January 2, 2019

ஒமர் முக்தாரில், ஒரு காலைக் கட்டிக்கொண்டு சண்டையிடும் காட்சியைப் போலிருக்கிறது என் நிலை.

விவாதத்தில் என் தரப்பை நிரூபிக்க அல்லது வெல்வதற்காக வெளிப்படையாகப் பேசி வேறொரு பெரிய மனிதரை அவதூறு செய்துவிடக்கூடாதே என்று அவர் பெயரைக்கூட விவாதத்திற்குள் கொண்டுவராமல் எச்சரிக்கையாக பதில் சொல்லியாக வேண்டிய நெருக்கடி எனக்கு.

போகட்டும், தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம். சோவியத் நாடு பத்திரிகையிலிருந்து, 65ஆவது வயதில் ஓய்வு பெற்ற தொ.மு.சி. ரகுநாதனுக்கு, வீடு கேட்டு சிபாரிசு செய்யவில்லை என்கிற பழி பாவத்துக்கு ஆளாகியிருக்கும் ஆர். நல்லகண்ணு யார். ஆள் எப்படி என்று பார்ப்போம். பழைய புராணம் இல்லை. இன்றைய நேற்றைய புராணம். சொல்வதும் பார்ப்பானான நான் இல்லை. இந்த இரண்டு சம்பவங்களையும் எனக்குச் சொன்னவர் பச்சைத் திராவிடர் கடும் தமிழரான எஸ். ராமகிருஷ்ணன்.

***

சென்ற வருட தேசாந்திரி தொடக்க விழாவுக்கு நல்லகண்ணு வந்து சென்றிருக்கிறார். இது எப்படி நிகழ்ந்தது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை என்றால், பரம்பரை திமுகக்காரனால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. 

கூட்டத்திற்கு வருவதற்கு கார் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். 

இல்லையில்லை நானே வந்துவிடுவேன் என்றிருக்கிறார் நல்லகண்ணு. 

ஓலா கால் டாக்சியில் வந்து சேர்ந்திருக்கிறார் நல்லகண்ணு. ராமகிருஷ்ணன் கால் டாக்ஸியை கட் பண்ண ஓட்டுனரிடம் சென்றிருக்கிறார். இல்லையில்லை நான் வந்ததுதானே. அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று மறுத்துவிட்டார். அவருக்குத் துணையாக வண்டியில் அவர் கூட வந்தவர்தான் பணம் கொடுத்திருக்கிறார்.

கூட்டத்தில் பேசிவிட்டுக் கிளம்பினார். சரி அனுப்பி வைக்கவாவது வண்டியை ஏற்பாடு செய்யலாம் என்றால் அதற்கும் மறுத்துவிட்டு அவரே வரவழைத்த கால் டாக்சியில் திரும்பிச் சென்றிருக்கிறார். 

எஸ். ராமகிருஷ்ணன் அழைத்ததன் பேரில் வந்து பேசிவிட்டுச் செல்வதை தன் காரியமாகப் பார்த்தாரேயன்றி அதை ராமகிருஷ்ணனுக்குச் செய்யும் உதவியாகக்கூடக் கருதவில்லை. 

 ***

ஒருமுறை இருந்தார் போலிருந்து நல்லகண்ணுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. 

ராமகிருஷ்ணன், எனக்கு ஒரு உதவி வேண்டும். இன்று ஒரு கூட்டம் இருக்கிறது. அதில் தஸ்தாவெஸ்கி பற்றிப் பேசவேண்டும். எப்போதோ ஜெயிலில் இருந்தபோது தஸ்தாவெஸ்கியைப் படித்தது. இப்போது அவரைப் பற்றிய தகவல்கள் சரியாக நினைவில் இல்லை. அவர் ஏன் சைபீரியாவுக்குப் போனார் என்பது உட்பட கொஞ்சம் சொல்ல முடியுமா. 

தஸ்தாவெஸ்கி பற்றிய, அவர் எப்போது பிறந்தவர் எந்த வருடம் ஏன் சைபீரியாவுக்குப் போக நேர்ந்தது போன்ற தகவல்களை போனிலேயே ராமகிருஷ்ணன்  சொல்லச் சொல்ல குறித்துக் கொண்டிருக்கிறார்.

மறுநாள் இன்னொரு போன் வருகிறது ராமகிருஷ்ணனுக்கு.

சார் நேற்று கூட்டத்தில் உங்களைப் பற்றி நல்லகண்ணு அய்யா அவர்கள் குறிப்பிட்டார் என்று கூறியவர் நடந்தது என்ன என்றும் விவரிக்கிறார். 

தஸ்தாவெஸ்கி பற்றி பேசி முடித்தபின் நல்லகண்ணு கூறியிருக்கிறார். தஸ்தாவெஸ்கி பற்றி நான் கூறியதையெல்லாம் வைத்து ஏதோ எல்லாவற்றையும் நானே படித்துத் தெரிந்துகொண்டு சொல்லிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். இதெல்லாம் காலையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு போன் போட்டுத் தெரிந்துகொண்டவை. அவர் சொன்னதை உங்கள் முன் சொன்னது மட்டுமே நான்.

கூட்டம் எங்கோ ஒரு ஊரில் நடந்திருக்கிறது. அதில் அரைகுறையாகப் பேசிவிடக்கூடாதே என்கிற அக்கறை, அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

அப்படியே எதோ பேசிவைத்தோம் என்று அவர் தமக்குத் தெரிந்ததை வைத்து, பேஸ்புக்கில் நாம் செய்வதைப்போல் பூசி மெழுகி ஒப்பேற்றி இருந்தாலும் அவரை யார் கேட்கப் போகிறார்கள். ஆனால், உனக்காகவே வந்திருந்தாலும் வந்தது நான் தானே, எனவே நான் வந்த கால் டாக்சிக்கான கட்டணத்தை நானே கொடுக்கவேண்டும் என்று எண்ணுவதைப் போலவே என் பேச்சு எனக்குக் கொடுக்கப்பட்ட பணி. அதை முழுமையாகச் செய்யவேண்டியது என் கடமை என்கிற உணர்வு, அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. 

இதையெல்லாம் தாண்டி, நல்லகண்ணு ராமகிருஷ்ணனிடம் பேசியது போனில். அதற்கு சாட்சி யாருமில்லை. கூட்டத்தில் அவர் அந்தத் தகவல்கள் யார் மூலமாகத் தமக்குத் தெரிய வந்தன என்பதைக் கூறியிருக்கவேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. எல்லா கூட்டத்திலும் எல்லோரும் எது எங்கிருந்து கிடைத்தது படித்தது என்பதையெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமா என்ன. பாதிப்பேர் தான் எழுதிய கதை எங்கிருந்து கிடைத்தது என்பதையே சொல்வதில்லை. இதைச் சொல்லாமல் விட்டிருந்தால் பார்வையாளர்களில் ஒரு சிலராவது யப்பா, எவ்வளவு பெரிய படிப்பாளி என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படியொரு பொய்யான பிம்பம் தமக்கு வந்துவிடக்கூடாது என்கிற அளவிற்கெல்லாம் அவர் யோசித்திருப்பாரா என்பது கூட ஐயம்தான். எளிய விஷயம். இதெல்லாம் யார்மூலம் தமக்குத் தெரிய வந்தது என்பதைச் சொல்வது அடிப்படை நாகரிகம் என்று நினைத்ததால்தான், ராமகிருஷ்ணன் பெயரை கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார். 

***

அவரால் முடிந்தது நாகரிகமாக வாழ்வது. அதை அவர் செய்துகொண்டிருக்கிறார். 

நம்மால் முடிந்தது, பின்னணி முன்கதை என எதுவும் தெரியாமல் எதையும் தெரிந்துகொள்கிற அக்கறையும் இல்லாமல் அநாகரிகமாக அவர் மீது சேறு அடிப்பது. அதை பேஸ்புக்கில் நாம் செவ்வனே செய்துகொண்டு இருக்கிறோம். 

தொப்புள் திமுகவும் தொ.மு.சி. ரகுநாதனும்