November 28, 2018

மிக உள்ளக விசாரணை

இந்தக் கதை இப்படித் தொடங்குகிறது.

ஃப்ரான்ஸ் காஃப்காவினது புகழ்பெற்ற நாவலொன்றுக்கும் இந்தச் சிறுகதைக்கும் ஓர் ஒற்றுமையும் ஒரு வேற்றுமையுமுள்ளன. அவரது நாவலின் தலைப்பு ‘விசாரணை’. இந்தக் கதையின் தலைப்பு ‘மிக உள்ளக விசாரணை’. வேற்றுமை என்னவென்றால், காஃப்காவினது நாயகனுக்கு ஒரு கவுரவமான பெயர் கிடையாதெனினும் அவனை ‘K’ என்ற ஓர் எழுத்தாலாவது காஃப்கா குறித்துக்காட்டினார். நம்முடைய நாயகனுக்கு அதற்குக் கூட வக்கில்லை. இப்போது நாங்கள் நேரடியாகவே கதைக்குச் சென்றுவிடலாம்.

இந்தக் கதையில் நடக்கும் விசாரணைக்கும் காஃப்காவின் விசாரனைக்கும் இடையில் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் உள்ளன.

மேலோட்டமான பார்வைக்கு, இருவருமே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பதுவரை மட்டுமே இரண்டிற்கும் ஒற்றுமை என்று தோன்றும். அடிப்படையில் இரண்டு கதைகளுமே ஒன்றைத்தான் சொல்கின்றன என்கிற ஒற்றுமையை இறுதியில் பார்ப்போம்.  

ஃப்ரான்ஸ் காஃப்காவின் விசாரணையில், கதை முடியும்வரை விசாரணையே தொடங்கப்படுவதில்லை.

ஷோபாசக்தியின் விசாரணையில், விசாரணை நடந்து முடிந்து தீர்ப்பு என்கிற பெயரில் தீர்வும் தரப்பட்டுவிடுகிறது. ஆனால் அளிக்கப்பட்ட தீர்ப்பு, தீர்ப்பே இல்லை என்பதுதான் கதையே.

காஃப்காவின் கதையில் குற்றம் சாட்டப்பட்ட நாயகன் இறுதியில் இறந்துவிடுகிறான். ஆனால் அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் என்ன என்பது இறுதிவரை யாருக்குமே தெரியாது அவனுக்கு உட்பட.

ஷோபாவின் கதையில் விசாரிக்கப்படுபவன் குற்றவாளியில்லை என்பது மட்டுமின்றி உண்மையான குற்றவாளி யார் என்பது அவனுக்கு மட்டுமல்ல, அவனது விசாரணையின் வழியே எல்லோருக்குமே தெரியும் அவனை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உட்பட.

எனினும் இரண்டு கதைகளின் முடிவுகளும் ஒன்றுதான் என்பதே ஷோபாசக்தி சொல்லவருவது.

இதை அவர் கதையில் எங்குமே சொல்லவில்லை. அதனால்தான் அவர் எழுத்தாளரில் இருந்து கலைஞனாகிறார்.

காஃப்காவின் விசாரனை எழுதப்பட்டது 1914-15 வாக்கில். ஷோபாசக்தி தமது விசாரணையை எழுதியிருப்பது 2016ல். இரண்டிற்குமிடையில் ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலான இடைவெளி. ஒருவேளை, காஃப்காவின் விசாரணை நாவலுக்குச் செலுத்தும் நூற்றாண்டு அஞ்சலியாக இந்தக் கதையை ஷோபாசக்தி எழுதியிருந்தாலும் பொருத்தமானதே.

நூறாண்டுகள் கழிந்தும் ஜெர்மனிக்கு சம்மந்தமேயில்லாத தமது நாட்டிலும் இன்று நடக்கிற விசாரனையின் லட்சணமும் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லாது காஃப்கா சொன்னதைப்போலவேதான் உள்ளது என்பதை, இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது.

இந்தக் கதையின் முதல் பத்தியைத் தவிர்த்துவிட்டுப் படித்தாலும் இலக்கியத் தரமோ வீச்சோ வாசகனிடம் இது உண்டாக்கும் தாக்கமோ இம்மியளவும் மாறவோ குறையவோ செய்யாது என்பதை இரண்டையும் படித்தவர்கள் ஒப்புக்கொள்வார்கள்.

இரண்டு பகுதிகளாக இருக்கும் கதையில் முதல் பகுதி விசாரணைக்கான முன்கதைச் சுருக்கமாக இருக்கிறதென்றால் இரண்டாம் பகுதி முழுக்க விசாரனையாகவும் அதில் வெளிப்படுவது பூர்வகதையாகவும் தீர்ப்பு முத்தாய்ப்பாகவும் இருக்கிறது.

முன்னும் பின்னுமாகக் கதை சொல்வதைப் பெரும்பாலான எழுத்தாளர்கள் தவிர்த்துவிடுவார்கள். ஒரே ஒரு பிளாஷ்பேக்கிற்கு மட்டுமே அனுமதி என்பது சிறுகதையில் எழுதப்படாத விதி. வேறொன்றுமில்லை குழப்பிவிடும் என்பதுதான் காரணம். சில சமயம் வாசகனையும் பல சமயம் எழுதுபவரையும்.

ஷோபாசக்தி கண்டமானத்துக்கும் கதை சொல்பவர் என்பது போல எடுத்தவுடனே தோன்றினாலும் உள்ளூர ஒத்திசைவும் ஒழுங்கும் கச்சிதமாக உட்கார்ந்திருப்பது, பகடியும் எள்ளலும் குமிழியிட்டுக்கொண்டு சரசரவென்று ஓடும் கதைகளை சற்றே நிறுத்திப் படித்தால் பிடிபட்டுவிடும். கூடவே, சொல்லப்படாமல் ஆங்காங்கே கவனமாய் தவிர்க்கப்பட்டிருக்கும் மறைபொருளும்.

உள்ளக விசாரணை என்கிற தலைப்பிலேயே இரட்டை அர்த்தம் தொனிக்கவில்லையா. மிக உள்ளக விசாரணை என்று ஏன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது கதையின் இரண்டாம் பாகத்தின் தொடக்கத்திலேயே படிக்கிறவனிடம் தோன்றுகிற வறண்ட புன்னகை சொல்லிவிடும். இதைவிட பொருத்தமான தலைப்பை இந்தக் கதைக்கு வைக்க முடியாது என்பதை கதை முடியும்போது வாசகனுக்கு உண்டாகிற மன அழுத்தம் உணர்த்திவிடும்.

முதல் பத்திக்குப் பிறகு வரும் பாராவில்,எண்பத்தைந்து மனித மண்டையோடுகளும் குவியலாக மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட, இருபத்தைந்து வருடங்களிற்கு முந்தைய மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்தக் கதை திடீரெனத் தொடங்குகின்றது.

பிறகு, எப்படி அந்தப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது என்பதில் தொடங்கி ஆற்றொழுக்காய் செல்கிற கதையில், இதைப்போலவே இதற்கருகில் ஒரு கிணறு இருந்ததாகவும் மண்மூடப்பட்டுவிட்ட அதிலும் மனிதர்கள் புதைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நேரடியாகத் தோண்டிப்பார்த்துவிசாரணை செய்வதற்காக வரும் நீதிபதிகளில் ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர்.

உக்கிரமாக, பொறி பறக்க எழுதுவதே முற்போக்கு எழுத்து என்கிற எண்ணம் இன்னும்கூட நிறைய இளைஞர்களிடம் இருக்கிறது. ஆனால் இலக்கியம் எப்போதும் அதைத் தாண்டியே, இயங்கிக்கொண்டு இருக்கிறது.

25 வருடங்களுக்குப் பிறகு தோண்டிப்பார்க்கிற கிணற்றில்,

அவர்கள் கயிற்றில் தொங்கியவாறே ஆழத்திலிருந்து அச்சத்துடனும் வியப்புடனும் கூச்சலிட்டார்கள்:

” இங்கே ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான்.”

இதைக் கேட்டதும் நீதிபதிகளின் உணர்வு என்ன, வைத்திய சட்ட நிபுணர்களின் எதிர்வினை என்ன, தொல்பொருள் ஆய்வுப் பணிப்பாளரின் ஊகம் என்ன, காவற்துறையினரிடையே எழுந்த சலசலப்புகள் தானென்ன போன்றவற்றை விபரிப்பது இந்தச் சிறிய கதைக்கு முக்கியமல்ல என்பதால் கதையின் முதற்பாதியை நாங்கள் இங்கேயே நிறுத்திவிட்டு கதையின் மறுபாதிக்குச் செல்வோம்.

என்று, எழுதாமல் விட்டதைப் பற்றி, எழுதுகிற விதத்தில் எழுதினால், எழுதுவதைவிட வலுவாகச் சொல்லிவிடமுடியும்.

எழுதத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தைப் போலவே, அதில் எதையெதை எழுதுகிறான் எதையெதைத் தவிர்க்கிறான் என்கிற எழுத்தாளனின் பிரஞைபூர்வ தேர்விலும் இருக்கிறது எழுத்தின் வீரியம்.

விசாரணை நடக்கையில், என்ன நடந்தது எப்படி நடந்தது என்று விரிவாக அவன் விவரித்து முடிக்கையில், படித்துக்கொண்டிருக்கிற வாசகனைப்போலவே நீதிபதிகளுக்கும் நியாயமான அடிப்படை ஐயம் எழுகிறது.

“நீர் இவ்வளவு காலமும் மூடப்பட்ட கிணற்றுக்குள் உயிரோடு இருந்தீர் என்பது பெரிய அதிசயமாயிருக்கிறது.”

“அங்கே நிலத்தோடு கொஞ்சத் தண்ணீர் எப்படியிருக்கிறதோ, தாவரங்களும் தவளைகளும் புழுபூச்சிகளும் எப்படியிருக்கின்றனவோ அப்படித்தான் நானும் இருந்தேன். அதிசயமாக எதுவுமில்லை.”

எதை எழுதுவது எதை விடுப்பது என்பதைப் பல எழுத்தாளர்கள் அவரவர் தேவை பார்வை சார்பு பக்குவம் முதிர்ச்சி அறிவு போன்ற பல காரணங்களின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். அதைப் போலவே இந்தக் கதையிலும் விசாரணை முடிந்தபின் நீதிபதிகள், எது நியாயம் என்பதைவிட எது நாட்டிற்கு நல்லது என்பதை முடிவுசெய்கிறார்கள். அது எப்படி நிறைவேற்றப்படுகிறது என்கிறபடியாகக் கதை முடிகிறது.

காஃப்காவின் விசாரணையில் K என்கிற பெயர் கொண்ட நாயகன் இறுதியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டு இறக்கிறான்.

ஷோபாசக்தியின் மிக உள்ளக விசாரணையில் பெயரே இல்லாத நாயகன் என்றென்றும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் -எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்று மட்டும் கேட்டுவிடவேண்டாம் என்கிறபடிக்கு. 

 

நன்றி: அரும்பு டிசம்பர் 2018