புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது. கட்டுரைகளில் விவாதிக்கப்படும் கதைகள் ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயே இருப்பது இன்னொரு சிறப்பு. 

இக்கட்டுரைகள் தி இந்து நாளிதழில் தொடராக வெளியானவை.


மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது. பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.


இது, 1980 முதல் 1994 வரை எழுதிய கதைகளின் தொகுப்பு. சத்ரபதி வெளியீடு வழியே வெளியான அறியாத முகங்கள், முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள், உயிர்த்தெழுதல் ஆகிய தொகுப்புகளில் வெளியான மற்றும் புத்தக வடிவம் பெறாத, இடைவெளி பந்தாட்டம் சோழிகள் உட்பட சிறுகதைகள் நெடுங்கதைகள் குறுநாவல்கள் அடங்கிய 30 கதைகளின் தொகுப்பு. உயிர்மை பதிப்பகம் 2010ல் வெளியிட்டது. சத்ரபதி வெளியீடு 2017ல் இரண்டாம் பதிப்பை வெளியிட்டது. 

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில்

சிறுமி கொண்டு வந்த மலர் சிறுகதை, திலீப்குமார் தொகுத்து, Subashree Krishnaswamy அவர்கள் மொழிபெயர்த்து The Flower Brought by the Little Girl என, Westland Publications Limited வெளியிட்டுள்ள The Tamil Story என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலை சிறுகதை, திலீப்குமார் தொகுத்து, Vasantha Surya அவர்களின் மொழிபெயர்ப்பில் Curry Leaf என, Penguin Books வெளியிட்டுள்ள A Place to Live என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வலி சிறுகதை Pain என, Writers Workshop வெளியிட்டுள்ள Modern Tamil Stories என்கிற ஆங்கிலப் புத்தகத்தில் M.S. Ramaswami அவர்களின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளது.


விவகாரத்தின் அறிமுகம்

ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார். அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார். இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர். இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறது. விவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமை, பிராமணீய விழுமியங்கள் மற்றும் அவரது ஜாதீய மனோபாவம் ஆகியவை எல்லோர் பார்வையிலும் படும்படியாக பொதுவெளியில் அம்பலப்படுகின்றன. இது, அவமானத்தையும் தான் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதான எண்ணத்தையும் சின்மயிக்குள் விதைக்கிறது. இந்த விவாதத்தில் பங்குபெற்ற சிலருக்கும் தூர இருந்து கவனித்துக்கொண்டிருந்த முதிர்ச்சியற்ற பல இளம் தமிழ் ட்விட்டர்களிடையேயும் சின்மயி மீதான இளக்காரத்தையும் எகத்தாள மனோபாவத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் இந்நிகழ்வு உருவாக்குகிறது. சின்மயி இவர்களில் பலரையும் தன் வழியில் தன் ட்விட்டுகளில் குறுக்கிடாதபடி தடை செய்கிறார். தடைசெய்யப்படுவதென்பது அவமானகரமான செயல் என்பதால் தடைசெய்யப்பட்டவர்கள் மனதளவில் சின்மயிக்கு எதிரிகளாகிறார்கள். இது இரு சாராருக்கும் இடையே விரிசலாக உருவாகிறது.

இதே சமயம், இலங்கைக் கடற்படையால் மீனவர்கள் கொல்லப்படுவது தமிழக பொது மக்களிடையே கையறுநிலை கொந்தளிப்பை உருவாக்குகிறது. இது தமிழ் ட்விட்டர்களிடையே பிரதிபலிக்கிறது. உலக அளவில் இயங்கும் ட்விட்டரில் அதிகமாக விவாதிக்கப்படும் விஷயமாய் தமிழக மீனவர் பிரச்சனையை ஆக்குவதே மாநில மத்திய அரசுகளின் கவனத்தைக் இந்தப் பிரச்சனை நோக்கிக் குவிப்பதற்கான சிறந்த உத்தி என்கிற எண்ணத்துடன் எழுதப்படும் ட்விட்டுகளின் இறுதியில் #TNFisherman என்கிற TAG இணைக்கப்படுகிறது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 24 ஜனவரி 2011ல் தொடங்கிய சில நாட்களிலேயே ட்விட்டரில் இந்த TAG உலக அளவில் முன் நிலையை நோக்கி முன்னேறத் தொடங்குகிறது. இதனால் உற்சாகமடைந்த தமிழ் ட்விட்டர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இந்த இயக்கத்தில் இணையும்படி பல பிரபலங்களிடம் கேட்கிறார்கள். அது போல சின்மயியிடமும் கேட்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழ் ட்விட்டர்களால் பல முனைகளிலிருந்தும் மடக்கப்பட்ட எரிச்சலில் இருந்த சின்மயி, தமிழ் ட்விட்டர்களால் தொடங்கப்பட்ட இயக்கத்தில் இணைய மறுக்கிறார். இது சின்மயிக்கும் பெரும்பான்மையான இளம் தமிழ் ட்விட்டர்களுக்கும் இடையிலான பிளவாக விரிகிறது.

இரு சாராருமே ஜாடைமாடையாய் நக்கலடித்துக் கொள்ளத்தொடங்கி தொடர்கிறது. தன்னைப் பொதுவெளியில் அவமானப்படுத்தும் இந்த கும்பலுக்கு ராஜனே தலைவன் என்கிற எண்ணம் சின்மயியிடம் ஆழமாக வேரூன்றுகிறது. இதற்குப் பிறகு இளம் தமிழ் ட்விட்டர்களுக்கிடையே செல்வாக்கு பெற்ற ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையிலான தனி நபர் காழ்ப்பாய் மாறுகிறது.

10 மார்ச் 2012ல் மகேஷ் மூர்த்தி என்கிற ஆங்கில பத்திரிகையாளர் ஷேகர் கபூர் தொடங்கி ஐந்து நபர்களை செல்வாக்கு மிகுந்த தனிக் குரல்களாகவும் கேளிக்கையாளர்களாகவும் தேர்வு செய்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாக வெளியிடுகிறார். அந்த பட்டியலில் நான்காவது நபர் சின்மயி ஐந்தாவது நபர் தமிழ் ட்விட்டரும் பிளாகருமான ராஜன்.

அந்த பட்டியலில் ராஜன் பெயர் எப்படி இடம்பெறப்போயிற்று என 11 மார்ச் 2012 அன்று சின்மயி மகேஷ் மூர்த்தியிடமும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையைச் சேர்ந்தவரிடமும் பொதுவெளியில் சண்டைப்போடுகிறார். அவர்கள் எவ்வளவு சமாதானம் செய்தும் சின்மயி ஏற்க மறுக்கவே, ஒரு கட்டத்தில் மகேஷ் மூர்த்தி, உனக்கும் ராஜனுக்கும் இடையில் இருக்கும் சண்டைக்காக என் கணிப்பையெல்லாம் மாற்றிக்கொள்ள முடியாது என்று கூறிவிடுகிறார்.

மகேஷ் மூர்த்தி – சின்மயி உரையாடலில் சின்மயி அவமானப்பட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜனும் அவரது ஆதரவாளர்களும் இதைத் தமது வெற்றியாய் எண்ணி #AsingapattalChinmayi என்கிற TAG போட்டு கொண்டாடத்தொடங்கினர். தமிழ் ட்விட்டர் களேபர பூமியாகிற்று. ராஜனுக்கோ சின்மயிக்கோ இந்தப் பிரச்சனைக்கோ துளியும் சம்பந்தமே இல்லாதக் கலவரக்காரர்கள் இடையில் புகுந்து இதே இறுதி இணைப்புடன் சின்மயியை மிகவும் கேவலமாக வசைபாடினர். இவையாவும் ராஜனின் கைவேலை என்று நம்பிய சின்மயி, போலீசில் போய் புகார் கொடுத்தார். இதை மகேஷ் மூர்த்தியிடமும் கூறினார். இவையெல்லாம் பொதுவெளியில் எல்லோர் பார்வைக்கும் படும்படியாக நிகழ்ந்தவை.

வெசா – சுரா மோதல்: பின்னணி

வெங்கட் சாமிநாதன் சுந்தர ராமசாமி இருவரும் தமிழின் முக்கியமான இலக்கிய முகங்கள். நெடுநாளைய நண்பர்கள். வெங்கட் சாமிநாதன் சமரசமற்ற விமர்சனத்துக்கும் கடுமையான மொழியில் எழுதப்படும் கட்டுரைகளுக்கும் பெயர்பெற்றவர். சுந்தர ராமசாமி தர்க்கபூர்வமான வாதங்களுக்கும் மொழி வீச்சிற்கும் பெயர்பெற்றவர். இருவருமே, சிறுபத்திரிகை வட்டத்துக்குள் எண்ணிறைந்த வாசகர்களை விசிறிகளாகக் கொண்டவர்கள். இருவருமே முதியவர்கள். இருவருமே இன்று நம்மிடையே இல்லை.

2004ஆம் ஆண்டு வெங்கட் சாமிநாதனுக்கு கண்டா நாட்டிலிருந்து இயல் விருது வழங்கப்படுகிறது. வாழ்நாள் முழுக்க வெங்கட் சாமிநாதன் எந்த விருதுமே வாங்கியவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விருது அறிவிப்பு தெரியவந்ததுமே, சுந்தர ராமசாமியும் அவரது துணைவியாரும் நாகர்கோவிலிலிருந்து, சென்னையிலிருக்கும் வெங்கட் சாமிநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

விருது வாங்கிக்கொண்டு வந்தபிறகு, காலச்சுவடு இதழில், வெங்கட் சாமிநாதன் இயல் விருது வாங்கத் தகுதியானவரில்லை என்கிற நுஃமானின் கடிதம் பெட்டிச் செய்தியாக வெளியாகிறது.

சுந்தர ராமசாமி தனிப்பட வாழ்த்திவிட்டு, அவர் தொடங்கிய, அவர் மகன் நடத்தும் பத்திரிகையிலேயே இப்படி ஒரு செய்தியும் வெளிவருவதை வெங்கட் சாமிநாதனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர் கொந்தளித்து, அமுதசுரபி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறார். அதைத் திண்ணை இதழில் வெளியிடவும் செய்கிறார்.

இதற்கு மறுப்பாக சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையை எழுதுகிறார்.

இதற்கு எதிர்வினையாக வெங்கட்சாமிநாதன் தமது தரப்பை முன்வைத்து ஒரு கட்டுரையை வெளியிடுகிறார்.

வெங்கட் சாமிநாதன் எழுதிய முதல் கட்டுரைக்கு சுந்தர ராமசாமி மறுப்பு எழுதிய பின்பும், காலச்சுவடு மற்றும் தம் தந்தை சுந்தர ராமசாமியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கிவிட்டதாகவும் அதற்கு மன்னிப்புக் கோரும்படியும் இல்லையேல் இபிகோ பிரிவு 500ன் கீழ் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் காலச்சுவடு கண்ணன், வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்.

தமது தள்ளாத வயதில் வழக்காட அலைய முடியாது என்பதாலும் இலக்கிய பிரச்சனைக்கு, சட்டரீதியாகத் தம்மால் போராட முடியாது என்றும் அதனால் மன்னிப்புக் கேட்பதாகவும் வக்கீல் நோட்டீஸுக்கு பதில் கூறுகிறார் வெங்கட் சாமிநாதன்.

இவையனைத்தும் திண்ணை இணைய இதழில் இருக்கின்றன.

கி. ராஜநாராயணனின் நிலை நிறுத்தல் அக்டோபர் 1981ல் கணையாழியில் வெளியாயிற்று. அதன் திரைக்கதை வடிவம் நவம்பர் 1991ல் காலம் பத்திரிகையில் வெளியாயிற்று.

சினிமா எல்லோரையும் கவர்ந்திழுக்கிறது. எழுத்தாளன் மட்டும் இதற்கு விலக்காக இருக்கமுடியுமா. எல்லோருமே எதோ ஒரு கட்டத்தில் சினிமாவை எட்டிப் பார்த்தவர்கள்தாம். காசு புகழ் என்கிறக் கவர்ச்சிகளைத் தாண்டி, கலை வடிவம் என்கிற அளவில் சினிமா எழுத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. எழுத்தை அடிப்படையாகக் கொண்டு விரிகிறது. எழுத்து எட்டமுடியாத வீச்சைக் கொண்டிருக்கிறது. எனவே எழுத்தாளனை சினிமா ஈர்ப்பது இயல்பான விஷயம்தான். ஆனால் சினிமாவில் இருந்து பெற்றதைவிட சினிமாவில் சினிமாவால் தம்மை இழந்த எழுத்தாளர்களே அதிகம்.

வெற்றி தோல்வி இரண்டாம்பட்சம். தான் ஒரு எழுத்தாளன் என்கிற அடிப்படையையேக்கூட தகர்த்துவிடுமளவு வல்லமை உடையது சினிமா. சினிமாக்காரனாக ஆகிவிடாமல் தற்காத்துக்கொள்வது எழுத்தாளனுக்கு, குறிப்பாக இலக்கிய எழுத்தாளனுக்கு அத்தியாவசியம்.

இது ஆர்வத்தில் செய்த முயற்சி. ஆர்வமுள்ளவர்களுக்கு எவ்வகையிலேனும் உதவக்கூடுமென்றால் eBookகாக்கிய இந்த முயற்சி அர்த்தமுடையதாக இருக்கும்.

இந்தத் திரைக்கதை வடிவத்தை வெளியிட்ட காலம் இதழுக்கும் நிலை நிறுத்தல் கதையை இந்த eBookகில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கிய கி. ரா அவர்களுக்கும் நன்றி.