February 22, 2018
திரு. எஸ். ஆர். சுந்தரம் (காலச்சுவடு பதிப்பக உரிமையாளர்) அவர்களுக்கு, 
வணக்கம். 
தங்கள் பதில் கண்டேன். புனைவு என்னும் புதிர் புத்தகத்தை 300 பிரதிகள் அச்சிடப்போவதாக அச்சுக்குப் போகும் முன்பாகவே கூறியிருந்தீர்கள். புத்தகம் வெளியாகி புக்ஃபேரும் தொடங்கியபின்னும் 300 பிரதிகள் அச்சிட்டிருப்பதாய் உறுதிசெய்திருந்தீர்கள். 
புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் 165 காப்பிகள் விற்றிருந்தது. அதில் 70 பிரதிகளை நானே நேரடியாக விற்று உங்கள் கணக்கில் பணமும் செலுத்திவிட்டேன். அதற்குப்பின் 30 காப்பிகள் என் மூலமாகவே விற்று கழிவு போக அதற்குரிய பணத்தையும் காலச்சுவடுக்கு செலுத்திவிட்டேன். இந்த 100 போக மேலும்  20 பிரதிகளைக் கேட்டேன். அவையும் வந்து சேர்ந்துவிட்டன. 
300 பிரதிகளில், இன்னமும் தங்கள் கைவசம் இருப்பவை எவ்வளவு என தெரியப்படுத்தினால், இந்த 20ஐயும் சேர்த்து அவற்றுக்குரிய 40% கழிவு போக தலா 120 ரூபாய் கொடுத்து, நானே வாங்கிக்கொள்கிறேன். என் புத்தகத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. 
எந்த வியாபாரத்திலும் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் ஒப்புக்கொள்ளும்படி போட்டுக்கொள்வதே சட்டரீதியான ஒப்பந்தமாகும். புத்தகம் வெளியாகி பல நாட்கள் ஆகி விற்பனையும் தொடங்கி, புத்தகக் கண்காட்சியும் தொடங்கிவிட்ட விட்ட நிலையில், 11.01.2018 அன்று, eBook உரிமையை நான் தர மறுத்தும். மின்னூல் உரிமை பற்றிய பத்தியை நீக்கச் சொல்லி நான் எவ்வளவு போராடியும் முடியாது காலச்சுவடுக்கே eBook உரிமையும் சொந்தம் என்று நீங்கள் என்னை வற்புறுத்தியதால், புத்தகம் வெளியாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி, என்னுடன் விவாதிக்காது, ஒப்பந்தத்தின் ஷரத்துகளை என்னிடம் வாய் வார்த்தையாகக்கூட தெரிவிக்காமல், நீங்களே உங்கள் லாபத்தில் மட்டுமே குறியாய் வைத்து ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட நேர்ந்தது. 
அமேஸான் eBookகுக்குத் தரும் 70% ராயல்டியில் எனக்கு 33% மட்டுமே கிடைக்கும் என்கிறது உங்கள் ஒப்பந்தம். என்னிடமிருக்கும், புத்தகம்போட நான் உங்களுக்கு மெய்லில் அனுப்பிய word fileஏ அமேஸானில் eBook வெளியிடப்போதுமானது எனும்போது, அமேஸான் eBookல் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லாதபோதும் அதன் உரிமையையும் எழுதித்தந்தாகவேண்டும் என ஒப்பந்தத்தை நீட்டி கையெழுதிடும்படி நிர்பந்திக்கிற உங்களது செயல் மிக மோசமான வியாபார நேர்மையற்ற கொத்தடிமைத்தனமாகும். 
உங்களுக்கு எவ்வித பொருளாதார நட்டமும் ஏற்படாத வகையில் அச்சடித்த 300 பிரதிகளில் மீதமிருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் கழிவு போக தலா 120 ரூபாய்பணம் செலுத்தி வாங்கிக்கொள்கிறேன். அதேசமயம் உங்களுக்கு எவ்விதப் பங்கோ முதலீடோ இல்லாத அமேஸான் eBook ராயல்டியில் 66%ஐ அநியாயமாக நீங்கள் எடுத்துக்கொண்டு நான் நட்டப்படுவதுதான் நீதி என்றி எந்த நாட்டு சட்டமும் கூறாது என்றே நினைக்கிறேன்.
எனவே மேற்படி ஒப்பந்தத்தை இத்துடன் ஒட்டுமொத்தமாக ரத்துசெய்கிறேன். இதைத் தாங்களும் ஒப்புக்கொண்டு பிரிவதே இருவருக்கும் நல்லது.
மிக்க அன்புடனும் நன்றியுடனும் 
விமலாதித்த மாமல்லன்