December 28, 2018

//ஓக்கே, சீரியசா பேசுவோம்.

சோவியத் ருஷ்யா உடைகிறது. தமிழில் அவர்கள் நடத்திய ‘சோவியத் நாடு’ பத்திரிகையும் நின்று விடுகிறது. எவ்வித ஓய்வுக்கால நிவாரணமும் இல்லாமல், அதில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தொ.மு.சி.ரகுநாதன் நடுதெருவில் நிற்கிறார்.

அப்போது முதல்வர் கலைஞர், சகட்டுமேனிக்கு பத்திரிகையாளர்களுக்கு வீடு வழங்கிக் கொண்டிருந்தார்.

தொ.மு.சி நிலையை சொல்லி, அவருக்கு கலைஞரிடம் வீடு கேட்டு பரிந்துரைக்க சில தோழர்கள், அய்யா நல்லக்கண்ணுவிடம் கோரிக்கை வைத்தார்கள்.

“அய்யோ, ரகுநாதனுக்கா இந்த கதி?” என்று பதறிப்போனார் அய்யா. பதற்றம் மட்டுமே. பரிந்துரை அல்ல. கலைஞரிடம் கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க எந்த வாய்ப்புமே இல்லை.

யார் யாருக்கோ கொடுத்ததை ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு, நியாயமாக கொடுக்க வேண்டிய உரிமையை கொடுத்திருப்பார்.

ஆனால் –

‘நல்ல’ அரசியல்வாதியான நல்லக்கண்ணு, அவர் பார்வைக்கே இதைக் கொண்டுச் செல்லவில்லை.

இதை நேர்மை என்றோ, அறம் என்றோ என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

பல நூறு தொ.மு.சி.கள் அட்ரஸ் இல்லாமல் போனார்கள் என்பதே வரலாறு.

அவசரத்துக்கு கட்சிக்காரனுக்கு ஒரு டிரெயின் டிக்கெட் EQ கூட போட்டுத்தர மனமில்லாதவர்கள் எல்லாம் எம்பி, எம்.எல்.ஏ ஆகி தொகுதி மக்களுக்கு என்னதான் செய்துக் கொடுக்க முடியும்?

அதுக்குதான் சொல்லுறோம். அவங்கள்லாம் அதுக்கு சரிப்பட மாட்டாங்க

***

தனக்கு அரிச்சுவடிகூட தெரியாத விஷயத்திலும் தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக சவால் விடுவதில் தொன்றுதொட்டே திமுகவினருக்கு இணை கிடையாது. இணையத்திலும் அதுதான் நடக்கிறது என்பதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு இது. 

பக்கத்திலிருந்து பார்த்ததுபோல் பேஸ்புக்கில் எழுதிவிட்டால் உளறல் உண்மையாகிவிடாது. 

இதில் இருக்கும் சில அடிப்படைத் தகவல் கோளாறுகளைப் பாருங்கள்.

//சோவியத் ருஷ்யா உடைகிறது. தமிழில் அவர்கள் நடத்திய ‘சோவியத் நாடு’ பத்திரிகையும் நின்று விடுகிறது.//

இந்த மட்டிலும் ஓகே. ஆனால் இதை வைத்துக்கொண்டு இடதுசாரிகளை அடிக்க இந்தத் தொப்புள் திமுக கட்டி எழுப்பும் கோட்டையைத் தட்டிக் கேட்டு இடிக்கத்தான் இணையத்தில் ஆளில்லை.

//எவ்வித ஓய்வுக்கால நிவாரணமும் இல்லாமல், அதில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய தொ.மு.சி.ரகுநாதன் நடுதெருவில் நிற்கிறார்.//

1. சோவியத் நாடு உடைவதற்கு 3 வருடங்கள் முன்பாக 1988லேயே தொ.மு.சி ரகுநாதன் சோவியத் நாடு இதழிலிருந்து பணி ஓய்வு பெற்றுவிடுகிறார். இதைத் தெரிந்துகொள்ள எங்கும் அலைய வேண்டியதில்லை விக்கிபீடியாவே போதும். 

2. சோவியத் உடைந்து சோவியத் நாடு இதழ் நின்றபோது, பென்ஷன் இல்லையே தவிர, 1991ல் கிராச்சுவிடியாகக் கொடுக்கப்பட்ட தொகையே கணிசமானது. திகசி அவர்களுக்கு மாதாந்தர வட்டியாகக் கிடத்தட்ட 40 ஆயிரம் ஈட்டுமளவுக்குக் கொடுக்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோவியத் நாடு யாரையும் நிர்கதியாகத் தெருவில் நிற்கவிடவில்லை. பணியில் இருந்தபோது நடத்தப்பட்ட கெளரவத்துடனேயே அனுப்பியும் வைக்கப்பட்டார்கள். 

3. கருணாநிதியைப் புனித புத்தராக ஏசுவாக அல்லாவாககூடக் காட்டுவது திமுகக்காரனுக்குப் பிறவிக் கடனாக இருக்கலாம் அதற்காக நல்லகண்ணுவையும் தொ.மு.சியையும் பற்றி எதுவுமே தெரியாமல் அசிங்கப்படுத்துவது மகா கேவலம். 

4. எழுத்தாளன் இலக்கியவாதி என்றாலே, அய்யோ பாவம் எல்லோரிடமும் கையேந்தும் பிச்சைக்காரன் என்கிற மனோபாவம் இந்தத் தலைமுறையில் பலருக்கும் இருக்கிறது. தொ.மு.சி ரகுநாதன் வசதியான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது அண்ணன் IAS. ஆகவே தொ.மு.சி ஓய்வு பெற்றதும் நடுத்தெருவில் நிற்காமல் நேராக சொந்த ஊருக்குப் போய் சொந்த வீட்டில் வசித்தார் என்பதே உண்மை. அவரது மகள் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். இதைப் பார்க்க நேர்ந்தால் அவர்களுக்கெல்லாம் எப்படி இருக்கும் என்று கொஞ்சமேனும் சிந்திக்கவேண்டும்.

//தொ.மு.சி நிலையை சொல்லி, அவருக்கு கலைஞரிடம் வீடு கேட்டு பரிந்துரைக்க சில தோழர்கள், அய்யா நல்லக்கண்ணுவிடம் கோரிக்கை வைத்தார்கள்.

“அய்யோ, ரகுநாதனுக்கா இந்த கதி?” என்று பதறிப்போனார் அய்யா. பதற்றம் மட்டுமே. பரிந்துரை அல்ல. கலைஞரிடம் கேட்டிருந்தால் அவர் மறுத்திருக்க எந்த வாய்ப்புமே இல்லை.//

5. ஆகவே, ஓய்வுபெற்ற தொ.மு.சி ரகுநாதனின் நிலையும் அப்படியொன்றும் மோசமில்லை. அவரது இல்லாத  ‘நிலை’க்காக அய்யையோ என்று நல்லகண்ணு பதறியிருக்கவேண்டிய அவசியமுமில்லை. இப்படியொன்ரு நடந்திருக்கவே வாய்ப்புமில்லை. ஆகவே நல்லகண்ணு கலைஞரிடம் கேட்டிருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அப்படியே நல்லகண்ணு கேட்டிருந்தாலும் வீட்டைக் கொடுக்கிற நிலையில் கருணாநிதி 1988ல் முதலமைச்சராகவும் இல்லை. கொடுப்பதாக இருந்தால் பாவம் அவரது கோபாலபுரம் வீட்டையோ அல்லது ஆலிவர் ரோடு இல்லத்தையோதான் கலைஞர் அய்யாவால் கொடுத்திருக்கவும் முடியும். 

இந்த எல்லா பொய்யுமே உண்மையாகவே நடந்திருந்தாலும் தொ.மு.சி ரகுநாதன் என்பவரின் அடிப்படை இயல்புகள் என சில உண்டு. அடிப்படையில் கொஞ்சம் முசுடு என்கிற அளவுக்கு அவர் ரொம்ப ரிசர்வ்ட் டைப். நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே நன்றாகப் பழகுவார். நல்லகண்ணுவே கலைஞரிடம் யாசித்து இருந்தாலும் தொமுசி நிராதரவான நிலையிலேயே இருந்திருந்தாலும் அவர் எவரிடமும் உதவி என்று போய் நின்றிருக்கவே மாட்டார்.

80களில் தொ.மு.சி அவர்கள் கே.கே நகரில் சிவன் பூங்காவிற்கு எதிரில் இருந்த வீட்டில்தான் வசித்து வந்தார். அந்த நேரத்தில் நானும் கேகே நகர் குடியிருப்பில் வசித்து வந்தேன். நான் பச்சையப்பாஸ் மாணவனாக இருந்தபோதே QMCயில் படித்துக்கொண்டிருந்த அவர் மகளைத் தெரியும். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் கல்லூரி ஆசிரியர்கள் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக அண்ணா சதுக்கமெதிரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் எக்மோர் கமிஷ்னர் அலுவலகத்தில் போய் மாலைவரை SIET ஆசிரியைகளுடன் உட்கார்ந்த அனுபவமெல்லாம் உண்டு. அந்தப் போராட்டத்தின் போதுதான் தொ.மு.சி அவர்களின் மகளை சந்தித்தேன். தம் தந்தையை எழுத்தாளர் என்றாவர், பெயரைக்கூட தயங்கிதான் கூறினார். 

80களில் ஒரே ஒருமுறை, தயங்கித் தயங்கி புதுமைப்பித்தனுடன் நேரில் பழகியவர் என்கிற மரியாதை நிமித்தம் அவரை வீட்டில் போய் சந்தித்திருக்கிறேன். 

சோவியத் நாடு பத்திரிகையில் வேலை பார்த்த இன்னொரு பெரியவர், பெஸண்ட் நகர் RBI குடியிருப்புக்கு எதிரில் இருக்கும் தனியார் வரிசை வீடுகளில் ஒன்றில் சொந்த வீட்டில் இருந்தார். அவர் மகன் நான் படித்த அதே சமயத்தில் பச்சையப்பாஸில் Msc கணிதம் படித்துக்கொண்டிருந்தான். மேற்படிப்புக்கு  US போனான். எனவே சோவியத் நாடு பத்திரிகையிலோ அல்லது சோவியத் கலாச்சார மையங்களிலோ வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒன்றும் கஞ்சிக்கு செத்தவர்கள் இல்லை. திமுக குடும்ப ஊடகங்களில் கொடுக்கப்படுவதைப்போல் அது ஒன்றும் கட்டை சம்பளாமாகவும் இருக்கவில்லை. 

க.நா.சுவையும் வெங்கட் சாமிநாதனையும் அமேரிக்கக் கைக்கூலி என்றும் சிஐஏ ஏஜெண்ட் என்றும் இந்த CPI இடதுசாரிகள் அபாண்டமாய் அவதூறு பேசியபோது, சோவியத் நாடு பத்திரிகையில் இவர்கள் சொகுசக இருந்துகொண்டு இதுவும் சொல்லுவார்கள் இன்னமும் சொல்லுவார்கள் என்று எதிர்தாக்குதலுக்கான ஏவுகணைகளாக, தீவிரமான இலக்கிய இளைஞர்களுக்கு இவைதான் பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் இப்போதுபோல் ட்விட்டரும் பேஸ்புக்கும் இல்லாததால் இலக்கியச் சிந்தனை மாதாந்திரக் கூட்டங்களும் எல்.எல்.ஏ பில்டிங் கூட்டங்களுமே வாய்ப்பேச்சுப் போர்க்களங்களாக இருந்தன.

//யார் யாருக்கோ கொடுத்ததை ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு, நியாயமாக கொடுக்க வேண்டிய உரிமையை கொடுத்திருப்பார்.//

அடக் கொடுமையே வாழ்ந்த வள்ளுவரை கொடை வள்ளலாக உயர்த்திக் காட்டுவதற்காக, பஞ்சும் பசியும் தொ.மு.சி ரகுநாதன் பத்திரிகையாளராக ஆகிவிட்டார் பாவம்.

//ஆனால் –

‘நல்ல’ அரசியல்வாதியான நல்லக்கண்ணு, அவர் பார்வைக்கே இதைக் கொண்டுச் செல்லவில்லை.

இதை நேர்மை என்றோ, அறம் என்றோ என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.

பல நூறு தொ.மு.சி.கள் அட்ரஸ் இல்லாமல் போனார்கள் என்பதே வரலாறு.// 

தீர்ப்பெழுதி முடித்தாகிவிட்டது. 

இதற்குபதில் இன்றைய லேட்டஸ்ட் தொப்புளைப் போட்டிருந்தால் இன்னும் நாலு பேருக்குக் கூடுதலாக உபயோகப்பட்டிருக்கும்.

 

ஆர். நல்லகண்ணு யார்