November 29, 2018

கதையில் செய்தி இருக்கலாம். ஆனால் செய்தி கதையாகுமா. 

எழுதத் தெரிந்தவன் கையில் எடுத்தால் எதுவும் கலையாகும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் கதை. 

பார்வையுள்ள எழுத்தாளனுக்கு, ஆழ் மனதின் அடுக்குகளில் தேங்கிக் கிடக்கும் வாழ்க்கை அனுபவங்கள், திறப்புக்காகக் காத்திருக்கும் அணைக்கட்டைப் போன்றது. வாய்ப்பு கிடைத்ததும் பிரவாகமாகிவிடும். 

இலக்கியவாதியின் எழுத்துக்கள் பெரும்பாலும் கற்பனையாகப் புனையப்பட்டவை அல்ல. ஆனால் இலக்கியவாதிகளே, புனைவு என்னும் சொல்லை அதிகம் பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அந்தந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் ‘புனைகிற’ வேலையை வாழ்நாள் முழுக்க செய்துகொண்டிருப்போர் பெரும்பாலும் பொழுதுபோக்கு ஒப்பனை எழுத்தாளர்களே. ஆனால் அவர்கள் புனைவு என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவதே இல்லை. அது  இலக்கியம் சம்மந்தப்பட்டது என்பது போல் விலகி இருக்கிறார்கள்.

எனில், சொந்த அனுபவங்களை அடிப்படையாகக்கொண்ட சிறந்த இலக்கிய கதைகள் எங்கே எப்படிப் புனைவாக ஆகின்றன என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. 

சிறந்த எழுத்தாளர்களின் கதைகளில், அவற்றில் விவரிக்கப்படும் சம்பவங்களில், பல நேரங்களில் அந்த எழுத்தாளர் நேரடியாகப் பங்குபெற்றிருப்பதுகூட இல்லை. கதை எழுதுவதற்கான முகாந்திரமாக, வெளியுலகிலிருந்து பெருகிற தாக்கத்தின் காரணமாக அவனுக்குள் உண்டாகும் அதிர்வலை, கடந்த காலத்துக்கு அவனை இழுத்துச் செல்கிறது. இளமையில் அவன் பார்த்த அனுபவித்த இடங்களும் மனிதர்களும் சூழலுமாக வாழ்ந்து பெற்ற அனுபவங்களுமாக. அவன் சொல்லவரும் செய்தியுமாகப் பின்னிப்பிணைந்து, புனையப்பட்டு வெளிப்படுகையில் எந்தக் காலத்திலும் காலாவதியாகாத இலக்கியமாக ஆகிறது.  

உள்ளூர் செய்தித்தாளில் தொடங்குகிற இந்தக் கதை, சர்வதேச பத்திரிகையாளர்களின் மாநாட்டில் சொல்லப்படுகிற கருத்தில் முடிகிறது. இவ்விரண்டுக்குமிடையில் தத்ரூபமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது ஒரு கிராமத்தில் நிகழ்ந்துமுடிந்த வரலாற்றுக் கொடூரம்.

கதையின் முதல் பத்தியையும் இறுதிப் பாராவையும் சற்றே கூர்ந்து வாசித்தால், கதை ஆற்றொழுக்கான சரளத்தில் இருக்கிற தோற்றம் காட்டினாலும் ஒவ்வொரு சொல்லையும் ஷோபாசக்தி எவ்வளவு கவனமாக எழுதியிருக்கிறார் என்பது, துல்லியமாகப் புலப்படும். 

சில எழுத்தாளர்கள், எழுத உட்கார்ந்தால் ஒரே முறையில் எழுதிவிடுவார்கள். சிலர் எழுதியதைத் திரும்பத் திரும்ப எழுத எழுத பல விஷயங்கள் சேரும் விலகும் மெருகேறும். முன்னவர்களின் கதைகளில் உணர்ச்சிக்கே முன்னிலை கொடுக்கப்பட்டிருக்கும். விதிவிலக்காக, நிறைய நுணுக்கங்களும் நகாசுகளுமாக பொற்கொல்லர் போல கதையெங்கும் கொட்டிக் கிடந்தாலும் ஒரே முறையில் உணர்ச்சி துள்ள எழுதிவிட்டுப் படித்துக்கூட பார்க்காதவராக இருந்தவர் என தி. ஜானகிராமனைக் கூறலாம். பின்னவர்களில் பிரதானமாக சுந்தர ராமசாமியைக் கூறலாம். ஒரே முறையில் எழுதிவிடுபவர்தான் என்றாலும் உணர்வுகளை வெளிப்படையாகவோ உரக்கவோ எழுத்தில் வெளிப்படுத்தாத அசோகமித்திரன் ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் படித்துப் பார்த்துத் திருத்தக்கூடியவர். 

எழுதினதைத் திரும்பத் திரும்ப எழுதணும். ஆனா இப்படி திரும்பத் திரும்ப எழுதியிருக்கோம்னு வாசகனுக்குத் தெரியாத மாதிரி ஒரு முழுமை அதுல இருக்கணும் என்று, நான் எழுத ஆரம்பித்த காலத்தில் நேர்ப்பேச்சில் கூறியவர் ந. முத்துசாமி. 

இப்படித்தான் எழுதப்படவேண்டும் என்று, கதை எழுதுவதற்கு எந்த இலக்கணமும் இல்லை என்பதென்னவோ உண்மைதான் எனினும் கொய்த மலர்போல் எழுத்தில் முழுமை கூடி இருப்பது என்பது அப்படியொன்றும் லேசுப்பட்ட காரியமுமில்லை. 

இறுதிப் பத்திக்கு வந்துசேர ஷோபாசக்தி என்னென்னவற்றையெல்லாம் மந்திரவாதியின் நேர்த்தியுடன் முதல் பாராவிலேயே விதைக்கிறார் என்று பார்ப்போம். 

//அரசாங்கத்தாலும் அவனது பெறாமகனாலும் காசு சேர்க்க அறைக்கு வந்துபோகும் இயக்கக்காரராலும் பல தருணங்களில் தேசத்துரோகி என விளிக்கப்பட்ட ஸ்டான்லி இராஜேந்திரா// 

தேசத்துரோகியாக விளிக்கப்படும் கதையின் நாயகனான ஸ்டாலின் இராஜேந்திரா, அவனது கிராமத்தை அரசப்படை ஆக்கிரமித்தபோது எவ்வளவு நெருக்கடியான நிலையை அவன் எப்படி எதிர்கொண்டான், அந்த சூழ்நிலைக்குள்ளாக தனது கிராம மக்களிடம் எவ்வளவு மனிதாபிமானத்துடன்  நடந்துகொண்டான், அவனை தேசத்துரோகியாகக் கூறியவர்கள், மக்கள் உயிரைப் பணயம் வைக்கவேண்டிவந்தபோது எங்கே போனார்கள், அதற்குப்பின்னரும்கூட எப்படி நடந்துகொண்டார்கள், யார் தேசத்துரோகிகள் என்பதுதான் கதை.  இதை இப்படி உரத்த குரலில் சொல்ல எழுத்தாளன் தேவையில்லை. ஆனால் பெரும்பான்மை முற்போக்கு எழுத்தாளர்கள் இப்படித்தான் ஒலிபெருக்கியைப் போல சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

கதையில் குட்டிக்குட்டியாகவும் பெரிய அளவிலுமாகவுமாக எத்தனைக் கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக உருவாகி காட்சிரூபமாய் வாசிப்பவனை சிரிக்கவைத்து கலங்கவைத்து நெகிழவைத்து திகைக்கவைக்கின்றன என்பதுதான் ஷோபாசக்தியின் எழுத்து நிகழ்த்தும் வித்தை. முதல் பத்திக்கும் இறுதி பாராவுக்கும் இடையில் நடப்பது கதையாக அல்ல, வாசகனின் மனக்கண்ணில் போரை மையமாகக் கொண்ட திரைப்படமாக விரிகிறது. 

முதல் பத்தியின் அடுத்த வாக்கியம்,

//தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அய்க்கிய தேசியக் கட்சி அரசுக்கும் ‘பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை// 

அந்தக் கிராமத்து மக்களில், பார்வைக்கு ஆரோக்கியமாய் உடல் வலிமை கொண்டவர்களாய் தெரிகிற ஆண்கள் அனைவரும் அரசப்படையால் புலிகளாகப் பார்க்கப்படுவதும் புலிகள் வைத்திருக்கும் கன்னிவெடிகளை வெடித்துத் தாங்கள் முன்னேற, வழி ஏற்படுத்த, அரசு அதிகாரிகளாலும் முக்கியஸ்தராலும் அப்பாவி மக்கள் பலிகொடுக்கப்படுவதும் எப்படி நிகழ்கிறது என்பதுதான் கதையின் உச்சம். 

ஸ்டான்லி இராஜேந்திராவுக்கு உறவுமுறையில் பெறாமகனாக இருக்கும் புலி பொடியன் அவனை தேசத்துரோகி என்று அழைப்பது ஒரு கூறு என்றால், கன்னிவெடிகளுக்குள் அப்பாவி மக்களை விரட்டிவிட்ட நபர் பிற்காலத்தில் அரசின் முக்கிய நபராக இருக்கிறார் என்பது இன்னொரு கூறு. அப்பேர்ப்பட்டவரைப் பற்றிதான் பத்திரிகையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் என்பதும் இவர்கள் இருவருக்குமிடையில் ஒப்பந்தம் நடக்கிறது என்பதே நகைமுரண்.  

இறுதிப் பத்திக்கு வருவோம். 

கதையில் அரசப்படையின் கொடூர விசாரணையின்போதும்  தாக்குதலின்போதும் அவர்களே தேவலாம் என்கிற அளவுக்கு ஈவு இரக்கமின்றி நடந்துகொண்ட, அப்போது முகமறியாதவராக இருந்த அந்த நபர், பிற்காலத்தில் பிரபல தலைவராக ஆகி இருக்கிறார். சர்வதேசப் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் அவரைக் குறித்து நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் என்று கைப்பு நகைச்சுவையுடன் கதை முடிகிறது.

இந்தப் பத்தியில் அவர் குறித்து தெரிவிக்கப்படும் நம்பிக்கை அயிட்டங்கள் என்று கேலியாகக் குறிப்பிடப்படுவதையும் கதையின் இடைப்பகுதியில் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொள்ளும் ஒரு அச்சுப்பிச்சுக் கதாபாத்திரத்தின் பெயரே அயிட்டம் என்று இருப்பதையும். இது தற்செயலல்ல வரண்ட புன்னகை என்பது பிடிபடக்கூடும். இதற்காகவே அயிட்டம் என்கிற பெயரில் அப்படியொரு பாத்திரம் அவ்வலவு விஸ்தாரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே கலையின் சூக்குமம்.

கதையின் இடைப்பகுதியில், இலங்கை மற்றும் இந்திய ராணுவம் பற்றிய ஒப்பீடுபோல இப்படி ஒரு வரி மின்னல் கீற்றாக வந்துபோவதும் குறிப்பிடத்தக்கது. இது வெறும் செய்தியாக இல்லாமல் கதையோட்டத்திற்கும் அவசியமாக இருக்கிறது.

//ஆமிக்காரர்கள் ஒழுங்கைகளிலும், வீதிகளிலும் முன்னே ஒட்டி பின்னே நடந்தார்கள். மிதிவெடி, கண்ணிவெடி போன்ற பயக்கெடுதியிலேயே தங்களை முன்னே நடக்கவிட்டு அவர்கள் பின்னே வருவதை ஸ்டான்லி உணர்ந்து கொண்டான். இப்படியான தேவைகளுக்கென்றே இந்தியன் ஆமிக்காரர் இந்தியாவிலிருந்து ஆடுகளை இறக்குமதி செய்து தங்கள் படையணிக்கு முன்னே ஓட்டிச் சென்றதும் ஞாபகத்தில் வந்தது.// 

பெறாமகனாக இருந்தும் புலியாக இருக்கும் பொடியனால் தேசத்துரோகி என்று அழைக்கப்படும் ஸ்டான்லி, ஆமிக்காரர்களிடம் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரே புலியான ரேமன் என்கிற பொடியனை தன் மொழிபெயர்ப்பின் மூலம் காப்பாற்றவே செய்கிறான். அதுகூட போகிற போக்கில்தான் நடக்கிறதேயன்றி, வண்ணக்குறியிட்டுத் தூக்கிக் காட்டப்படவில்லை.

மக்களில் யார் புலி என்பதை எவருமே சொல்லவில்லை என்பதால்தான் எல்லோருமே ஆர்மியால் மிதிவெடிக்குள் விரட்டப்படுகிறார்கள். விரட்டப்படும் இருபத்து சொச்சம் பேருக்கும் அங்கிருப்போரில் ரேமன் மட்டுமே புலி என்பதும் தெரியும். ஆனாலும் ஸ்டான்லி உட்பட அந்தத் தேசத்துரோகிகள், புலியைக் காட்டிக்கொடுக்காமலே மிதிவெடுக்குள் செல்கிறார்கள் என்பது அடிக்கோடிட்டோ நாடகத்தனமாகவோ சொல்லப்படவில்லை. 

சிறுகதை எழுதுவது எப்படி என்று கேட்பவர்களுக்கு, 2011ல் எழுதப்பட்ட ‘அறம்’ கதையைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்வேன் என்று கூறிய இலங்கையின் புலம்பெயர் எழுத்தாளர் அ. முத்துலிங்கத்துக்கு, 2002லேயே அவர்களிடமிருந்தே எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையை ரெக்கமெண்டு செய்ய எப்படித் தோன்றாமல் போயிற்று என்று வியப்பாக உள்ளது. ஒருவேளை இவ்வளவு ரத்தக் களரியாக இருந்தும் இது மெலோடிராமாவாக சொல்லப்படவில்லை என்பது காரணமாக இருக்குமோ என்னவோ. 

தேசத்துரோகியை எழுதியவனின் இலக்கு, தேகங்கள் வெடித்துச் சிதறுவதை விலாவாரியாகக் காட்டுவதில் இல்லை. தேசத்துரோகிகளை அடையாளம் காட்டுவதில் இருக்கிறது. எனவேதான் இது சிறந்த சிறுகதையாகவும் இருக்கிறது. 

நன்றி: அம்ருதா டிசம்பர் 2018