December 31, 2018

திராவிடத்திற்கும் இலக்கியத்துக்கும் என்றைக்குமே எட்டாம் பொருத்தம்தான் என்பதற்கு, தொ.மு.சி. ரகுநாதன் 1959ல் அக்கரைச் சீமையிலே என்கிற சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியிருக்கும் இந்த முன்னுரையே போதும். தொ.மு.சி. ரகுநாதன் பார்ப்பனரல்லர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று தொ.மு.சி. ரகுநாதனின் நினைவுதினம். (அக்டோபர் 20, 1923டிசம்பர் 31, 2001)

அக்கரைச் சீமையில் தொகுப்பின் முன்னுரை 

தமிழில் சிறுகதை இலக்கியம் வளர்ந்தோங்கித்தான் வருகிறது. உலக இலக்கியத்தோடு ஒப்பிடத்தக்க சிறுகதைகளைத் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் படைத்துத்தான் தந்திருக்கிறார்கள். இந்த உண்மையை ஒற்றைப் புதுமைப் பித்தனைக்கொண்டு மட்டும் உடுக்கடித்துக் கூறவேண்டியதில்லை. புதுமைப்பித்தனைப் பொறுத்த வரையில் இத்தகைய கதைகள் அளவில் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஏனைய சில எழுத்தாளர்களுக்கும் இதில் பங்குண்டு என்பதையும் நாம் மறப்பதற்கில்லை. ஆனால் நாம் ஒரு விஷயத்தை மறந்துவிடுவதற்கில்லை. 1930 – 40 ஆண்டுகளுக்கிடையில் சில நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றினார்கள்; 1940 – 50 ஆண்டுகளுக்கு மத்தியிலும் வேறு சில நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் வெளிப் பட்டார்கள். ஆனால் 1950 – 59க்கிடையில் எத்தனை நல்ல சிறுகதை ஆசிரியர்கள் நமக்குக் கிடைத்தார்கள் என்பதை நாம் சிறிது எண்ணிப் பார்த்தால், அவர்களெல்லாம் ஒற்றைக் கைவிரல்களின் எண்ணிக்கைக்குக் கூடப் பூரணமாகத் தேறவில்லை என்ற உணர்வே என்போன்ற இலக்கிய விமர்சகர்களின் உள்ளத்தில் ஏற்படுகிறது. ஏனைய இரண்டு காலகட்டங்களிலும் இல்லாத ஒரு வறட்சி நிலைமை இந்தச் சமீப காலத்தில் நிலவிவந்திருக்கிறது என்பதை எல்லோருமே ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். இதற்கான காரண காரியங்களை இங்கு ஆராய முடியாது. எனினும் இந்தப் பத்தாண்டுகளில் நம்மிடையே நிலவிவரும் பல்வேறு சூழ்நிலைகளை நாம் புறக்கணிப்பதற்கில்லை. அந்தக் காலத்துச் சிறுகதை முன்னோடிகளாக இருந்த எழுத்தாளர்கள் பலரும் “மூத்த குடியாள் காலத்திலே…..” என்று பழம் பெருமை பேசிக்கொண்டு மாஜிப் பெருங்காயப் பாண்டங்களையே மாற்றி மாற்றி முகர்ந்து பார்த்துத் திருப்திப்படுகிறார்கள். வேறு சிலரோ பவணந்தி முனிவர் வகுத்த படிகளைத் தாண்டாப் பத்தினிகளாக இருந்து ‘நல்ல தமிழில்’ – அதாவது ‘கற்பழியாக் கன்னித் ‘தனித்’ தமிழில், இலக்கண சுத்தமான தமிழில் – எழுதிவிட்டால் எதுவும் சிறுகதையாகிவிடும் என்று எண்ணிவருகிறார்கள். அச்சு யந்திரத்தின் அசுரப் பசிக்கு இரைபோடப் பழகிவிட்டவர்களோ, சுட்ட தோசையையே கல்லில் போட்டுச் சூடேற்றிக்கொடுக்கும் உடுப்பி விவகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ சரித்திரக் கதை என்ற பெயரால் சரித்திரமாகவும் இல்லாமல், கதையாகவும் இல்லாமல் ஏதேதோ கதை பண்ணி வருகிறார்கள். வியாபார தந்திரத்தில் வித்தகம் பெற்றவர்களோ, நைலான் நாகரிகத்தையே சிறுகதை இலக்கியத்தின் மரபாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இத்தியாதி இத்தியாதிச்  சூழ்நிலையில் அத்தி பூத்தாற்போல் ஒருசில நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் தோன்றினார்கள். அத்தகைய அத்திப்பூக்களில் ஒன்றுதான் திரு. சுந்தர ராமசாமி.

சுந்தர ராமசாமியின் ‘தண்ணீர்’ என்ற கதை, நான் வெளியிட்டு வந்த ‘சாந்தி’ என்ற மாசிகையின் முதல் இதழில் வெளிவந்தது. அது வெளிவந்தவுடனேயே, நண்பர் தி. ஜானகி ராமன், “சுந்தர ராமசாமி உங்களுடைய New find போலிருக்கிறது? ‘தண்ணீர்’ மிக நன்றாக இருக்கிறது” என்று எனக்கு எழுதியிருந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிக்கு இலக்கணமாக அவரது கூற்று அமைந்தது. ‘தண்ணீர்’ என்ற அந்தக் கதை திருநெல்வேலியிலுள்ள ஒருசில எழுத்தாள நண்பர்கள் சேர்ந்து நடத்திய புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதாகும். கதையைத் தேர்ந்தெடுத்த ஐவர்களும் இலக்கிய உலகில் தத்தமக்கென்று ஒரு இடத்தையும் வாசகர் கூட்டத்தையும் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களது நம்பிக்கையையும் ஆசையையும் பொய்யாக்காமல் சுந்தர ராமசாமி பல்வேறு நல்ல கதைகளைப் பத்திரிகைகளின் மூலம் நமக்கு அளித்து வந்திருக்கிறார். இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் நான் வெளியிட்டு வந்த ‘சாந்தி’பத்திரிகையில் வெளிவந்தவை. இத்தகைய கதைகளை வெளியிட்டதைப் பற்றிய பெருமை எனக்கு உண்டு. ‘சாந்திப் பத்திரிகை என்னத்தைச் சாதித்துவிட்டது – சுந்தர ராமசாமியின் கதைகளை வெளியிட்டதைத் தவிர?’ என்று எனது தோழர் ஒருவரே எவரிடமோ ஆற்றாமைப்பட்டதுண்டு. இது ஒன்றுதான் ‘சாந்தியின் சாதனை என்று கொண்டாலும், இதுவும் ஒரு மகத்தான சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அந்த உண்மையைத்தான் இந்தத் தொகுதி உங்களுக்குப் பறைசாற்றி நிற்கிறது. சுந்தர ராமசாமியின் இந்தக் கதைகள் ‘சாந்திப் பத்திரிகையில் வெளிவந்ததன் காரணமாக, அவரை நான் ‘சாந்தி’ப் பத்திரிகைப் பரம்பரையின் வாரிசு என்று சொல்லும் அளவுக்குச் சுயநலம் கொள்ளவில்லை. பல்வேறு விதமான இலக்கியப் பரம்பரைகளின் வளர்ச்சிப் போக்கிலேதான் ‘சாந்தி’யும் சரி, சுந்தர ராமசாமியும் சரி – தோன்ற முடிந்தது என்று கருதுபவன் நான். இந்த உண்மையைச் சரிவர உணராதவர்கள்தான் தமக்கென்று ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு குடிவாழ எண்ணுவார்கள்.

இந்தத் தொகுதியிலுள்ள ‘தண்ணீர்’ என்ற கதை செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, செக் நாட்டுக் கீழ்த்திசைக் கல்லூரியார் வெளியிடும் ‘நோவி ஓரியண்ட்’ என்ற இலக்கியப் பத்திரிகையில் வெளிவந்தது. அதுமட்டுமல்ல; இதில் இடம் பெற்றுள்ள ‘கோவில் காளையும் உழவு மாடும்’ என்ற கதை செக் நாட்டிலிருந்து வெளிவந்த’உலக இலக்கியம்’ என்ற இலக்கிய மலரிலும் இடம்பெற்றது. தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் சிறுகதைகள் தோன்றி விட்டனவே என்று தோள்தட்டி ஆர்ப்பரிக்கும் வீரம் மட்டும் இருந்தால் போதாது. நமது இன்றைய இலக்கியம் பிற நாட்டார் தலைவணக்கம் செய்வதாக அமையவேண்டும். சுந்தர ராமசாமியின் சிருஷ்டிகள் அந்தப் பெருமைக்கு உரித்தானது தமிழுக்கும் நமக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். ஒவ்வொன்றும் ஒரு உண்மையை, ஒரு உணர்ச்சியை வெளியிடுகிறது. தண்ணீர் லாரியிலுள்ள ஓட்டையை அடைப்பதற்காக, தன் விரலைக்கூட வெட்டித்தரச் சித்தம் கொள்ளும் கிழவியையும், தனக்கும் மானம் உண்டு என்பதை நிரூபிக்கும் பொறுக்கி வர்க்கப் பிரதிநிதியையும், அசார சீலங்களையெல்லாம் தாண்டி நிற்கும் தாய்மைப் பண்பையும், உடம்பின் ரத்தத்தோடு ஊறிவிட்ட உழைப்போடு பாடுபடும் உழவு மாட்டையும், பொருளை மட்டும் சுட்டெரித்துச் சுடுசாம்பலாக்கும் நெருப்பின் மூலம் தனது உள்ளப் புகைச்சலையும், தர்மாவேசத்தையும் கணித்துவிட முயலும் பிஞ்சு உள்ளத்தையும் நாம் இந்தக் கதைகளிலே காண முடியும். இத்தொகுதியிலுள்ள பல்வேறு கதைகளும் வாசகர்களின் உள்ளத்தில் பசுமை குன்றாமல் நின்று நிலவும் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய கதைகளைப் பத்திரிகை வாயிலாக அறிமுகப்படுத்திய காலத்தில் அடைந்த பெருமையையும் மகிழ்ச்சியையும்விட, இவற்றை நூல்வடிவில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் வாய்ப்பை எண்ணி நான் மேலும் மகிழ்ச்சியடைகிறேன். இதே மகிழ்ச்சியை சுந்தர ராமசாமியின் சிருஷ்டிகள் மேலும் மேலும் வாசகர்களுக்கு வரையாது வழங்கிவரும் என்ற நம்பிக்கையும் உறுதியும் எனக்கு உண்டு.

ரகுநாதன்

சென்னை 26.12.59                                                  

நன்றி: காலச்சுவடு