எங்குமே கொஞ்சமும் இடிக்காதபடி இதைச் செய்வதற்கு நிறையவே திறமை வேண்டும். எழுத்து வசப்பட்டிருக்கவேண்டும். வாசக விசிறி, தனக்குப் பிடித்த எழுத்தில் இன்னும் இன்னும் என கரையவே சித்தமாக இருக்கிறான். அப்படியான வாசகர்களைப் பெறும் எழுத்தாளன் பிரம்மிப்புக்குரிய பிம்பமாகிறான். இவ்வளவும் வெறும் சுவாரசிய பொழுதுபோக்குக் கதை சொல்லிகளுக்கும்கூடப் பொருந்தும்.

எல்லா எழுத்தாளர்களாலும் எளிதில் எட்டித் தொட்டுவிட முடியாத தள நகர்வு கலைஞர்களுக்கு மட்டுமே கைகூடுகிற விஷயம்.

நிகழ்வுகளாகச் சொல்லப்படும் கதையில் மன ஓட்டம் என்று எழுத்தாளனே எல்லாவற்றையும் சொல்லி பாத்திரங்களை நிரப்பிக்கொண்டு செல்லாமல், துலக்கம்பெறும் அளவுக்கு மட்டுமே சொல்லப்பட்டிருப்பது எல்லோருக்கும் கைவரப்பெறுகிற காரியமில்லை.

பொழுதுபோக்கு சுவாரசிய எழுத்தாளனுக்கோ பாத்திரத்துக்கு மனம் என்ற ஒன்று இருக்குமே என்பதைப் பற்றிய கவலயேயில்லை. சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகக் கதையைக் கொண்டுசெல்வதற்குக் கதாபாத்திரத்தின் மனமும் எண்ண ஓட்டமும் முட்டுக்கட்டை. போகவும் அவனுக்கே மனமும் சுயமான எண்ண ஓட்டமும் இருந்தால் அல்லவா அகப்பையில் வருவதற்கு. எனவே சம்பவங்களை எப்படிச் சுவாரசியமாக்கலாம் என்பதற்கு மட்டுமே பயிற்சிபெற்ற அவன் மூளைக்கு இதைப்பற்றியெல்லாம் யோசிப்பதே அனாவசியம்.

வெகுஜன மனதில் புனித பிம்ப அந்தஸ்துடன் திகழ்கிற எழுத்தாளனோ ரேப்பின் பயங்கரத்தை அஞ்சி நடுங்கி அல்லது பிழியப்பிழிய அழுது புரண்டு வாசகன் கதறும்வண்ணம் எப்படியெல்லாம் நாடகீயமாக்கலாம் என்பதிலேயே குறியாயிருப்பான்.

கதையின் முடிவில் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு வாக்கியம் கதையையே வேறாக ஆக்கி, வாசகனை பிரமிப்பில் ஆழ்த்திவிடுவது, எழுதிக்கொண்டே இருப்பதால் தீவிரப் பயிற்சியில் சித்தித்துவிடக்கூடிய கைத்தேர்ச்சி; திறன்.

அதுகாறும் அதற்கு எதுவுமே தெரியாது என்று, வாசகன் உட்பட எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும்படியாக ஒரு பாத்திரத்தைப் படைப்பதும் ஒருவேளை அந்தப் பாத்திரத்திற்குத் தெரிந்திருக்குமோ என வாசகனுக்குத் துளியும் ஐயம் ஏற்படாவண்ணம் இறுதிவரை நகர்த்திச் செல்வதும் கதை சொல்லும் திறமை என்றால், சம்பவம் நிகழ்ந்தபோது நடந்ததைக் கதையின் இறுதியில் தர்க்கரீதியாக நம்பும்படி அளவாக விவரித்து, அப்போது ஒரு வாக்கியத்தில் அவர் சொன்னதாக இப்போது சொல்லி வாசகனைக்  கலங்கடிப்பது எழுத்தில் தேர்ந்த கைக்கே சாத்தியம்.

நினைவில் சற்றே தோய்ந்தவரிடம், தலைமைப் புலனாய்வு அதிகாரி அருகில் வந்து அவர் சொல்லப்போவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கையில், அந்த அம்மா கூறுகிற கதையின் இறுதி வாக்கியம் முக்கியமானது. வேறெவரும் அவ்வளவு எளிதில் கூறிவிடமுடியாத அந்த வார்த்தைகளை அவர் கூறியது, அவர் மட்டுமே கூறியிருக்கக்கூடும் என்கிற சாத்தியத்துக்கான தர்க்க அமைதியின் விதை கீழ்க்காணும் வரிகளாகக் கதையின் இரண்டாவது பக்கத்திலேயே ஊன்றப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில் பிரசவ விடுதிக்குத் தலைமைத் தாதியாக அம்மா இருந்தார். அம்மா தேவதையைப் போல அன்பும் கருணையும் அன்பும் கொண்டவர் என அங்கே பெயர் வாங்கியிருந்தார்

இந்த வரிகளை தலைப்புடனும் கதையின் முடிவுடனும் பொருத்திப் பார்க்கிற இலக்கிய வாசகன், அம்மாவை மாதாவாக்கி எழுத்தாளன் எப்படிக் கலைஞனாகியிருக்கிறான் என்பதை உணரக்கூடும்.

***

சூக்குமம்

சரசரவென்று படிக்கமுடிகிற மாதிரி எழுதுவது சிறந்த எழுத்தின் முக்கியமான அம்சம் என்பதைப்போல, சிறந்த வாசகனின் முதன்மை லட்சணம் அதை மூச்சுவிடாமல் வாசித்து முடிப்பதன்று. நல்ல வாசகனின் மற்றொரு அடையாளம், ஆரம்ப வாசகனைப் போலல்லாது, எழுதப்பட்டுக் கிடக்கும் ஏராளத்தில் பெரும்பாலானவற்றைப் படிக்கமுடியாமற் போவது.

நெருடலற்ற எழுத்து என்பது, மொழி மீதான எழுத்தாளனின் ஆளுகையை மட்டுமின்றி, சொல்லவந்தது பற்றிய அவனது தெளிவையும் குறித்தது.

அதேபோல ஆரம்ப வாசகன், கையில் கிடைப்பதையெல்லாம் எப்படி வேகமாகப் படிக்கிறான். தேர்ந்த வாசகன் ஏன் நிதானமாகப் படிக்கிறான். ஏன் எழுதப்பட்ட எல்லாவற்றையும் பின்னவனால் படிக்க முடிவதில்லை என்பதும் எதிரெதிரல்ல தொடர்ச்சி. துளிர் வேகமாய் வளரத் துடிக்கிறது. முதிர்ச்சி விவேகத்தை வளர்க்கிறது -ஷோபாசக்தியின் ரம் மாஸ்டரைப்போல.

நல்ல எழுத்தில் நாட்டம் கொண்டவன் எழுதப்பட்டிருப்பதில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் நகாசுகளையும் ரசித்துத் துய்க்க நினைப்பதால் பொறுமையாகப் படிக்கிறான். பயிற்சி காரணமாக அவற்றை முதல் வாசிப்பிலேயே அவனால் கண்டு உணர முடிகிறது. அதே காரணத்தால்தான், எவ்வித நுட்பமும் வேலைப்பாடுமற்ற வெறும் சம்பவக் கோர்வைகளை அவனால் படிக்கவே முடிவதில்லை.

எழுத்தின் சூக்‌ஷுமம் எழுதிக்கொண்டேயிருப்பதில் இருக்கிறது என்பார்கள். இது எல்லா எழுத்துக்கும் பொருந்தக்கூடியதன்று. குறிப்பாக இலக்கியத்தைப் பொறுத்தவரை இது பொருந்தாது. எழுதாதபோதும் எழுதிக்கொண்டிருப்பவனே இங்கே எழுத்தாளன். எவ்வளவு காலம் உறைக்குள்ளேயே தூங்கிக்கொண்டு இருந்தாலும் துருப்பிடித்துப் போகாதிருந்தால்தானே அது போர்வாள்.

எழுத்தின் சூக்‌ஷுமம் வெறும் பயிற்சியால் மட்டுமே வருவதன்று என்பதற்கு நல்ல உதாரணமாக இந்த சூக்குமம் கதையைச் சொல்லலாம்.

பெரிய கேன்வாஸில் பல்வேறு வண்ணங்களுடைய பாத்திரங்களை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்களுடன் தீட்டப்பெறும் அவருடைய பிற்காலக் கதைகளின் வரிசையில் ஒன்றாக இதைச் சேர்க்கமுடியாது என்றாலும் அவற்றின் கூறுகள் இரண்டாயிரங்களிலேயே தொடங்கிவிட்டதற்கான ஆதாரமாக இருக்கிறது இந்தக் கதை. தேசத்துரோகி தொகுப்பிலிருக்கும் கதைகள் 1997க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்கிறன கதையின் இறுதியில் இருக்கும் குறிப்புகள்.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் எல்லோரும் எதிர்கொண்டிருக்கக்கூடிய ஒரு விஷயத்தை, அதிலும் குறிப்பாக வசதியற்ற, முன்னாள் போராளியொருவன் அகதி அட்டை வாங்குவதில் ஏற்படும் பிரச்சனைகளை ஆவணப்படுத்தியிருக்கிற முக்கியமான கதை.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் 

வாக்கினிலே ஒளி உண்டாகும்

என்கிற இலட்சியவாதக் கவிதை வரிகளைப் போலில்லை யதார்த்தம் என்பதை பிரான்ஸில் ஈழத்துப் பாத்திரங்களை வைத்து கைப்பு கலந்த நகைச்சுவையுடன் சொல்லிக்கொண்டு செல்கிற கதை.

கலை என்பதே, தத்ரூபமாக ஒன்றை கண்முன் நிகழ்வதைப்போல கட்டியெழுப்பிக் காட்டுகிற பொய்தானே. போலவே, நம்பும்படியாக வாழ்வில் பொய்சொல்வதும் ஒரு கலைதானே. யாரை நம்பவைக்கை என்ன சொல்லவேண்டும் அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதை அவரவர் பாணியில் கைதேர்ந்தவர்களை வைத்துச் சொல்லிச்செல்கிறது கதை.

வெளிப்படையாகப் பிரித்துக் குறிப்பிடப்படாவிட்டாலும் மூன்று பகுதிகளாக இருக்கும் கதையின் தொடக்கம் அகதி கார்ட் கேட்பவனின் கதையைச் சொல்கிறது. இவன் சிறுவனாக தகப்பனுடன் கூலிக்குப் பனை தறிக்கப் போவதில் இருந்த அவனது இயல்பான புத்தி சூக்குமம் இயக்கத்தில் சேர்ந்த பின்பு எப்படி உதவிற்று வளர்ந்தது என்பது முதல்பகுதியாக வருகிறது. அதன் நீட்சியாகக் கள்ள பாஸ்போர்ட் தயாரிப்பில் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவதிலும் அது வெளிப்படுகிறது. இதன் பின்னிரு பகுதிகளாகவே அகதி அட்டைக்கு விண்ணப்பமெழுதும் இரண்டு நிபுணர்கள் வருகிறார்கள்.

உரையாடல் தவிர ஆசிரியர் கூற்றிலும் முழுக்கவே ஈழத்தமிழில் எழுதிச்சென்றிருப்பதும் கதையின் சரளத்துக்கு ஒரு காரணம் என்றாலும் கதை, அகதி கார்ட் வேண்டி நிற்பவனின் பார்வையிலேயே நகர்வது இந்த மொழிநடைக்கான அவசியத்தை நியாயமாக்கி இந்தியத் தமிழ் வாசகனையும் நெருக்கமாக உணரவைக்க உதவுகிறது.

கதையின் முடிவைப்போல,முரண்நகை ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுகிறது. அவனது சுற்றுப்பட்டு ஊர்களில் இருந்து பிரான்ஸுக்கு ஓடி வந்து அகதி கார்டுக்கு விண்ணப்பிப்போரின் பெரும்பான்மை மனுக்கள், சொந்த நாட்டில் வாழ முடியாதபடிக்கு ராணுவம் ஆவர்களைத் தேடுவதற்கான முக்கியமான காரணமாக, ஊரில் இயக்கப் பொறுபாளராக இருந்த இந்த சூக்குமத்தைக் குறிப்பிடுகின்றன. அவர்களுக்கெல்லாம் சீக்கிரத்தில் கிடைத்துவிடும் அகதி கார்ட் இவனுக்கு நிராகரிக்கப்படுகிறது.

எப்படி நிராகரிக்கப்பட்டது, அடுத்தடுத்த முயற்சிகள் எப்படி தோல்வியில் முடிகின்றன. இழு இழுவென இழுத்து எட்டு வருடங்கள் கழித்து எப்படி இவனுக்கு அகதி கார்ட் கிடைத்தது என்பதை வறள்நகைப்புடன் சொல்லத்தான் மீதி கதை.

அவனே 21 பக்கங்களுக்குத் தமிழில் எழுதிய விண்ணப்பத்தை பிரெஞ்சில் மொழிபெயர்க்கப் போய் சேருமிடத்துக்குத் தமிழோவியம் எனவும் நியாயஸ்தராகக் காட்டிக்கொண்டு இவன் தலையைத் தடவுகிறவர் பெயர் காந்தி மாஸ்டர் என்றும் உபரியாக அவர் யாழ்ப்பாணக்காரர் என்கிற தகவலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

‘தம்பி இது பச்சைப் பிழையான கேஸ்’ என்று படித்த உடனே அவனது விண்ணப்பத்தை நிராகரிக்கிறார். அதை, இவன் நொந்துபோகுமளவுக்கு எப்படியெல்லாம் பிழை என்று அவனுக்கு உணர்த்த அவனுக்குத் தெரியாத பிரெஞ்சு வார்த்தைகளைப் போட்டு ஜெனிவா ஒப்பந்தத்திலிருந்து கிட்டு திருப்பி அனுப்பப்பட்டதுவரை பெரிய கிளாஸ் எடுத்து, அவரது கைச்சரக்கை எல்லாம் சேர்த்து, பக்கத்துக்கு 150 ப்ராங்க் எண்ட கணக்கில 22 பக்கங்கள் வரும்படி பிரெஞ்சில் எழுதிக்கொடுக்கிறார்.

உள்ளது ஒன்றென்றால் அதை ஆளாளுக்கும் ஊதிப் பெருக்கி எட்டாக்குவதை முழுக்கவே பகடியாகச் சொல்லிச் செல்கிற கதையில், உளவு பார்க்கவரும் ‘சீ ப்ளேன்’ வெடி வைத்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவ விவரனை முக்கியமான இடம்.

அது ஒரு வெருட்டுற வெடிதான். திட்டமிட்ட பண்டார வெடிதான். ஆனால் அதுக்குப் பிறகு சீ ப்ளேன் அந்த ஏரியாவுக்கே வாறதில்ல. பனவட்டு எப்பிடிப் பத்தி எழும்பினது எண்ட சூக்குமம் இவனுக்கும் இவன்ர டீமுக்கும் மட்டும்தான் தெரியும். ஆனால் ஈழநாடு, வீரகேசரி பேப்பருகளில எழுதின இராணுவ ஆய்வாளமார் அதை ‘ஆகாயக் கன்னிவெடி’ எண்டொரு புதுச்சொல்லைப் பாவிக்கத் தலைப்பட்டினம். அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னொரு தளத்துக்கு நகருதாம்.

இப்படி எல்லாமே ஊதிப் பெருக்கப்பட்டவை என்று, இவன் சொல்கிறவற்றையெல்லாம் கதைகளாகவே பார்த்து நிராகரிக்கின்றனர் பிரெஞ்சு விசாரணை அதிகாரிகளும் அப்பீல் நீதிபதியும்.

இறுதிப்பகுதியில் அகதி கார்டை வெற்றிகரமாகப் பெற்றுத்தரும் மற்றொரு விண்ணப்பக் கலைஞருக்கு ஷோபாசக்தி வைத்திருக்கும் பெயர் ரம் மாஸ்டர்.

ப்ரெஞ்சுக்காரர்களுக்கு எது அதிக அனுதாபத்தை உருவாக்கும் என்கிற அவருடைய சூக்கும விண்ணப்பமும் இவனது எட்டுவருட அனுபவமும் சேர்ந்து அகதி கார்டை எப்படிப் பெற்றுத் தருகின்றன என்று முடிகிற கதையில் கடைசி வரிவரை முரண்நகை எங்குமே பிசிறு தட்டாமல் விறுவிறுவெனச் செல்கிறது. எதிரும்புதிருமான நோக்கங்களும் இயல்புகளும் கொண்ட இரண்டு விண்ணப்ப மாஸ்டர்கள் கதையின் ஆதாராமான முரண்நகைக்குள் எவ்வளவு பாந்தமாய் பொருந்தி உட்காருகிறார்கள். கதையின் நாயகனிடம் இயல்பாகவே இருக்கும், எல்லா இடத்திலும் கைகொடுக்கும் நாட்டுப்புற சூக்குமம் வெளிநாட்டில் எடுபடவில்லை. இந்தக் கதை, முழுக்கவே வழக்குமொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு இதுவும் நியாயம் சேர்க்கிறது.

ஷோபாசக்தியிடம் இருக்கிற கலை அமைதி அசாதாரனமானது. ஆரம்பம் முதல் இறுதிவரை சுருதியோ தொனியோ பிசகுவதேயில்லை. 2003ல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதை பின்னால் வரப்போகும் பெரிய கச்சேரிக்களுக்கு முன்னோட்டம் போல விளங்குகிறது.

நன்றி: காலம் நவம்பர் 2018